full screen background image

சதுரங்க வேட்டை – சினிமா விமர்சனம்

சதுரங்க வேட்டை – சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென்று ஊர், ஊருக்கு அடகு கடைகளும், பர்னிச்சர் கடைகளும் முளைத்தன. மாதாமாதம் பணம் கட்டினால் வருடக் கடைசியில் அவர்கள் கட்டிய தொகையையும் தாண்டி 24 சதவிகதம் வட்டியோடு ஏதாவது ஒரு பொருளை கடையில் இருந்து அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்..

நம்ம மக்கள் ஓசியில் பினாயிலை கொடுத்தாலும் வாங்குபவர்கள்.. விடுவார்களா..? பணத்தைக் கட்டி குவித்தார்கள்.. அந்த கடைக்காரர்களும் வருடக் கடைசியில் ஒரு நாள் இரவில் கடையையே காலி செய்துவிட்டு ஓடினார்கள்.. இப்படி பல ஊர்களிலும் இப்படியொரு பர்னிச்சர் கடை, அடகு கடைகள் முளைத்து மக்களை ஏமாற்றின..

பல பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதியும் மக்கள் ஏமாறுவதை நிறுத்தியபாடில்லை.. ஏமாறுபவன் மாறினால் ஒழிய ஏமாத்துறவன் நிறுத்த மாட்டான் என்பதை போல அதற்கடுத்து பலவித மோசடிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களே ஈடுபட்டு நம் மானம் காத்தார்கள்..

அந்த மோசடி தமிழர்களில் ஒரு கூட்டத்தைத்தான் இந்தப் படத்தில் உரித்துக் காட்டியிருக்கிறார்கள்..

முதலில் மண்ணுள்ளி பாம்பை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள விஷமுள்ள பாம்பு என்றும், வீரிய சக்தி கொண்டது என்பதால் வெளிநாட்டில் இதற்கு செம கிராக்கி என்றும் சொல்லி இளவரசுவிடம் பணம் பறிக்கிறார்கள்.. அடுத்து எம்.எல்.எம். கம்பெனியை துவக்கி கலெக்சனோடு எஸ்கேப்பாகிறார்கள்..

போலீஸில் பிடிபட்டு புகைப்படத்தின் மூலம் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற…. தமிழகம் முழுவதிலும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து இவரது விதவிதமான கெட்டப்புகள்.. பெயர்களுடன் வீரப் பிரதாபங்கள் தெரிய வர.. போலீஸ் கோர்ட் கஸ்ட்டியில் எடுத்து வெளுத்து எடுக்கிறது.. பணத்தை மட்டும் சொல்ல மறுக்கிறார் ஹீரோ..

ஆனால் வெளியில் இருக்கும் கூட்டாளி உதவியோடு அதே பணத்தை வைத்து குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பை வாங்கிவிட்டு வெளியில் வருகிறார் ஹீரோ. ஆனால் ஏற்கெனவே ஹீரோவால் ஈமு கோழி திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் வேறொரு அடியாள் டீமை அணுக.. அவர்கள் ஹீரோவை அமுக்கி அடித்து உதைக்கிறார்கள்..

அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து தப்பிக்க நினைக்க.. அதுவரையில் ஹீரோவுடன் இருந்தவர்கள் அந்தப் பணத்துடன் எஸ்கேப்பாகுகிறார்கள்.. இப்போது ஹீரோவுக்கு வாயே மூலதனம்.. அதை வைத்து அந்த அடியாள் கும்பலையே வளைத்துவிடுகிறார்..

கும்பகோணத்தில் ஒரு நகைக்கடையில் ஆடி மாத தள்ளுபடி.. காலையில் முதலில் வருபவர்களுக்கே தங்கம் பாதி விலை என்று அறிவித்து பணத்தை அமுக்கித் தப்பிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து அடுத்த திட்டமாக இளவரசுவிடமே இவர்களை அனுப்பி போலீஸில் சிக்க வைத்துவிடுகிறார் ஹீரோ.

கண் போன போக்கில் போனவர் திருப்பூர் வந்து சேர.. அங்கே இவரை அடையாளம் தெரிந்தவர்கள் புரட்டியெடுக்க.. ஏற்கெனவே எம்.எல்.எம். நிறுவனத்தில் பணியாற்றிய ஹீரோயினை பார்த்து இவரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். இவர்களுக்குள் காதலும் வளர்ந்துவிட.. திருமணமும் செய்து கொள்கிறார்கள்.. அமைதியாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்க.. அப்படியே இருந்துவிட முடியுமா..? செய்த பாவம் ச்சும்மா விடாதே..?

ஒரு கட்டத்தில் அந்த அடியாள் கும்பலுக்கு ஹீரோ இருக்குமிடம் தெரிய வர.. அங்கே வந்து ஆளை அழைத்துச் செல்கிறார்கள்.. இப்போதும் அவர்களுக்கு 5 கோடி பிராஜெக்ட் என்று வாயாலேயே முழம் போட்டு மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். மதுரையில் பெரிய கிரானைட் பிஸினஸ்மேனை மடக்கி.. அவரிடத்தில் போலி இரிடியத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்கிறார்..

