full screen background image

சத்தமின்றி முத்தம் தா – திரைப்பட விமர்சனம்

சத்தமின்றி முத்தம் தா – திரைப்பட விமர்சனம்

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரீஷ் பெரடி, வியன் மங்கலசேரி, நிகாரிகா பாத்ரோ மற்றும் பலர் நடித்துள்ளனர்ய

ஒளிப்பதிவு யுவராஜ்.M., படத் தொகுப்பு மதன்.G., நடன இயக்கம் தினேஷ், சண்டை இயக்கம் – ‘மிராக்கிள்மைக்கேல், பாடகர்கள் ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ், ரவி.G., பத்திரிக்கை தொடர்பு மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – A.JPஆனந்த், தயாரிப்பு கார்த்திகேயன்.S, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராஜ் தேவ்.

‘சத்தமின்றி முத்தம் தா’ என்று ரொமாண்ட்டிக்கான தலைப்பு வைத்திருப்பதால், படமும் அப்படித்தான் இருக்கும்போல என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள். இது சுத்தமான கரம், மசாலா.. சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம்.

முதல் காட்சியிலேயே படத்தின் கதையைத் துவக்கியிருக்கிறார் இயக்குநர். தன்னைக் கொல்ல வரும் ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதரிடமிருந்து தப்பிக்க ஓடும் நாயகி ‘சந்தியா’ என்ற பிரியங்கா திம்மேஷை, ஒரு கார் வேண்டுமென்றே கொலை செய்யும் நோக்கோடு வந்து மோதுகிறது.

இந்த விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நாயகியை, நாயகன் ஸ்ரீகாந்த் காப்பாற்றி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அட்மிட் செய்கிறார். தான்தான் நாயகியின் கணவர் ‘ரகு’ என்று சொல்கிறார். அறுவை சிகிச்சைக்கு அனுமதி கையெழுத்தையும் போடுகிறார்.

இந்த நேரத்தில் ஒரு தொடர் கொலையாளியை தேடிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் பெராடி விபத்து நடந்திருப்பதை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்து பிரியங்கா பற்றி விசாரித்துவிட்டு ஸ்ரீகாந்தை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால் ஸ்ரீகாந்த் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு பிரியங்காவை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

பிரியங்காவுக்கு இந்த விபத்தினால் பழைய நினைவுகளெல்லாம் போய்விட்டன. அதனால் பிரியங்காவிடம் “நான்தான் உன் கணவன் ரகு” என்று சொல்கிறார் ஸ்ரீகாந்த்.

அந்த வீட்டில் இருக்கும் பழைய ஆல்பத்தைப் புரட்டும்போது பிரியங்காவுக்கு தான் பள்ளியில் படித்த ஞாபகம் வந்துவிடுகிறது. அப்போது அந்தப் புகைப்படத்தில் ஸ்ரீகாந்த் இருப்பதைப் பார்த்துவிட்டு “நீ விக்னேஷ்தான..?”,  “நாம ரெண்டு பேரும் அப்போ லவ் செஞ்சோம் இல்லையா..?”,  “எப்படி நீ என்னைக் கல்யாணம் செஞ்ச..?”, “நீ ஏன் உன் பெயரை ரகுன்னு மாத்திக்கிட்ட..?” என்று கேள்விமேல் கேள்வியாய் கேட்கிறார். ஸ்ரீகாந்தோ இதற்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கிறார்.

அதே நேரம் வீடு தேடி வரும் சில ரவுடிகளை பிரியங்காவின் கண் முன்பேயே படுகொலை செய்கிறார் ஸ்ரீகாந்த். இதுவும் பிரியங்காவுக்கு பயத்தையும் கொடுத்து, அவர் மீது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில் ரகு’ என்ற வியான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தனது மனைவியான சந்தியாவை கடந்த சில தினங்களாக காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகைப்படத்தில் இருப்பது சந்தியாதான்.

