full screen background image

“மனசாட்சியே இல்லாமல் ‘படம் சூப்பர்’ என்று பொய் சொல்லியிருக்கிறேன்..” – சத்யராஜின் ஓப்பன் டாக்..!

“மனசாட்சியே இல்லாமல் ‘படம் சூப்பர்’ என்று பொய் சொல்லியிருக்கிறேன்..” – சத்யராஜின் ஓப்பன் டாக்..!

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி இசையமைக்கும் படம் ‘இசை’. இது இசையமைப்பாளர் சம்பந்தப்பட்ட கதையும்கூட. இதில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பையா தயாரித்துள்ளார்.

‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Isai Movie Audio Launch Stills

நிகழ்ச்சியில் ‘திருட்டு கதை’ இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, “எஸ்.ஜே.சூர்யா சாரை பற்றிப் பேசினால் ஒரு சீரியல் அளவுக்குப் பேச முடியும். 17 ஆண்டு கால நட்பு எங்களுடையது. ‘குஷி’ படத்தில் அவருடனும், விஜய் சாருடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் ‘கத்தி’ எனக்கு  விஜய் சாருடன் மூன்றாவது  படம்.

கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யா சாரின் திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது அவரை மனதில் வைத்துக் கொண்டு தான் உருவாக்குவேன். அவரது இசையார்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார். பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு  தானே பாடுவார்.

‘முத்து படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை எஸ்.பி.பி. குரலை எடுத்துவிட்டுப் அவர் பாடுவார். அவருக்கு தன் மீது அவ்வளவு நம்பிக்கை.  ஹீரோ ஆன பின் ‘சர்க்கர இனிக்கிற சக்கர’ அதே எஸ்.பி.பி. இவருக்காக பாடியது பின்னர் நடந்தது.

‘கத்தி’ படப்பிடிப்பில் ‘இசை’ படம் பற்றி விஜய் சாரிடம் கூறினேன். அவர் ‘சூர்யா சாரின் படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. எனக்கும் அந்தப் படத்தை ஆவலாக இருக்கிறது’. என்றார். அதுவும் சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறதுன்னு சொன்னார்..” என்றார் முருகதாஸ்.

சத்யராஜ் பேசும்போது, “நான் என் கேரியரில் 2 படங்களில் நடிக்க மறுத்தது உண்டு. ஒன்று ‘அமைதிப்படை.’ இன்னொன்று’ இசை.’ கதை கேட்டவுடன் என் முடிவை இரண்டு படங்களுமே மாற்றியது.

75 படங்களில் வில்லனாக நடித்துவிட்டு பல அசௌகரியங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு கதாநாயகனான பின்னர்  மணிவண்ணன் சார் ‘அமைதிப்படை’ யில் வில்லனாக நடிக்க அழைத்தார். மறுத்தேன். படத்தின் கதை, என் கேரக்டர் பற்றி எடுத்துச் சொன்ன பிறகு என் முடிவை மாற்றிக் கொண்டு நடித்தேன்.

அதே போல ‘இசை’யில் வில்லன் என்றதும் முதலில் தட்டிக் கழித்தேன். தவிர்க்க நினைத்தேன். பின்பு கதை, என் கேரக்டர் பற்றிச் சொன்னதும் என் முடிவு மாறியது. சூர்யாவே நடிப்பது பற்றி தெரிந்தவுடன் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே.. இவரே கதாநாயகனாக நடிக்கிறாரே என்று நினைத்தேன். நாலாவது நாள் அவருடன் நடிக்கும்போது அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன்.

எவ்வளவோ படம் பார்த்துவிட்டு ‘படம் சூப்பர்’ என்று மனசாட்சியே இல்லாமல்  பொய் சொன்னதுண்டு. இது நிஜமாகவே நல்ல படமாக வரும். முற்றிலும் புதுமையான கதை. புதுமையான காட்சிகள். கதை பிடித்திருந்தாலும் எனக்குள் ஒளிந்திருக்கும் திருடன் மூலம் சம்பளத்துக்கு பேரம் பேசினேன். அவரும் கேட்டதைக் கொடுத்தார்…” என்றார்.

தனுஷ் பேசும்போது, “நான் ப்ளஸ் ஒன் படித்தபோது ‘குஷி’ படத்தை ரோகிணி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய் சார், சூர்யா சார் உடன் நான் அமர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது.

சூர்யா சார் பேசுவதே பாடுவது மாதிரிதான் இருக்கும், அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவரது படங்களில் அவரது இசை ஞானம் தெரியும். அவர் இயக்கிய படத்தின் பாடல்களைக் கேட்டால், இசை ஆர்வத்துடன் இசையைக் கேட்டு வாங்கியிருப்பது தெரியும். இன்றைக்கு ஆர்வமும், நம்பிக்கையும் இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்பதை சூர்யா ஸாரும் நிரூபித்திருக்கிறார்..” என்றார்.

Our Score