இந்தத் திட்டம் பலித்தாலும் பலிக்காவிட்டாலும் ஹீரோவை உயிருடன்விடக் கூடாது என்று அடியாள் கூட்டமும் காத்திருக்க.. ஹீரோ எப்படி தப்பிக்கிறார்..? கடைசியில் என்னவாகிறார் என்பதுதான் கதை..!

கத்தி எடுத்தவன் கத்தியால்தான சாவான்.. திருடன் கடைசியில் தண்டனையை அனுபவிக்கத்தான் செய்வான் என்பது போன்ற உண்மைகளையெல்லாம் மறைமுகமாக சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்..

படத்தின் மிகப் பெரிய பரபரப்புக்கும், தேடலுக்கும் காரணமே மிக ஆச்சரியமான வகையில்  எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், ஹீரோவாக நடித்திருக்கும் நட்ராஜின் அசத்தல் நடிப்பும்தான்..!

தனது உடல் மொழியை லாவகமாகப் பயன்படுத்தி நட்ராஜ் பேசுகின்ற ஒவ்வொரு டயலாக்கும் கேட்போரை மதிமயங்கச் செய்யக் கூடியவை.. எம்.எல்.எம். கூட்டத்தில் அவர் பேசுகின்ற பேச்சு “தேவனாகிய இயேசு உங்களை அழைக்கிறார்” கூட்டத்தில் பிரசங்கம் செய்வார்களே.. அதற்கு சமமானது.. மெஸ்மரிஸத்தை கண்களாலும், பேச்சாலும் வைத்திருந்து படத்திற்கு மிகப் பொருத்தமான ஹீரோவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் நட்ராஜ்.. வாழ்த்துகள் ஸார்..!

படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான்.

“உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்குனு எதுவுமே இல்லைனு இருந்திருக்கீங்களா..?”

“நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்..”

“இளைய தளபதி விஜய்னு பேர் வைப்போமா…?”

“மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிறுத்தியிருக்கான்?” 

“ஒருத்தன் உன்னை ஏமாத்திட்டா அவனை பலி வாங்கனும்ன்னு நினைக்காத, அவனை குருவா நினைச்சுக்கோ… ஏன்னா அவன் உனக்கு பணம் சம்பாதிக்க சொல்லி கொடுத்துருக்கான்.”

“நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்..”

“உனக்கு மட்டும் புரிஞ்சிட்டா, நான் வேற ஐடியா யோசிக்கணும்?”

“பாம்புக்கு 200 மொழி தெரியும்..”

“கருணையை வைச்சு பணம் சம்பாதிக்கணும்.”

“அஞ்சு வருசத்துல தமிழ்நாடை சிங்கப்பூரா மாத்துறேன்னு சொல்லிட்டு போறாங்க… ஆனா அஞ்சு வருசமா தமிழ்நாடு தமிழ்நாடவேதான் இருக்கு. மாத்துறேன் சொன்னவன் ஏமாற்றுக்காரன்தானே… அவன் மேலே யாரு கேஸ் போடுவா.?”

“நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுனு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான். நான் ஏன் சேர்த்து வைக்கணும்..?”

“குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை”

“ஓருத்தன ஏமாத்துனும்ன்னா அவன் ஆசைய நாம தூண்டி விட்டாலே போதும்.”

“ஒரு பொய்யுல சில உண்மைகளும் கலந்திருக்கணும். அப்போதான் அது பொய்யுன்னு யாருக்கும் தெரியாது..!”

“வாழ்க்கையே அன்பை பகிர்ந்துக்கிறதுக்கும் பரிமாறிக்கிறதுக்கும்தாண்ணே..”

இப்படி வசனத்தாலேயே ஆடியன்ஸை உச்சுக் கொட்ட வைத்து, ரசிக்க வைத்து இறுதிவரையில் அந்த டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கும் அறிமுக இயக்குநர் வினோத்திற்கு நமது வாழ்த்துகள்..!

இது மட்டுமா..? இவர்கள் ஆடும் சதுரங்க வேட்டைகளுக்கு பெயர் சூட்டி அழைத்திருக்கும் புதிய ஸ்டைலும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ‘செட்டியாரும் டபுள் டக்கரும்’, ‘MLM’, ‘பணம் அச்சடித்த ஆயுதம்’, ‘புதிய பயணம்’, ‘சதுரங்க வேட்டை ஆரம்பம்’ இப்படித்தான் சப்-டைட்டில்கள் அசத்தியிருக்கின்றன.

அந்த அடியாள் கூட்டத்தின் தலைவனாக வருபவன் தூய தமிழில் பேசுபவனாக காட்டியிருப்பதில் ஏதும் அரசியல் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. இந்தப் படம் எடுக்கப்பட்ட பின்புதான் விற்பனைக்காக திருப்பதி பிரதர்ஸின் பார்வைக்கே வந்திருக்கிறது.. ஸோ.. கதை, திரைக்கதையில் அவர்கள் தலையிட வாய்ப்பே இல்லை..

