மக்கள் பாசறை வழங்கும் ‘என் வழி தனி வழி’ நடிகர் ஆர்.கே.வின் அடுத்த படம். ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’ என வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆர்.கே., அதன் பிறகு இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’, பி.வாசு இயக்கிய ‘புலிவேஷம்’ ஆகிய படங்களில் நடித்தார். விஜய்யின் நட்புக்காக ‘ஜில்லா’ படத்தில் தோன்றினார்.
ஷாஜி கைலாஷ்- ஆர்.கே. இணைந்து ‘எல்லாம் அவன் செயல்’ என்ற நூறு நாட்கள் ஓடிய படத்தைத் தந்தனர். மீண்டும் ஷாஜி கைலாஷ் – ஆர்.கே. கூட்டணி ‘என் வழி தனி வழி’ படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் மிகப் பெரும் நடிகப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஆர்.கே. டத்தோ ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமெடிக்கு விவேக், பரோட்டா சூரி, ஹீரோயின்களாக பூனம் கவுர், ‘தெனாலிராமன்’ புகழ் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர்.
காமிராவை ராஜரத்தினம் கையாள, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சூப்பர் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். சென்னை, கேரளா, ஜோர்டான் ஆகிய இடங்களில் என் வழி தனி வழி மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது .
ஹீரோ ஆர்.கே. இதில் போலீஸ் அதிகாரி பாத்திரமேற்றுள்ளார். ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விக்ரம், சூர்யா என அத்தனை ஹீரோக்களும் மிகப் பெரிய கதாநாயகர்கள் அந்தஸ்தை போலீஸ் வேடமேற்று நடித்த பிறகுதான் அடைந்திருக்கிறார்கள். போலீஸ் ஸ்டோரின்னாலே வெற்றிதான் என்பது தமிழ் சினிமா வரலாறு.
‘என் வழி தனி வழி’யில் ஆர்.கே.வின் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியாக வந்து என்ன செய்யப் போகிறது என்பதை புதுமையாக சட்ட ஆதாரத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். “போலீஸ் அதிகாரிகளின் துயரத்தையும் அவர்கள் கடந்து வரும் பாதையும் அவர்களுக்கான விடிவையும் இந்த ‘என் வழி தனி வழி’ பேசப் போகிறது” என்கிறார் ஆர்.கே.
“போலீஸ் அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்து தங்கள் வீடுகளில் இப்படத்தை போட்டுக் காட்டலாம். அவர்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படமாக இது அமையும்…” என்கிறார் இதன் வசனகர்த்தா வி.பிரபாகர். ‘போக்கிரி’ படம் உட்பட பதினைந்து படங்களுக்கு வசனம் எழுதிய பிரபாகர் ‘என் வழி தனி வழி’யின் வசனம் எழுதும் பணியைச் செய்துள்ளார்.
அட்லீனா கேத்ரீனா என்ற ரஷ்யன் மாடல் அந்தரத்திலே தொங்கிக் கொண்டு கயிற்றில் ஆடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர். அவரை வைத்து ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..!









