“முன்னணி நடிகர்களால்தான் சிறிய படங்களுக்கு பாதிப்பு” – ‘செய்’ படத்தின் விழாவில் சலசலப்பு..!

“முன்னணி நடிகர்களால்தான் சிறிய படங்களுக்கு பாதிப்பு” – ‘செய்’ படத்தின் விழாவில் சலசலப்பு..!

"முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாவதால் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது…" என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் குறிப்பிட்டார்.

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் மன்னு பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’.

இந்தப் படத்தில் நகுல் நாயகனாகவும், ஆஞ்சல் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், பிரகாஷ் ராஜ், மனோபாலா, வெங்கட், சந்திரிகா ரவி, 'பசங்க' சிவக்குமார், மீரா கிருஷ்ணா, யமுனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு - மன்னு உமேஷ், திரைக்கதை, வசனம் - ராஜேஷ் கே.ராமன், கதை, இயக்கம்    -  ராஜ்பாபு, ஒளிப்பதிவு - விஜய் உலகநாத், இசை - நிக்ஸ் லோபஸ், படத் தொகுப்பு - கோபிகிருஷ்ணா V, கலை - ஜனார்த்தனன், சண்டை பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மதன் கார்க்கி, யுகபாரதி, விவேக், ஸ்டில்ஸ் - ஸ்ரீனி மஞ்சரி, மக்கள் தொடர்பு – யுவராஜ், வெளியீடு - சக்தி ஃபிலிம் ஃபாக்டரி.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில  தினங்களுக்கு முன்பு வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர்  நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின்  இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ‘ஜாஸ் சினிமாஸ்’ கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே.ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத் தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

raj babu

விழாவில் படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில், "நான் ஏற்கெனவே மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். திலீப், பிருத்விராஜ், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறேன்.

ஒரு தமிழ் படத்தை இயக்கவேண்டும் என்று ஆசை எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் திரைக் கதையாசிரியரான ராஜேஷை தவிர டெக்னிசீயன்ஸ் எல்லாரும் புதியவர்கள். இவர்களின் சப்போர்ட் எனக்கு எப்படி கிடைக்கும் என்ற தயக்கம் முதலில் இருந்தது. மொழி வேறு பிரச்சினை. எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. ஆனால் கதை விவாதத்தின்போதே எல்லாம் டெக்னிசீயன்களின் சப்போர்ட் கிடைத்தது.

இந்த படம் ஒரு கமர்சியல் பேமிலி எண்டர்டெயினராகத்தான் உருவாகியிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பொதுவாக படத்தின் திரைக்கதையை படமாக்கும்போது இந்த பாடல் காட்சி தேவையா..? இந்த காட்சியில் நூறு துணை நடிகர்கள் தேவை என்று சொன்னால் ஐம்பது பேர் போதுமே..? என்பார்கள்.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான மன்னு இதுவரைக்கும் படத்திற்கு என்ன தேவையோ அதை உடனுக்குடன் செய்து கொடுத்தார். அவருக்கு நான் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து ஆதரவு தாருங்கள்…" என்றார்.

vijay ulaganath

படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் பேசுகையில், "இந்த ‘செய்’ திரைப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். இயக்குநர் மலையாளத்தில் பல படங்களை இயக்கியவர். கடின உழைப்பாளி. திரைக்கதை எழுதிய ராஜேஷ், என்னிடம் கதையை சொல்லும்போது தமிழில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, முழுவதும் மலையாளத்திலேயே சொல்லி முடித்தார்.

அதன் பிறகு ‘யார் இதில் லீட் ரோல் செய்கிறார்கள்?’ என்று கேட்டபோது, ‘நகுல்’ என்று சொன்னார்கள். உடனே நான் பொருத்தமான தேர்வு என்றேன். துறுதுறுவென இருக்கும் கேரக்டர் அது. நகுலுக்கு இந்த படம் ஒரு மைல் கல்தான்.

ஹீரோயின் ஆஞ்சலுக்கு இது முதல் படம். ஆனாலும் முதல் படம் இல்லாமல் நல்ல அனுபவமிக்க நடிகையைப் போல் நடித்தார். தயாரிப்பாளர் மன்னு படத்திற்காக நிறைய நேரங்களில் கமர்சியலாக சிந்திக்காமல், கிரியேட்டீவ்வாக சிந்தித்து சின்ன சின்ன ஐடியாக்களைக் கொடுத்து, இந்த படைப்பை தரமானதாக உயர்த்திருக்கிறார். இதனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பை ஊடகங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆதரவு தாருங்கள்..." என்றார்.

