full screen background image

ராமநாதபுரம் மண்ணின் கதைதான் ‘சேது பூமி’..!

ராமநாதபுரம் மண்ணின் கதைதான் ‘சேது பூமி’..!

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரித்திருக்கும் புதிய படம் ‘சேது பூமி’.

இதில் ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,  ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

DSC_7955

மேலும், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், சிங்கம்புலி, ஜுனியர் பாலையா, ராஜலிங்கம், சேரன் ராஜ், தவசி இவர்களுடன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கேந்திரன் முனியசாமியும் நடித்துள்ளார். 

எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, பாரதி-மோனீஷ் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. அதை நம் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதையாம். 

ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும்தான் இருக்கும். ஏனெனில் அந்தப் பகுதியே வானம் பார்த்த பூமி. விளைச்சலுக்கு வழியில்லாமல் வெக்கையுடன் வாழ்க்கை நடத்தும் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச் சூழலே அவர்களின் குணத்துக்கு காரணமாகியிருக்கிறது. அந்தக் கோபத்திற்கான காரணம், நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறையை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்களாம்.

மனிதன் தனது உறவுகளையும், உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இப்போதைய தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய கேடு என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது என்கிறார் ‘சேது பூமி’ படத்தின் தயாரிப்பாளரான எம்.ஏ.ஹபீப்.01

தயாரிப்பாளர் ஹபீப் தனது சிறு வயது நட்புக்காகவே படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குரிப்பிடத்தக்க விஷயம்.  இந்தப் படத்தில் எப்படி உறவின் மேன்மையான உணர்வுகள் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்டு உள்ளதோ, அதைப் போல நிஜத்திலும் நட்புக்காகவே இந்தப் படத்தைத் தயாரித்து உள்ளார் ஹபீப் . 

நிகழ்ச்சியில் பேசிய  தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப், “இப்படத்தின் இயக்குநரான  கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரது  தந்தை ஆறுமுகத்தேவர் எனக்கு மாமன் போல.  கேந்திரன் முனியசாமியை என்னிடம் அழைத்து வந்த என் நண்பன், ”என் தம்பியை உன்கூட வைச்சு அவனை முன்னேத்திக் கொடு‘ என்றுதான் கேட்டான். நானும் கேந்திரன் முனியசாமியை ஒரு வேலைக்காகத்தான் அழைத்தேன்.  ஆனால் அவரோ ‘சினிமாதான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன்’ என்று என்னிடம் கூறினார். 

சரி  இந்தத் தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும்; இப்படி சினிமாவுக்காக கஷ்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த படத்தை தயாரித்தேன். 

நான் ஒரு நாளும் படப்பிடிப்பு தளம் பக்கமே போகவில்லை. கடைசியாக போன வாரம்தான் படத்தைப் பார்த்தேன்.  எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 

இந்த ‘சேது பூமி’ படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படம்தான்.  தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பாகச் சொல்லியிருக்கும் இப்படத்தின் வெற்றிக்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. காதல், ஆக்ஷன், காமெடி என்று மக்களுக்கு பிடித்த வகையில் முழுக்க, முழுக்க கமர்ஷியலாக  ஒரு நேர்மையான படத்தை நேர்மையான முறையில் தயாரித்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

தொடர்ந்து  படங்கள் தயாரிக்கவும், புதிய புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். நான் மட்டுமின்றி, எனது நண்பர்கள் சிலரையும் என்னுடன் இணைந்து படம் தயாரிக்க சொல்ல இருக்கிறேன்..” என்கிறார்.

DSC_8204

ஹீரோ தமன் பேசும்போது, ”என் தாய் மொழி தமிழாக இருந்தாலும் ரொம்ப காலம் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்த காரணத்தால் ஆங்கிலமே என் மொழி என்று ஆகிவிட்டது. அப்படிப்பட்ட என்னை கொண்டு போய் இப்படி ஒரு கிராமத்துக் கதையில் நடிக்க வைக்க இந்த டைரக்டருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்..? ஆனால் நானே என்னை வியக்கும் அளவுக்கு என்னை சிறப்பாக மாற்றி நடிக்க வைத்தார். இந்தப் படம் எனக்கு மிக திருப்தியைக் கொடுத்தது. கண்டிப்பாக இது வெற்றிப் படம்தான்..” என்றார் நம்பிக்கையுடன்.

