இந்தப் படத்தை தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார், இருவரும் அரவிந்த் ஷெட்டியுடன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சீதாராம் வேடத்தில் விஜய ராகவேந்திரா, செபஸ்டியன் கதாப்பாத்திரத்தில் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சீதாராமனின் அக்காவாக உஷா பண்டாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம் : தேவிபிரசாத் ஷெட்டி, தயாரிப்பாளர் : தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார், இணை தயாரிப்பாளர்: அரவிந்த் ஷெட்டி, வழங்குபவர் : பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”, ஒளிப்பதிவாளர்: ஹேமந்த், இசை : நவனீத் ஷாம், படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா, கலை : பவானி ஷங்கர் அனேகல், VFX : பிரஷாந்த், ஒலிப்பதிவு : ஷிபின் நடுவீட்டில், கலரிஸ்ட் : லீஜு பிரபாகர், புகைப்படங்கள்: கௌரி சங்கர், போஸ்டர் டிசைன் : அஸ்வின் ரமேஷ், மார்க்கெட்டிங் டீம் : ஸ்ரீவத்சா பி.எம்., பத்திரிக்கை தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ்.
கடந்த சில வருடங்களாகவே கன்னட சினிமாவில் ஒரு புதிய அலை அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த அலையினால்தான் கன்னட சினிமா கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்துவிட்டது. பல கமர்சியல் திரைப்படங்களையும் தாண்டி சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர் திரைப்படங்களிலும் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளது கன்னட சினிமா.
வெறும் இரண்டு மணி நேரத்தில் மொழி, கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி அனைத்து மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுக்கிறது கன்னட சினிமா உலகம்.
அப்படி இந்த வாரம் கன்னட சினிமாவில் வெளிவந்த இந்தப் படம் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஹீரோவான விஜய ராகவேந்திரா, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் சொந்த தங்கை மகன். கன்னடத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குநரான தேவி பிரசாத் செட்டி ஏற்கனவே இதே விஜய ராகவேந்திராவை வைத்து 2021-ம் ஆண்டு Seetharam Benoy Case No:18 என்ற படத்தையும், 2024-ம் ஆண்டில் Case Of Kondana என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இது முந்தைய இரண்டு படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.
இன்ஸ்பெக்டர் சீதாராம் என்ற விஜய ராகவேந்திரா கர்நாடகாவில் உடுப்பியின் அருகில் இருக்கும் ஆனகோட்டம் என்ற போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய ஸ்டேஷன் லிமிட்டுக்குள் அன்றைக்கு ஒரு கொலை நடந்துள்ளது. அதிலும் மிகக் கொடூரமான வகையில் நடந்திருக்கிறது. ஒரு ஆண் கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் முழுவதும் கம்பி வலையால் கட்டப்பட்டு இருக்கிறது. 56 இடங்களில் அவருடைய உடலில் கம்பியால் குத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.
இதை விசாரணை செய்வதற்கு உள்ளாக அடுத்தடுத்து சில ஆண்கள் இதேபோல கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர், “ஒரு மிகக் கொடூரமான சைக்கோ கொலையாளிதான் இதை செய்து வருகிறான்” என்று ஆணித்தரமாக சொல்கிறார்.
விஜய் ராகவேந்திரா தன்னால் முடிந்த அளவுக்கான விசாரணையை முடுக்கிவிட்டு பார்த்தும், கொலையாளி யார் என்று தெரியாமலேயே இவரா.. அவரா.. அவரா.. இவரா.. என்ற ரீதியிலேயே விசாரணை செல்கிறது.
கொலை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு பெண் குழந்தை இருப்பதும், அந்த பெண்கள் வாய்ப் பாட்டு கற்றுக் கொண்டிருப்பதும் ஒரு துப்பாக விஜய ராகவேந்திராவுக்கு கிடைக்கிறது. அதேபோல் இத்தொடர் கொலைகளில் ஒரு மரச் சட்டத்தால் செய்யப்பட்ட வீணை, ஒரு முக்கிய சாட்சியாக அமைந்திருக்கிறது.
இதை வைத்து கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கும் இடத்தில் விஜய ராகவேந்திராவின் அக்கா கணவரும் கடத்தப்படுகிறார். தன்னுடைய குடும்பத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடந்துவிட்டதை அடுத்து விஜய ராகவேந்திரா முழு வீச்சோடு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபடுகிறார்.
கடைசியாக அவர் குற்றவாளியை கண்டு பிடித்தாரா.. இல்லையா.. யார் அந்தக் குற்றவாளி.. எதற்காக இந்தக் கொலைகள்… என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
மர்டர், கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் என்ற திரைப்படங்களுக்கு உரித்தான விறுவிறுப்பான திரைக்கதையில் இந்தப் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் செட்டி.
அமைதியான, சாந்தமான குணம் கொண்டிருக்கும் விஜயராகவேந்திரா, மிகப் பெரிய கொடூரமான மனம் கொண்டவரோ அல்லது ரொம்பவும் இளைய மனம் கொண்டவரோ இல்லாமல் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தனி மனிதனாக இந்த வழக்கை அவர் தொடர்ந்து விசாரிக்கப் போகும் பொழுது கிடைக்கின்ற ஒவ்வொரு சாட்சியத்தின்போதும் தன்னுடைய உடல் மொழியாலேயே தன்னுடைய நடிப்பினை காண்பித்திருக்கிறார்.