chandrika ravi

நடிகை சந்திரிகா ரவி பேசுகையில், "நான் ஆஸ்திரேலியாவில் பிறந்தேன். அமெரிக்காவில் வேலை செய்கிறேன். இங்கு வந்து தங்கி, படத்தில் பணியாற்றுவதற்கு முதலில் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் படக் குழுவினர் காட்டிய அக்கறையும், அன்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த படத்தில் அனைத்து வகையான உணர்வுகளும் இடம் பெற்றிருக்கிறது. இது ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்..." என்றார்.

aanjal

நடிகை ஆஞ்சல் பேசுகையில், "எனக்கு இந்த திரைக்கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு சந்தோஷமடைந்தேன். ‘செய்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் பணியாற்றுவதற்காக வாய்ப்பளித்த படக் குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.

தயாரிப்பாளர் மன்னு பேசுகையில், "இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தின் திரைக்கதையைச் சொல்லும்போதே எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு அருமையான குழுவினரை தயார் செய்தோம். இது எனக்கு வித்தியாசமான அனுபவமாகயிருந்தது. இந்த படத்தின் மூலம் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கடுமையாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.

திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே.ராமன் பேசுகையில், "இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். தமிழில் திரைக்கதை எழுத வேண்டும் என்றவுடன் முதலில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிக்கான அகராதி ஒன்றை வாங்கி படித்தேன்.

அதன் பின்னர் தமிழில் கதையைச் சொல்ல முயன்றபோது, படத்தில் நடித்த அனைவரும், படக் குழுவினரும் ‘தமிழில் சொல்ல வேண்டாம், மலையாளத்திலேயே சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டனர்.

மலையாளத்தில் பிரபலமான ஒரு பாடலின் பல்லவிதான், இப்படத்தின் சப்ஜெக்ட். மனதிற்கு பிடித்திருந்தால், அது நல்ல விசயம் என்றால், அதற்கு எந்த தடை வந்தாலும், அதனை எதிர்த்து செய்து முடி என்பதே இதன் கதை..." என்றார்.

madhan kaarki

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், "இந்தப் படத்தில் ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் நிக்ஸ் புதுமுகமாக இருந்தாலும் அவரிடம் ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. அதனை அவர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சூஃபி பாடலே சாட்சி.

இது போன்ற பாடலை கம்போசிங் செய்வது கடினம். அதனை நன்றாக செய்திருக்கிறார் நிஸ். இதற்கு யுகபாரதியின் வரிகள் வலிமை சேர்த்திருக்கின்றன. பாடகர் பாடிய விதமும் அருமை. பாடலாசிரியர் விவேக், ஒரு ஃபாஸ்ட் பீட் ராப் பாடலுக்கு தமிழில் வார்த்தைகளை எழுதியிருக்கிறார், அது சவாலானது. அதனை எளிதாக செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்த படத்தில் நான் எழுதிய பாடலின் பின்னணியை இயக்குநர் விவரிக்கும்போது, ஒரு நடிகனுக்கும், இயக்குநருக்கும் உள்ள அன்னியோன்யம் போல் ஒரு காதலருக்கும் காதலிக்கும் இருக்கிறது என்றார். காதலியை இயக்குநராகவும், காதலனை நடிகராகவும் கற்பனை செய்து பாடல் எழுதியிருக்கிறேன்.

இதனை படமாக்கியவிதமும் கவனம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இந்த பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷலும், சோனு நிஹாமும் மொழியை சிதைக்காமல், சரியான உச்சரிப்புகளுடன் பாடியது, இந்த பாடல் மீது அவர்கள் காட்டிய அக்கறை தெரிகிறது.

இந்த பாடல் பதிவின்போது மேற்பார்வையிட்ட கவிஞர் மீராவிற்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் நகுல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும். நடிகர்கள் நடித்தாலும் ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பின்னணியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள்தான். அந்த வகையில் இந்த படத்திற்கு தூணாக இருந்த ராஜேஷ் கே.ராமனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மொழியே தெரியாமல் ஒரு அகரமுதலியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு நீள படத்திற்கு வசனம் எழுதிய அந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

IMG_1694

நடிகர் நகுல் பேசுகையில், "ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் செய். இதில் ‘சரவெடி சரவணன்’ என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் இருக்கும் படம் இது.

படத்தின் இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால், முதலில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கம்போசிங் செய்த பாடலை கேட்டவுடனே நான் தீர்மானித்துவிட்டேன். இவர் வேற லெவலுக்கு உயர்வார் என்று தெரிந்தது. யுகபாரதி எழுதிய, ‘ஊரெல்லாம் என் கட்அவுட் நிக்குமே.. பேப்பரெல்லாம் என்ன அச்சடிச்சி விக்குமே..’ எனத் தொடங்கும் பாடல் ஒரு ஆக்டரா என்னோட பேவரைட். 

‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்த காட்சி படமாக்கப்படும்போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும்போது வியப்பாக இருந்தது. மனதிற்கு திருப்தியாக இருந்தது.

இயக்குநர் ராஜ்பாபு சார் ஸ்பாட்டில் என்ன தேவையோ அதை மனதிற்குள்ளேயே எடிட் செய்து படமாக்கியது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டியது. படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவிற்கு வி.ஐ.பி.கள் என்று யாருமில்லை. படக் குழுவினரும் ஊடகங்களும்தான் இங்கு வி.ஐ.பி. இதற்காகவும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்றார்.

sakthivel

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் பேசுகையில், "இந்த ‘செய்' போன்ற சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவிற்கு நல்லது. மாநிலம் கடந்து, நாடு கடந்து, மொழி கடந்து உள்ளவர்கள் தமிழ் சினிமாவை நம்பி முதலீடு செய்கிறார்கள். வளரும் கலைஞர்களை வைத்து படம் தயாரிக்கும் புதுமுக தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த பணத்தை இன்வெஸ்ட் செய்திருக்கிறார்கள். இவர்களின் படங்கள் பெரும்பாலும் விற்பனையாவதில்லை. அட்வான்ஸ் கிடைப்பதில்லை. மார்க்கெட் பைனான்ஸ் கிடைப்பதில்லை.

நம்முடைய திரைத்துறையில் வாரத்திற்கு ஐந்து படங்கள்வரை வெளியாகிறது. இதில் இரண்டு அல்லது மூன்று படங்கள், இரண்டு முதல் ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்து புதுமுக தயாரிப்பாளர்கள் திரைத்துறைக்கு வருகிறார்கள். இந்த முதலீடு நம்முடைய கலைஞர்களுக்காகவும், தொழில் நுட்ப கலைஞர்களுக்காகவும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. வேறு வேறு தொழிலில் வெற்றிப் பெற்றவர்கள் தமிழ் சினிமாவை நம்பி முதலீடு செய்திருக்கிறார்கள்.

ஒரு படத்தின் வெற்றி மூலம் அரசிற்கு ஜி.எஸ்.டி.யாகவும், வருமான வரியாகவும் கோடிக்கணக்கிலான தொகையை செலுத்துகிறோம். நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் ஒரு படத்திற்கு பல்வேறு வகையிலான வரிகள் மூலம் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை வரியாக செலுத்துகிறார்கள். ஆனால் திரைத்துறை திருட்டு விசிடி மற்றும் பைரசியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதைவிட ஒரு படம் தயாராகி, தணிக்கையாகி, வெளியிடுவதற்கு சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை. இது தற்போது தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

இதற்கு மிக முக்கிய காரணம், முன்னணி நடிகர்களின் திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்களில் திரையிட்டால்தான் வசூலிக்க முடியும் என்ற மாய பிம்பம் இங்கே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தேதியில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒடும் திரையரங்குகளில் முப்பது நாற்பது ரசிகர்களுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம், தவறான புரிதல்தான். இதற்கு விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், தயாரிப்பாளர், ஊடகங்கள், ரசிகர் மன்றங்கள்வரை அனைவருமே காரணம்.

இதற்கு முன் ரசிகர்கள், தனக்கு விருப்பமான நடிகர்கள் நடித்த படம் இத்தனை கோடி வசூலானது என்று சொல்லித் திரிவார்கள். ஆனால் தற்போது தனக்கு விருப்பமான நடிகரின் படங்கள் இத்தனை ஸ்கிரீனில் வெளியாகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள்.

இந்த தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், சரியான படங்களுக்கு சரியான திரையரங்குகளும், சரியான திரைகளும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதே சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும்போது, கூட்டம் குறைவாக இருப்பதால் திரையரங்குகளில் கூட்டத்துடன் பார்க்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இதனால் ரசிகர்களிடம் படம் பற்றிய எண்ணங்கள் சரியான புரிதல் ஏற்படுவதில்லை. இதனால் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் பாதிக்கப்படுகிறது.

இதனால் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகள் கொண்ட திரையரங்குகளை உருவாக்குவதிலும் நடைமுறை சிக்கல் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வாரந்தோறும் தமிழ் சினிமாவை நம்பி கோடி கணக்கிலான ரூபாய் முதலீடு செய்யப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் அவர்கள் வெற்றிப் பெறுவது முக்கியமாகிறது..." என்றார்.