படம் குறித்து பேசிய இயக்குநர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, ”எனது முதல் படமான ‘அய்யன்’ நல்ல படம் என்று பெயர் வாங்கியது. ஆனால் ஓடவில்லை.   ‘நல்ல படம் எடுத்தா எல்லாம் இப்படிதான்.  கிளாமர் வேணும். பெண்களை  கவர்ச்சியா காட்டனும்.. அப்பதான் படம் ஓடும்’னு அப்போது எனக்கு ஏகப்பட்ட அறிவுரைகள். பசியில் அப்போ நான் காதடைச்சு நின்னதால, அதெல்லாம் என் காதுல விழவே இல்ல.

 Dir A.R.Kendiran Muniyasami

எனக்கு  இந்தப் படம் எப்படி கிடைச்சது என்பதை   ஹபீப் அண்ணன் மிக அழகாகச் சொன்னார். உண்மையா சொல்றேன். என் திறமைக்கு இந்தப் படம் கிடைக்கல. 

என் அப்பா ஆறுமுகத் தேவர் மேல  ஹபீப் அண்ணனுக்கு இருந்த மரியாதையான பாசம், என் உடன் பிறந்த அண்ணன் மேல ஹபீப் அண்ணனுக்கு இருந்த நட்பு.. இதனால எனக்கு கிடைச்ச படம் இது.

ஹபீப் அண்ணன் ஒரு நாளும் ஷூட்டிங் வந்தது இல்ல. சொல்லப் போனா படம் ஷூட்டிங்கின்போது ஹபீப் அண்ணன் இந்தியாவிலேயே இல்ல.  படத்தை முடிச்சிட்டு பார்க்கத்தான் அவரைக் கூப்பிட்டேன்.  வந்து படத்தைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர் மட்டுமல்ல அண்ணி, அம்மா எல்லாரும் படத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. 

நான் கொடுத்த பணத்தின் செலவுக் கணக்கு நோட்டைகூட  இதுவரை அண்ணன் திறந்து பாக்கல. போன வாரம் என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. மரணப் படுக்கையில் இருக்கும்போது, ‘நீ நல்லா வர்றதுக்குள்ள நான் உன்னை விட்டுட்டுப் போறனே‘ன்னு வருத்தப்பட்டார். அப்போ நான் அவர்கிட்ட ”என்னை நம்பி ஹபீப் அண்ணன் ரெண்டு கோடி ரூபாய் போட்டிருக்கார். இந்த ரெண்டு கொடியும் உங்க மேல அவருக்கு உள்ள மரியாதையால கிடைத்தது. ஆக எனக்கு இந்த ரெண்டு கோடியை கொடுத்ததே நீங்கதான்’னு சொன்னேன். எங்கப்பா இனிமேலும் எனக்கு பலமா இருப்பார்னு நம்புறேன்.  

இந்த படத்தில் ஹீரோ  வழக்கமான சினிமா ஹீரோ மாதிரி   ஆடக் கூடாது. படிச்ச பையன் கிராமத்தில் உள்ளவன்.. எந்த அளவுக்கு  ஆடுவானோ அந்த அளவுக்குத்தான் தமன்  நடனம் ஆடுவார்.  இதை என்னுடைய கேமிராமேன் அழகாக கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எப்படி எடுப்பது என்று எனக்கும் சண்டை பயிற்சியாளர் நாக் அவுட் நந்தாவுக்கும் பெரிய விவாதமே நடந்தது. கடைசியில் நந்தா வைத்த முதல் ஷாட்டே பிரம்மாதமாக இருக்க அவர் இஷ்டத்துக்கே விட்டுட்டேன்.  அந்த சண்டைக் காட்சியில் ஹீரோ தமனும், வில்லன் ராஜலிங்கமும் ஆக்ரோஷமாக நிஜ மோதல் போல ஆக்சன் காட்டி நடித்தார்கள்.

படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. எல்லாவற்றையும் மீறி இந்தப் படம்  ஹபீப் அண்ணனோட குணத்துக்காகவே நல்லா ஓடணும். நிச்சயம் ஓடும்…” என்றார் நம்பிக்கையுடன்.

Our Score