2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’.
முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம். நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கூறியிருந்தார்கள்.
தற்போது ‘சதுரங்க வேட்டை’யின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தில் தற்போது தினம், தினம் மெருகேறிவரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும், விவரமாகவும் கூறவுள்ளார்கள்.
முதல் பாகத்தைத் தயாரித்த நடிகர், இயக்குநரான மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனமே, இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – வெங்கடேஷ், இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி, படத்தொகுப்பு – ராஜா சேதுபதி, பாடல்கள் – அறிவுமதி, யுகபாரதி, மக்கள் தொடர்பு – நிகில்.
‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் H.வினோத், இந்த ‘சதுரங்க வேட்டை-2’-ம் பாகத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார்.









