“திரையுலகில் இளைஞர்களை ஊக்குவிக்கிறார் நடிகர் விஜய்…” – ‘சத்யா’ வெற்றி விழாவில் சிபிராஜ் பேச்சு 

“திரையுலகில் இளைஞர்களை ஊக்குவிக்கிறார் நடிகர் விஜய்…” – ‘சத்யா’ வெற்றி விழாவில் சிபிராஜ் பேச்சு 

நடிகர் சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் நடிகர் சிபிராஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘சத்யா’ படத்தின் வெற்றி விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் சிபிராஜ், நாயகி ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் K.கிங் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் அறிவழகன், 'ஷணம்'(தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG_3768

இந்த விழாவில் நாயகன் சிபிராஜ் பேசும்போது, "இந்த ‘சத்யா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்  ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும், படத்தை பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிட்டிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

என்னுடைய நடிப்பை கேலி செய்து இதே படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும்போது அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள். இணையத்தில் வெளிவந்த அனைத்து விமர்சனங்களையும் நான் படித்தேன். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

sibiraj

இங்கே வந்துள்ள நடிகர் ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ‘ஷணம்’ படத்தைத்தான் நாங்கள் தமிழில் ‘சத்யா’வாக ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

விஜய் அண்ணா ‘சத்யா’ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் அழைத்து பாராட்டினார். மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை…" என்றார் சிபிராஜ்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசும்போது, "இந்த ‘சத்யா’ திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.

varalakshmi

இந்த வருடத்தில் ‘விக்ரம் வேதா’, ‘சத்யா’ என எனக்கு இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ளள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

‘சேவ் சக்தி’ அமைப்பு விஷயமாகத்தான் நான் முதல்வரை சந்தித்தேன். அதில் எந்த அரசியலும் இல்லை. நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும்போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் கட்சியில்கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்ட்டியில்தான் உள்ளேன்.

இப்போதைக்கு திருமணம் பற்றியும் நான் யோசிக்கவே இல்லை. திரையுலகிலும், பொது வாழ்க்கையிலும் நான் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கு. அதனால் திருமணப் பேச்சு என்பது இப்போதைக்கு இல்லை.." என்றார் வரலட்சுமி சரத்குமார்.

மற்றும் வெற்றி விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் பேசினார்கள்.