விஜய ராகவேந்திராவின் அமைதியான குணம், போலீசை எள்ளி நகையாடும் வெளிப்புற ஆட்கள் போலீசை கிண்டல் செய்யும்விதமும் குற்றத்தை கண்டுபிடித்து தீர வேண்டும் என்று அவர் காட்டுகின்ற முனைப்பும் சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய புறக்கணிப்புமாக அவருடைய நடிப்பு, இந்தப் படத்தை கடைசிவரையில் நம்மை பார்க்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் கொலை செய்யப்படும் நபர்களாக நடித்தவர்களும், சந்தேகப்பட்ட பிடிபடும் ஒரு இளைஞனும், அவருடைய அக்காவும்…. பெயர் தெரியாவிட்டாலும் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அதிலும் கொலையாளியின் பிளாஷ்பேக் கதையில் சொல்லப்படுகின்ற அந்த விஷயம் நிச்சயம் நம் மனதை தொடுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு சிறுவன் எதிர்காலத்தில் எப்படி ஒரு சைக்கோவாக மாறுவான் என்பதை இந்தப் படத்தில் கோடிட்டு காட்டி இருக்கிறார் இயக்குநர்.
அந்த சிறுவனும் அவன் வளர்ந்து இப்போது இளைஞனாக இருக்கும்போது காட்டுகின்ற அந்த வெறித்தனம் நிச்சயம் நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் இது போன்ற கதைகளில் சிறுபிள்ளைதானே என்று நாம் விட்டுவிடக்கூடாது. அவர்களின் மனதை சாந்தப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு சிறிய அறிவுரையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியை செய்திருப்பவர் படத்தில் ஒளிப்பதிவாளர் ஹேமந்த்துதான். அட்டகாசமான ஒளிப்பதிவினை ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு கொலை சம்பவத்தையும், வித்தியாசமான இடங்களில், வித்தியாசமான கோணத்தில் காட்டி கேமரா அந்தக் இடத்தை காண்பிக்கும் பொழுது பின்னணியில் இசையமைப்பாளர் நவ்னீத் ஷாம் தன்னுடைய மிகச் சிறப்பான இசையையும் கொடுத்து இருப்பதால் இசையும், ஒலிப்பதிவு சேர்ந்து இந்தப் படத்தை கடைசிவரையில் நம்மைப் பார்க்க வைத்திருக்கிறது.
சில ட்ரோன் ஷாட்களும், சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக அதிகம். அதேபோல் இந்தப் படத்தின் ஒரு சாட்சியாக வீணை இருப்பதால் அந்த வீணையை காட்டுகின்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசையில் வீணையை இசைக்க வைத்திருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று. அந்த வீணை இசையே படத்தை மேலும் ரசிக்க வைத்திருக்கிறது.
இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் தங்களுடைய பங்கை செய்த பின்பு படத் தொகுப்பாளர் தானும் ஒரு மிகப் பெரிய உதவியை இயக்குநருக்கு செய்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் என்கின்ற இரண்டு விஷயங்களும் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசி வரையில் எள்ளளவும் மாறிவிடாத அளவுக்கு ஒரு இறுக்கமான வகையில் படத் தொகுப்பினை செய்து இருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
இந்தப் படத்தில் ஹீரோயிசம் இல்லை. காதலும் இல்லை. காமெடியும் இல்லை. விரசமான காட்சிகளும் இல்லை. ஆனால், இருப்பது மனதை தொடுகின்ற ஒரு கதை. அதன் பின்னணியில் நிகழ்ந்த ஒரு மனிதனின் கோபம். இதன் விளைவாய் நிகழும் மரணங்கள். அந்த மரணங்களை தேடப் போக ஒரு வழி கிடைக்கிறது. அந்த வழியில் உள்ளே சென்றால் அது வேறொரு வழியை காட்டுகிறது.
இப்படி ஒவ்வொரு இடத்திலும் போகப் போக கதை விரிவடைந்து கொண்டே போனாலும் எந்த கதையும் பொய்யாக இல்லை. நிஜமாகவே இயக்குநர் நம்முடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றது போலத்தான் இந்தப் படத்தின் திரைக்கதை நகர்கிறது.
கொலையாளிக்கு இருக்கும் ஒரு உளவியல் பிரச்சனை அவனை எந்தவிதத்தில் அலைக்கழிக்கிறது என்பதையும் அதனால் அவன் செய்கின்ற இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தாவிட்டாலும் அவனை மீறிய செயலாகவே அது காட்டப்பட்டிருக்கிறது.
அவனுடைய காட்சிகளை பார்க்கும்பொழுது ஒரு மாதிரியான பயம் நமக்குள் எழுந்ததை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி.
இந்தப் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்வதுபோல நமக்குத் தோன்றினாலும் ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து வேறு, வேறு தளங்களுக்கு நகர்ந்து செல்வதால், முழு படத்தையும் நம்மால் ரசித்து பார்க்க முடிந்திருக்கிறது.
இதற்கெல்லாமா கொலை செய்வார்கள் என்று நாம் நினைத்து சாதாரணமாக கேட்டுவிட்டு போய்விடக் கூடாது என்கின்ற அளவுக்கு இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அவருடைய திறமைக்கு நமது மிகப் பெரிய பாராட்டுக்கள்!
RATING : 4.5 / 5









