full screen background image

சேர்ந்து போலாமா – திரை முன்னோட்டம்

சேர்ந்து போலாமா – திரை முன்னோட்டம்

பாடல் காட்சிகளில் சில நிமிடங்கள் இடம் பெறும் காட்சிகளுக்காகவே நியூஸிலாந்து செல்வதை பெருமையாகக் கூறுவார்கள். ஆனால் ஒரு முழு தமிழ்ப் படத்தையும் நியூஸிலாந்தில் எடுத்து முடித்திருக்கிறார்கள் அந்தப் படம் ‘சேர்ந்து போலாமா’. 

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் அனில் குமார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற நட்சத்திரங்களை வைத்து ‘கலியுஞ்ஞால்’, ‘குடும்ப விசேஷம்’ ‘பட்டாபிஷேகம்’, ‘பார்த்தன் கண்ட பரலோகம்’, ‘மாந்திரீகம்’, ‘க்ளைமாக்ஸ்’ போன்ற 39 படங்கள் இயக்கியிருப்பவர். ஜெயராமை வைத்தே 10 படங்கள் இயக்கியுள்ளவர். ‘சேர்ந்து போலாமா’ இவரது 40-வது படம்.  இவரது இயக்கத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையான ‘க்ளைமாக்ஸ்’ தமிழில் ‘ஒரு  நடிகையின் கதை’யாக  வெளியானது நினைவிருக்கலாம். 

ஐஸ்வர்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிப்பவர்  சசி நம்பீசன். இவர் நியூஸிலாந்தில் 16 ஆண்டுகளாக வசித்து வருபவர். பூர்வீகம் கேரளா திரிச்சூர் என்றாலும் சென்னையில் இவரது தந்தை சட்டக் கல்லூரியில் பணியாற்றியதால் தமிழ்ப் படங்கள் மீது தீராத காதல் கொண்டவர். அந்தக் கால எம்.ஜி.ஆர், பிரேம் நசீர், அசோக்குமார் படங்களை விரும்பிப் பார்த்தவர். எம்.ஜி.ஆர் படங்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. 

மலையாளியாக இவர் இருந்தாலும் தமிழ்ப் படப் பாடல்கள்  மீது இவருக்கு தீராத மோகம். கரோக்கி பாடகரான இவர் நியூஸிலாந்து நிகழ்ச்சியில் முதலில் பாடிய பாடல் ‘பூவே பூச்சூடவா.’  தமிழ்ப் பாடல் என்றால் இவரை புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட சசி நம்பீசன் தமிழில் முதல் படம் தயாரிப்பதில் வியப்பில்லை. தமிழில் எந்த புது முயற்சிக்கும் வரவேற்பு தருவார்கள் என்றும் அந்த நம்பிக்கையில் இப்படத்தை தயாரித்துள்ளதாகவும் கூறுகிறார். 

இதில் வினய் கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக வரும் மதுரிமா தெலுங்கு, இந்தியில் சில படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் ப்ரீத்திபால் நடித்திருக்கிறார். தெலுங்கில் நாயகனாக வளர்ந்து வரும் நந்துவும் இதில் நடித்துள்ளார். அருண், தம்பி ராமையா, தலைவாசல் விஜய், அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.  60 நியூஸிலாந்து மக்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தம்பி ராமையா ஜோடியாக  நடித்துள்ளதுகூட வெள்ளைக் காரப் பெண்மணிதான்.

இது நட்பை உயர்த்திப் பிடிக்கும் கதைதான் என்றாலும் உள்ளே ஊடாடும் காதலும் உள்ளது. இளைஞர், இளைஞிகள் என ஏழு பேர் நியூஸிலாந்தின் தெற்கு தீவைச் சேர்ந்தவர்கள்.  கால ஓட்டத்தில் அவர்கள் பிரிந்து போகிறார்கள். ஒரு கட்டத்தில் தொலைந்து போன தங்கள் பால்யத்தையும் பிரிந்து போன நட்பையும் தேடிப் புறப்படுகிறார்கள். வடக்கே ஆக்லேண்டிலிருந்து தெற்கு தீவுக்கு பயணப்படுகிறார்கள். இடையில் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆபத்தைக் கடந்து அவர்கள் நட்பு வென்றதா…? அவர்களில் சிலருக்குள் துளிர்விட்ட காதல், தளிர் விட்டு வளர்ந்ததா என்பதுதான் கதை.

தமிழர்கள் வசிக்கும் முக்கிய நாடுகளில் நியூஸிலாந்தும் ஒன்று, இது இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் நாடாகும். இந்நாட்டில் ரொமான்சுக்கு பஞ்சமில்லை.  இங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதி உண்டு.  தமிழ் அசோசியேஷனும் உண்டு. 

நியூஸிலாந்தில் ஆக்லேண்ட் என்பது அழகான நகரமாகும். இது உலகின் 10 அழகிய நகரங்களில் ஒன்றாகும். இப்பெயரில் மாநிலமும் உண்டு. இது நியூஸிலாந்தின் வட பகுதியில் உள்ளது.  இந்நகரத்திலிருந்து சவுத் ஐலண்ட் எனப்படும் தெற்கு தீவுக்குக் கதை நகர்கிறது. இதற்காக சுமார் 500 கி.மீ தூரம் கதையோடு படக்குழுவும் பயணித்துள்ளது. இதற்காக கார், பஸ், ட்ரக், படகு போன்ற வாகனங்களில் மட்டுமல்ல,  கால்நடையாகவும் படக் குழுவின் பயணமும் தொடர்ந்திருக்கிறது. 

நியூஸிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. நகரம், காடு, மலை, அருவி, கடல், மணல்வெளி என்று பல்வேறு புவியியல் அமைப்புகளிலும் கேமரா சுழன்று சுழன்று படப்பதிவு செய்துள்ளது.

ஒளிப்பதிவு– சஞ்சீவ் சங்கர்

இசை– விஷ்ணு மோகன் சித்தாரா

படத் தொகுப்பு—அர்ஜுபென்

கதை திரைக்கதை– ரவி மேத்யூ

வசனம்- ரவிதரன் ராமசாமி

பாடல்கள்- கருணாகரன், தவா

நிர்வாகத் தயாரிப்பு– முத்துக்குமார்

இயக்கம்– அனில் குமார்

தயாரிப்பு– சசி நம்பீசன்

Our Score