இன்று கர்நாடகாவில் வெளியாகவிருந்த அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டப்பிங் படத்திற்கு எழுந்த திடீர் எதிர்ப்பினால் படம் திரையிடப்படவில்லை என்று பெங்களூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
2015-ம் ஆண்டு அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேன்ன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இத்திரைப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு, இன்று கர்நாடகாவில் 60-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவதாக இருந்த்து.
கர்நாடகாவில் ஏற்கெனவே வேற்று மொழி படங்களும், டப்பிங் படங்களும் வெளியாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இந்த ‘என்னை அறிந்தால்’ படத்தை ‘சத்யதேவ் ஐ.பி.எஸ்.’ என்கிற பெயரில் தைரியமாக டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர்.
அஜீத்திற்கு கர்நாடக தமிழர்களிடையே இருந்த கிரேஸை பயன்படுத்த நினைத்த விநியோகஸ்தர்களும், சில தியேட்டர் அதிபர்களும் இதற்கு ஒத்துக் கொள்ள.. படத்திற்கு டப்பிங் செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து இன்றைக்கு ரிலீஸாவதாக பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுக்கப்பட்டிருந்த்து.
இந்த நேரத்தில் கன்னட மொழி அமைப்பின் தலைவர்களாக இருக்கும் வாட்டாள் நாகராஜ் மற்றும் ஜக்கீஷ் இருவரும் “இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டால் அந்த தியேட்டர்களை கொளுத்திவிடுவோம்…“ என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தார்கள்.
இதனால் இன்று காலையிலேயே இந்தப் படத்தை திரையிடும் தியேட்டர்களில் போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. கூடவே மோதல், போராட்டங்களை தவிர்க்கும்பொருட்டு படத்தினை திரையிடுவதை ஒத்தி வைக்கும்படி தியேட்டர்காரர்களை அரசுத் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டதால், கடைசி நிமிடத்தில் படம் ரிலீஸ் இல்லை என்று அறவித்திருக்கிறார்களாம்.
இது குறித்து ஜக்கீஷ் டிவீட்டரில் வெளியிட்ட செய்தியில், “இந்தப் படத்திற்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட இளைஞர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இவர்கள்தான் கர்நாடகவின் உண்மையான போர் வீரர்கள். சமூக வலைத்தளங்களில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கமெண்ட் செய்யும் மற்றவர்களை போல இவர்கள் இல்லை. தைரியமாக தியேட்டர்களுக்கு நேரில் சென்று படத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் முதல்முறையாக ஒரு டப்பிங் படம் கர்நாடகாவில் வெளியாக இருந்த்து. அதுவும் தோல்வியடைந்துவிட்டது.
கன்னட சினிமாவுலகத்தின் அறிவிக்கப்படாத ஒரு தடை உத்தரவின்படிதான் இந்த டப்பிங் படங்களை இப்போதுவரையிலும் கர்நாடகாவில் திரையிட முடியாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.