full screen background image

சாத்தான் – தி டார்க் – சினிமா விமர்சனம்

சாத்தான் – தி டார்க் – சினிமா விமர்சனம்

இ.பி.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரிப்பில், பாப்பின்ஸ் ஸ்டூடியோஸ் வழங்கும் சாத்தான் – தி டார்க்.

நடிகர்கள் :- எஃப்.ஜே, ​ஐரா, சாந்தினி தமிழரசன், மோனா பெத்ரே, ஸ்ரீஜா ரவி, தயாரிப்பாளர் எட்வர்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

எழுத்து – இயக்கம்: மணிகண்டன் ராமலிங்கம்

ஒளிப்பதிவு – பாலா ஜி.ராமசாமி

இசை – அஷ்வின் கிருஷ்ணா​

படத்தொகுப்பு – ராஜ்குமார்

கோவை அபிஷேக்

கலை – சுரேந்திரன் செல்வராஜ்

விஎஃப்எக்ஸ் -ரியல் வொர்க் ஸ்டூடியோ

ஒலிப்பதிவு- ராஜேஷ்சிவன்

கலரிஸ்ட்- சிவா

புகைப்படங்கள்- மேஹராஜ்

பத்திரிக்கை தொடர்பு- ஸ்ரீவெங்கடேஷ்

இந்த வாரத்திய பேய் படம் இதுதான். ஆனாலும் இதுவரையிலும் வெளியாகியிருக்கும்  மற்றைய பேய்த் திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதய பலவீனம் உள்ளவர்கள், லேசாக ரத்தம் வந்தாலே மயக்கம் வரும் உணர்வு உள்ளவர்கள், எளிய மனதுடையவர்கள், மாணவர்கள், மாணவிகள், சிறு குழந்தைகள் என்று இவர்களெல்லாம் பார்க்கவே கூடாத திரைப்படம் இது.

கி.பி.1800-களில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த பின்பு தான் கிறிஸ்தவம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அப்படி கிறித்துவம் ஏழை மக்களிடையே திணிக்கப்பட்டு பரப்பரை செய்யப்பட்டு வளர்ந்து வந்த அதே சூழலில்… பில்லி, சூனியம், சைத்தான், கடவுள் என்ற பல வார்த்தைகள் அந்த கிறிஸ்தவ மக்களை கட்டி போட்டன.

சிலுவை என்கின்ற அந்த ஒரு பொருள் அத்தனை கிறிஸ்தவர்களின் மனதையும் அமைதியாக்கும்.. சாந்தப்படுத்தும் என்றெல்லாம் சொன்னாலும், சாத்தான்களிடமிருந்து நம்மை காப்பாற்ற கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஆயுதம்தான் அந்த சிலுவை என்பது கிறிஸ்துவ மதத்தில் சொல்லப்படும் வார்த்தைகள்.

1900-களில் அஸ்தினாபுரம் என்ற அந்த கிராமத்தில் நடந்த ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு இப்போதுவரையிலும் அந்த ஊர் மக்களை பாடாய்ப் படுத்துகிறது.

இந்த கிராமத்து மக்கள் இறை நம்பிக்கையைவிட சாத்தான் வழிபாட்டிலேயே ஊறிப் போய் உள்ளனர். கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நடந்த ஒரு தவறான மாந்திரீக சடங்கினால் அந்த ஊருக்கு ஒரு கொடூர சாபம் கிடைத்திருக்கிறது.

இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் எழுப்பும் ஒரு மர்மமான புத்தகமும் அங்கே இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த காலத்தில் விக்டோரியா (சாந்தினி தமிழரசன்) என்ற பெண், இறந்த தன் கணவனை இந்தப் புத்தகத்தின் மூலம் உயிர்ப்பிக்க முயன்று, தன் நாக்கையும், கட்டை விரலையும் அறுத்து பலி கொடுத்து மாண்டு போகிறாள்.

பல தலைமுறைகள் கழித்து, ஏதோ ஒரு சாத்தான் அந்த ஊரில் ஏதோ ஒரு வீட்டில் இருந்து கொண்டு பலரையும் காவு கேட்கிறது என்பது அந்த ஊர் மக்களின் குற்றச்சாட்டு. அதற்கு அவர்கள் கையாற்றுகின்ற இடம் கணவன் இல்லாமல் தன்னுடைய இரண்டு மகள்களை வளர்த்து வரும் மோனா பத்ரேயிடம்தான்!

இவருடைய மகளான ஐரா பள்ளியில் படித்து வருகிறார். இன்னொரு சின்ன பெண்ணும் பள்ளியில் படித்து வருகிறார். மோன பத்ரா திடீர் திடீரென்று மன நலம் பிறழ்ந்தவர் போல நடந்து கொள்வார். சர்ச்சுக்கு சென்று குழப்பமான கேள்விகளை கேட்டு அங்கே இருக்கும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் கோவப்பட வைப்பார்.

மோனா புத்ரே திடீரென்று சாத்தானுக்கு காணிக்கை தர வேண்டும் என்று சொல்லி தன்னுடைய உடலை தானே கிழித்து கொள்கிறார். நாக்கை அறுக்க முயல்கிறார். காதுகளை அறுக்க முயல்கிறார். ஐரா மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய அம்மாவை காப்பாற்றி வைத்திருக்கிறார் ஆனாலும் அம்மாவின் மனம் பிறழ்ந்த பிரச்சனை அந்த ஊரையும் தாக்குகிறது. இதனால் அந்த ஊரே திரண்டு வந்து இவர்களை அந்த ஊரை விட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள்.

