ஈழ ஆதரவு போராளிகளின் முகமூடி கிழிந்து கொண்டே போகிறது.. சதவிகித அடிப்படையில் அவரவரின் பார்வையில் ஈழத்திற்கான ஆதரவை குறைத்துக் கொண்டே செல்கிறார்கள் தமிழகத்து ஈழ ஆதரவு அரசியல்வாதிகள்.. இவர்களில் இப்போது சிக்கியிருப்பவர் செந்தமிழன் சீமான்.
‘கத்தி’ படத்தைத் தயாரிப்பது ராஜபக்சே குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய அல்லிராஜா சுபாஷ்கரனின் ‘லைகா’ மொபைல் நிறுவனம்தான் என்பதை ஆவணங்களோடு நிரூபித்த பின்பும், ‘நாம் தமிழர்’ கட்சியின் அமைப்பாளர் சீமான், தனது தம்பிகளான விஜய் மற்றும் முருகதாஸுக்காக லைகா மொபைலை கண்டுகொள்ளாமல் போக முடிவெடுத்துவிட்டார்.
இதற்காக சில வாரங்களாக இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் அத்தனை வழிகளையும் செய்து வருகிறார் சீமான். சீமான் கொடுத்திருக்கும் தைரியத்தில்தான் முருகதாஸும், விஜய்யும் முடிந்த்தை பாருங்கள் என்பதுபோல அமைதியாக இருக்கிறார்கள்.
இரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்திற்கு பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், லைகா மொபைல், கத்தி படம் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை கத்தியால் குத்தாத குறையாக கத்தித் தீர்த்துவிட்டார்.
அவருடைய பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே :
“இது ‘லைகா’-‘லிபரா’ங்கிற இரண்டு பெரும் தொழில் முதலாளிகளுக்கிடையே இருக்கிற பெரும் போட்டி. இதுக்குள்ள போயி ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இழுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது…”
“லைகா மொபைலுக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..? இந்த லைகா மொபைல் லண்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும்தான் இருக்கு. ஒருவேளை அவங்க ராஜபக்ஷேவின் மருமகனோட தொடர்பு வெச்சிருந்தா இந்த லைகா மொபைல் சேவையையே பயன்படுத்தக் கூடாதுன்னு அங்க இருக்கிற மக்கள் போராடியிருக்க வேண்டியதுதானே..? ஆனால் அவங்க ஒண்ணுமே செய்யலையே..?”
“போர் நடந்துக்கிட்டிருக்கும்போது இலங்கை அரசுக்கு அத்தனை தொலை தொடர்பு உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது லட்சுமி மிட்டலுடைய ஏர்டெல் நிறுவனம்தான். அதை எதிர்த்து நாங்க போராடினோம். அவங்களோட சேவையை உடைச்சுப் போட்டோம். ஆனா இன்னைக்குவரைக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர்ன்னு ஒரு டிவில புரோகிராம் நடத்திக்கிட்டிருக்காங்க. அந்த நிறுவனத்தை இங்க என்ன செய்ய முடிஞ்சது…?”
“கத்தி படத்தை எதிர்த்து போராடணும்னா அந்தப் படம் எனது இனத்துக்கும், மொழிக்கும் எதிரா கருத்துச் சொல்லுதான்னு பார்க்கணும். அப்பத்தான் போராட முடியும். தமிழ்நாட்டுல இத்தனை தலைவர்கள் இருக்கும்போது நாம் தமிழர் கட்சியும், சீமானும் மட்டும் ஏன் போராடலேன்னு கேட்கிறீங்க..? இது ஒரு கேள்வியா..?”
“இதுவரைக்கும் உலக நாடுகள்ல இருக்கிற என்னோட உறவுகள் என்ன சிக்கல்னாலும் என்கிட்ட எடுத்துச் சொல்வாங்க. ஆனால் இந்த விஷயத்துல அப்படி யாருமே என்கிட்ட சொல்லலை.”
“மாணவர்கள் அமைப்பு ரெண்டு நாட்கள் போராடுவான். போராடிட்டு போயிருவான். நாங்க ஒரு பெரிய அமைப்பு. இது மாதிரி விஷயத்துல அமைப்பு ரீதியா தலையிடும்போது அது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொறுமையா, நிதானமா, ஆற அமர யோசிச்சு, எப்படிச் செய்யணும், என்ன செய்யணும்… எப்பச் செய்யணும்கிறதை தெரிஞ்சிதான் செய்ய முடியும். பல பேர்களை கலந்து பேசித்தான் எதையும் செய்ய முடியும்.”
“சுபாஸ்கரன்கிட்ட நாங்க விளக்கம் கேட்டிருக்கோம். அவர் சரியான விளக்கம் சொல்லணும். அதுக்குப் பிறகுதான் நாம போராட முடியும். படக்குன்னு வந்து போராட முடியாது.”
“நீங்களும் லைகா கம்பெனிக்கு ஒரு படம் இயக்கப் போறதா சொல்றாங்களே..?”
“அப்படின்னா நீங்களே பேசி எனக்கு ஒரு படம் வாங்கிக் கொடுங்க…”
“இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், விக்ரமனும் சொன்னாங்களே..?”
“ஏங்க படம் இயக்கப் போறது நான்… நானே இல்லேங்கிறேன். நீ ஆர்.கே.செல்வமணி சொன்னாருன்னு சொல்ற… ஆர்.கே செல்வமணியா டைரக்டரு…?”
“நீங்க கத்தி படத்தை ஆதரிச்சி பேசினதா செய்திகள் வந்திருக்கு…?”
“என்ன பேசினேன்…? இப்போ உனக்கு என்ன வேணும்கிற…? கத்தி படத்தை நான் எதிர்க்கணும்… அவ்ளோதானே…? முடியாது.. என்னச் செய்யப் போற..? என்னய்யா இப்படி பேசிக்கிட்டிருக்கிற…? லட்சம் பிரச்சனையை கையில வெச்சு போராடிக்கிட்டிருக்கோம். நீ கத்தி பிரச்சனையைப் பத்தி பேசிக்கிட்டிருக்க..?”
என்று சொன்னவர் கேள்வி கேட்ட நிருபரை “தம்பி நீ யாரு.? நீ யாரு..?” என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
பாவம் ஈழத் தமிழர்கள்.. சொந்த நாட்டில் உடனிருந்த இன்னொரு இனத்தவர் செய்த துரோகத்தைவிட, சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களால்தான் அவர்கள் அதிக துரோகத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று..!
சீமானின் பேட்டி வீடியோ இதுதான் :
நன்றி : Redpix 24/7.com