full screen background image

சீசா – சினிமா விமர்சனம்

சீசா – சினிமா விமர்சனம்

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’.

அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார்.

இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

கோவையின் செட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ. ஒரு நாள் அவரது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். நிஷாந்த் ரூசோவும், அவரது காதல் மனைவியான பாடினியும் காணாமல் போயிருக்கிறார்கள். கூடவே அந்த வீட்டில் இருக்கும் சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கும் காணவில்லை லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது.

விடுமுறையில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ் அவசரமாக அழைக்கப்பட்டு இந்த வழக்கை விசாரிக்கப் பணிக்கப்படுகிறார். அவரும் விசாரணையைத் துவக்குகிறார். மாயமான நிஷாந்தையும், பாடினியையும் தேடுகிறது போலீஸ்,

இந்த நேரத்தில் திடீரென்று ஒரு நாள் நிஷாந்த் ரூசோ மட்டும் தனது வீட்டுக்கு வருகிறார். இப்போது அவர் மன நலம் பாதித்த நிலையில் இருக்கிறார். அவருக்குப் பழைய நினைவுகள் இல்லாததால், பாடினியைப் பற்றியத் தகவல்கள் கிடைக்காமல் போகிறது.

நட்டி நட்ராஜ் தனது விசாரணையை முதலிலிருந்து மேற்கொள்ள.. நிஷாந்த்-பாடினி பற்றி பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் என்ன.?. பாடினிக்கு என்ன ஆனது? வீட்டு வேலைக்காரனை கொலை செய்தது யார்? என்பதையெல்லாம் பல திருப்பங்களுடன் கூடிய கிரைம், திரில்லர் படமாக சொல்கிறது இந்த ‘சீசா’ திரைப்படம்.

தொடர்ந்து பல படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வரும் நட்டி நட்ராஜ், இந்தப் படத்தில் கூடுதலான வசீகரத்துடன், வித்தியாசமான நடிப்பு மற்றும் தோற்றத்தில் கவர்கிறார். இடைவேளை பிளாக்கில் இவரது தோற்றமும், பேச்சுமே படத்தின் இரண்டாம் பாதியை ஆவலோடு பார்க்க வைத்திருக்கிறது.

குற்றவாளிகளை விசாரிக்கும்விதம், கூர்ந்து கவனிக்கும்விதம், சக போலீஸாரிடம் பேசும்விதம், பதட்டமில்லாமல் பேசி உண்மையை வெளிக்கொணரும் வித்தை என்று இந்தப் படத்தில் அதிகமாக நம்மைக் கவர்ந்திழுக்கிறார் நட்டி நட்ராஜ். கங்கிராட்ஸ் ஸார்..!

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, ஒரு மன நோயாளியாக பயமுறுத்தியிருக்கிறார். ‘அந்நியன்’ வேடத்திலும், கணவன் வேடத்திலும் மாறி மாறி நடிக்கும்போது கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பாடினிதான் பாவம். மொத்த சோகத்தையும் தாங்கிக் கொண்டு கடைசியில் பரிதாபமாக உயிரைவிட்டு நமது பரிதாபத்தைச் சம்பாதித்துள்ளார். அதே சமயம் பாடல் காட்சிகளில் கொஞ்சுண்டு கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார். 

நிஷாந்த் ரூசோவின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தியின் இயல்பான நடிப்பு நம்மையும் மயக்கிவிட்டது. ஐயோ பாவம் என்று நம்மை சொல்ல வைத்து கடைசியில் நம்மையும் ஏமாற்றியிருக்கும் மூர்த்தியின் நடிப்பு பலே..!

மைத்துனராக நடித்தவரின் சின்ன வில்லத்தன நடிப்பும் பாராட்டுக்குரியது. பாடினியின் தந்தையாக நடித்த அரவிந்த்ராஜ், வேலைக்காரராக நடித்த மாஸ்டர் ராஜநாயகன், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, சித்தியாக நடித்திருக்கும் நிலானி உட்பட பலரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெருமாள் மற்றும் மணிவண்ணனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. ஆனால் இன்னமும் பயமுறுத்தியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்ஸ்களை கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

ஒரு டூயட் பாடல், ஒரு ஆன்மீக பாடல் என்று இரண்டிலும் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சரண்குமார். நானே சிவன்’ பாடல் தெறிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை இரைச்சலாகி படத்தைத் தொடர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.

படத் தொகுப்பாளர் வில்சி ஜெ.சசி, சண்டை காட்சிகளை மட்டும் கச்சிதமாக நறுக்கியிருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், நிஷாந்த் ரூசோவின் மன நோய்க்கு என்ன காரணம் என்பதையும், அதைத் தீர்க்கும் வழியென்ன என்பதையும் தெளிவாகச் சொல்லாமல் மைத்துனரின் கதைக்குப் போங்காக வழிவிட்டிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

இன்னொரு பக்கம் எந்த வகை சூதாட்டமாக இருந்தாலும் சரி.. அது வீட்டையும், நாட்டையும் பாதிக்கும் என்பதையும் அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.  

ஆன்லைன் சூதாட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கிரைம், திரில்லர் ஜானரில் கூடவே குடும்பத்தையும் சேர்த்து, காதலையும் முன் வைத்து, காதல் காட்சிகளையும் சேர்த்து வைத்துக் கொடுத்திருப்பதால் இது என்ன வகையான படம் என்பதிலேயே நமக்குப் பெரும் குழப்பத்தைக் கொடுத்திருக்கிறார்.

எம்பாமிங் செய்வது எப்படி..? எதற்காக செய்கிறார்கள்..? யார் செய்வது..? என்பதையெல்லாம் முதலில் காட்டும்போதே படத்தின் சஸ்பென்ஸூக்கு இதுதான் உதவி செய்யப் போகிறது என்பதை நம்மால் முன்பேயே ஊகிக்க முடிகிறது.

பாடினியின் உடலே கிடைக்காமல் போலீஸ் வழக்கை முடித்து வைப்பதெல்லாம் காதில் பூச்சுற்றும் ரகம். மேலும் இரண்டாம் பாகத்திற்கான லீடில் பாடினியின் உடலை காட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்திற்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.

RATING : 3 / 5

Our Score