அதற்கு பின்பு என்ன நடந்தது? மோன பத்ரா குணமானாரா? கடைசியில் அவர் என்ன ஆனார்? ஐராவும், அவர் தங்கையும் என்னானார்கள்? ஊர்க்காரர்கள் இவர்களை ஊரை விட்டு விரட்டினார்களா.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

தாய் மோன பத்ரா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் ஐரா.. இருவரின் நடிப்புதான் இந்தப் படத்தை பயமுறுத்தலோடு நம்மைப் பார்க்க வைத்திருக்கிறது.

அதிலும், மோனா பத்ராவின் நடிப்பு சில காட்சிகளில் நம்மை மிகவும் பயமுறுத்திவிட்டது. தனக்கு எதுவுமே இல்லை.. எதுவுமே இல்லை.. என்று சொல்லிக் கொண்டே திடீரென்று கோபப்படுவதும், ஆத்திரப்படுவதும், கத்துவதுமாக.. ஒரு ஹிஸ்டாரி நோயாளியை போல மோன பத்ரா நடந்து கொள்வது படம் பார்த்தவர்களையும் பேய் பிடிக்க வைத்துவிட்டது.

இன்னொரு பக்கம் ஐராவும் முதலில் அமைதியான முறையில் அம்மாவை காப்பாற்ற நினைத்தவர் இடைவேளைக்கு பின்பு அவரும் அந்த ஜோதியில் கலந்து கொண்ட பின்பு அவர் காட்டுகின்ற நடிப்பும், ஐயோ சாமி என்று நம்மை ரொம்பவே சொல்ல வைத்துவிட்டது.

இதில் ஐராவின் வகுப்பு தோழர்கள் ஐராவிற்கு உதவி செய்வதற்காக வீட்டுக்கு வந்து அவர்கள் படுகின்ற பாடும், அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்காக முயல்கின்ற காட்சிகளிலும் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தப் பேய் கதையின் ஆரம்ப புள்ளியாக இருக்கும் சாந்தினி தமிழரசனின் கதையும் கொஞ்சம் ஈர்ப்பாக இருக்கிறது. அதே சமயம் அவரும் தன்னுடைய வாழ்க்கை சோகத்தை காட்டும்பொழுது பாவமாகத் தோன்றுகிறது. சாந்தினியின் காதல் கதையும் சோகமான அவருடைய முடிவும் அவரது அழகான நடிப்பைக் காட்டி இருக்கின்றன.

மற்றும் அந்த ஊர் மக்களாக நடித்திருந்த அந்த பகுதி மக்களுக்கும் நம்முடைய பாராட்டுக்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவரும் மிகச் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பினை செய்து இருக்கிறார். இயக்குநரின் திறமையான இயக்கத்தினால் இந்தப் படம் அவ்வளவு கிரிப்பாக வந்திருக்கிறது.

இது போன்ற பேய்த் திரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும், இசையும்தான் மிகவும் முக்கியம். அது கச்சிதமாக இந்தப் படத்திற்கு அமைந்திருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பது சில காட்சிகளில் ஸ்கிரீனில் தெரிந்தாலும் ஒளிப்பதிவில் குறை இல்லாமல் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அதேபோல் பின்னணி இசையை அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர். நம்முடைய காதுகளை கிழிந்து வடும் அளவுக்கு காதுக்குள்ளயே  ஸ்பீக்கரை திணித்துவிட்டதுபோல இவ்வளவு ஒலியை கொடுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். நமக்கே திக் திக் என்ற ஒவ்வொரு கட்சியிலும் தோன்றும் அளவுக்கு ஒரு பயமுறுத்தலோடு கடைசிவரையில் படம் செல்வது மிகவும் சிறப்பு.

படத்தின் எடிட்டர்களான ராஜ்குமாரும், அபிஷேக்கும் மிகத் திறமையாக இந்தப் படத்தை எடிட்டிங் செய்து கொடுத்து இருக்கிறார்கள். இதனாலேயே துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படம் முழுவதும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் மூடிலேயே நம்மை வைத்திருக்கிறார்கள்.

பேய் பிடித்த பின்பு பேய் பிடிக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் கத்துவார்கள்.. பேசுவார்கள்.. என்பதை எல்லாம் ஒரு சில நொடிகளில் அவர்களுடைய முகத்தில் காட்டுகின்ற அந்த ஆவேசம், பயமுறுத்தல் அனைத்தையும் கொஞ்சமும் குறையாத வண்ணம் எடிட்டிங் செய்து நம்மை மிரட்டியிருக்கிறார்கள் படத் தொகுப்பாளர்கள். அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

படத்தின் துவக்கத்திலிருந்து இந்தப் படம் எதையோ சொல்ல வருகிறது. ஏதோ ஒரு பேய் கதையைச் சொல்கிறார்கள் என்று மட்டுமே நமது உள் மனது சொன்னாலும் அது என்ன என்பதை கடைசிவரையில் சஸ்பென்சாவே கொண்டு சென்று இருக்கிறார் படத்தின் இயக்குநர்.

இப்படி ஒரு கிரிப்பான படத்தை கொடுப்பது என்பது ரொம்ப, ரொம்ப கஷ்டம். ஆனாலும் இன்னும் சில சினிமாவைக்கேற்ற நகாசு வேலைகளை செய்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக ஹிட்டாகியிருக்கும்.

அந்த ஒரு சில தவறுகளினால் இந்தப் படத்தை அப்படி நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு செமத்தியான சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த பேய் படத்தை பார்த்த திருப்தி நமக்கு கிடைத்திருக்கிறது.

பேய்ப்பட ஆர்வலர்களும், ரசிகர்களும் ஓடோடி சென்று இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score