ஆனாலும் அந்த தூய தமிழ் கேரக்டர் ஸ்கெட்ச்சே சில இடங்களில் இடிக்கிறது.. “தூய தமிழில் பேசு…” என்று அடியாளிடம் பேசிவிட்டு அந்தத் தலைவன் போனில் ஆங்கிலத்தில் பேசுகிறான்.. என்ன முரண்பாடு..? இது போல் அவ்வப்போது இவரது பேச்சில் ஆங்கில கலப்போடுதான் இருக்கிறது.. சிற்சில இடங்களில் அந்த இடத்தின் சிச்சுவேஷன் சிரிப்புக்காக வேண்டித்தான் அந்த கேரக்டர் தூய தமிழில் பேசியிருக்கிறார் என்பதை நாம் புரிந்தாக வேண்டும்..!

ஹீரோயின் இஷாரா சொந்தக் குரலில் பேசியிருக்கிறாராம். ஒரு குழந்தை போல பேசியிருக்கிறார்.. இவரது வாய்ஸை வைத்தே எம்.எல்.எம். டீமுக்கு ஆள் சேர்க்கும் அந்த டெக்னிக் சூப்பர்..

காதல்வயப்பட்டு.. கல்யாணம் செய்து கொண்டு.. கணவரை சந்தேகமும் பட்டு.. கடைசியாக அவரை பிரிந்த ஏக்கத்தில் பாடல் காட்சிகளில் இவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் இன்னமும் நான்கைந்து படங்களுக்கு இந்த ஹீரோயின் அவசியம் தேவைப்படுவார் என்பதையே உணர்த்துகிறது..!

இளவரசு, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், பொன்வண்ணன் என்று முக்கிய கதாபாத்திரங்கள் அளவோடு நடித்திருக்கிறார்கள்.. சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.. பொன்வண்ணன் பேசும் அந்த குறிப்பிட்ட டயலாக் அருமை.. அதனை ஹீரோ பின்னாளில் நினைத்துப் பார்க்கும் காட்சியும் செம குறியீடுதான்..!

இயக்கத்திலேயே அசத்திவிட்டதால் திரைக்கதையின் ஓட்டத்தில் நாமளும் ஓட முடிந்த்து.. இதற்கு பின்னணி இசையும் துணை நின்றிருக்கிறது.. பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்டுகள் அனைத்தும் லட்டு, லட்டாக கிடைத்திருக்க பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது..!

“நீ எத்தனை பாவம் வேண்ணாலும் செஞ்சுக்கிட்டே இரு.. ஆண்டவன் முதல்ல உன்னை ஒண்ணும் செய்ய மாட்டான்.. ஆனா நீ என்னைக்கு உன்னோட ஆட்டத்தை நிறுத்திட்டு போதும்.. ரெஸ்ட்டு எடுப்போம்னு ஒதுங்கும்போதுதான் ஆண்டவன், அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான்..” – இது மகாபாரதத்தில் வரும்  ஒரு வசனம்.. இது இந்தப் படத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது..!

படத்தின் மிகப் பெரிய சறுக்கலே.. கிளைமாக்ஸ்தான்.. அதுவரையிலும் பணம்தான்.. பணம்தான் முக்கியம்.. பணம்தான் எல்லாமே என்கிற கொள்கையில் இருக்கும் ஹீரோவுக்கு நண்பர்களின் துரோகம்.. ஏற்கெனவே ஏமாற்றப்பட்டவன் கொடுத்த பதிலடி.. பொதுமக்களிடமிருந்து கிடைத்த மரியாதை.. இதெல்லாம் ஒன்று சேர்ந்து அவனது மனநிலையை மாற்றிவிடுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லவில்லை..

இப்படியொரு நிலைமையில் சட்டென்று கூட்டாளிகளுக்காக மனம் மாறி மீண்டும் ஒரு கொள்ளையில் ஈடுபடச் செல்வதும் அந்த கேரக்டரை சிதைத்துவிட்டது.. கிளைமாக்ஸில் இப்படித்தான் இருக்கும் என்று முன்பே யூகித்திருந்தாலும்.. படம் நல்லவிதமாக முடிந்துவிட்டதில் இயக்குநருக்கு திருப்தி.. ஆனால் படத்தின் ஒட்டு மொத்த தன்மைக்கு அது விரோதமாக போய்விட்டது..!

ஒரு நீண்ட எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு கியாரண்டி கொடுப்பதால் இந்தப் படம் நிச்சயமாக ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை..!

புதுமுக இயக்குநர் வினோத் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

படத்தின் டைட்டில் கார்டில் “Our sincere Thanks to ஜி. நாகராஜன், எழுத்தாளர்” என தெரிவித்ததற்கு என்ன காரணம்ன்னு தெரியலையே..?

Our Score