“24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகி நாளை விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளிவரும் ‘சீமராஜா’ எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தை பெற்றுத் தரும்” என உறுதியுடன் கூறுகிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியெம்.
‘சீமராஜா’வில் தனது ஒளிப்பதிவு பணி பற்றிப் பேசிய பாலசுப்ரமணியெம், “எனது முந்தைய படங்களைவிட இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டுள்ளேன்.
இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில், இமானின் இசையில், ஏற்கெனவே உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களும் இதேபோன்று கிராமிய பின்னணியில் உருவான படங்கள்தான் என்பதால் இந்த ‘சீமராஜா’வுக்கு ஏதாவதொரு வித்தியாசம் தேவைப்பட்டது.
கதைக் களம் அதே பின்னணிதான் என்றாலும், காட்சி அமைப்பு மிக, மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கேற்ப உழைத்திருக்கிறோம். இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், நான் என படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு உழைத்துள்ளோம்.
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என குவிந்து இருந்த நட்சத்திர குவியல் படத்துக்கு பெரிய அந்தஸ்தை பெற்று தந்து இருக்கிறது. நடிகர்களும் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஓளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.
படத்தை குறிப்பிட்ட காலத்தில், சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததினால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மன களைப்புகூட இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்தது.
இந்த ‘சீமராஜா’ திரைப்படம் பார்ப்போரின் கண்களை மட்டுமின்றி, படம் பார்க்கும் அனுபவத்தையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். படத்தின் முதல் பிரேமில் இருந்து கடைசிவரையிலும் காட்சியமைப்புகள் அனைத்தும் வண்ணமயமாக நிறைந்திருக்கும்…” என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.