இதற்கிடையில் பீச்சில் சந்தியாவை சந்திக்கும் அவளது பால்ய தோழி சந்தியாவின் திருமணப் புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வைக்கிறாள். அந்தப் புகைப்படத்தில் சந்தியாவின் கணவனாக மாலையும், கழுத்துமாக நிற்பது ‘ரகு’ என்ற வியான்தான்.

அப்படியென்றால் ‘விக்னேஷ்’ என்ற ஸ்ரீகாந்த் உண்மையில் யார்..? அவர் எதற்காக சந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்..? சந்தியா ஏன் ரகுவை விட்டுப் பிரிந்தார்..? இதன் பின்னணியில் நடக்கும் உண்மைக் கதைதான் என்ன..? என்பதுதான் இந்த ‘சத்தமின்றி முத்தம் தா’ படத்தின் சுவையான கதைச் சுருக்கம்.

ஸ்ரீகாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சில, பல காட்சிகளில், பல தருணங்களில் அவரது நடிப்பு முன்பைவிடவும் சிறப்பாக மேம்பட்டுள்ளது. சண்டை காட்சிகளில் மிக வேகம் காட்டியிருக்கிறார்.

நினைவுகளை இழந்து தடுமாறும் மனைவியாக நடித்திருக்கும் பிரியங்கா சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கோபம், தாபம், விரக்தி, ஏமாற்றம், சந்தோஷம் என்று அத்தனை ஏரியாவிலும் தனது நடிப்பை வலுவாகக் காட்டியிருக்கிறார். முகமும் அழகான வட்ட நிலாவாக இருப்பதால், அம்மணி நினைத்தால் தமிழில் ஒரு ரவுண்டு வரும் வாய்ப்பு இருக்கு இருக்கிறது..!

வில்லியாக நடித்திருக்கும் நிஹாரிகா கிளாமருக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். செம்பரம்பாக்கம்’ பாடல் காட்சியில் தனது கிரங்கடிக்கும் நடன அசைவினால் கவர்ந்திழுக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெரேடி தொடர் கொலையாளியை கண்டுபிடித்தே தீருவேன் என்ற கணக்கில் விடாமல் பின் தொடர்ந்து சென்று புதிரை விடுவிக்கிறார். ‘ரகு’வாக நடித்திருக்கும் வியான் வித்தியாசமான முகத் தோற்றத்தில் வில்லனாகவே தெரிகிறார்.

படம் நெடுகிலும் யுவராஜின் ஒளிப்பதிவும், ஒரு கேரக்டராகவே வாழ்ந்ந்திருக்கிறது. பாடல் காட்சியில் கடுமையாக உழைத்திருக்கிறார். ஜுபினின் இசையில் 2 பாடல்களுமே சிறப்பு. ‘செம்பரம்பாக்கம் ஏரி’ பாடலும், பாடல் காட்சியும் இந்தாண்டின் ஹிட் பட்டியலில் நிச்சயமாக சேரும். பின்னணி இசையும், ஒரு த்ரில்லர் படத்துக்கான அதிகப்பட்சமான உழைப்பை வழங்கி இருக்கிறது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கான அத்தனை ஸ்கோப்புகளும் இந்தக் கதையில் இருக்கிறது. முதல் காட்சியிலேயே கதையைத் துவக்கி வைக்கும் இயக்குநர், அடுத்தடுத்தக் காட்சிகளிலேயே திரைக்கதையை உடைத்துக் கொண்டே சென்று நமக்குள் ஒரு பதற்றத்தைத் தோற்றுவிக்கிறார். இதற்காக சின்னச் சின்ன டிவிஸ்டுகளை திரைக்கதையில் வைத்தும், வலுவான சண்டை காட்சிகளை வைத்தும் நம்மை நம்ப வைக்கிறார்.

ஆனால், லாஜிக்காக கதையை பார்க்க முடியாதபடிக்கு இயக்குநர் ராஜ்தேவ் படத்தை இயக்கியிருப்பதுதான் ஏற்க முடியாததாக உள்ளது.

தொடர் கொலையாளி என்று ஸ்ரீகாந்தை முன் வைத்து இன்ஸ்பெக்டர் ஹரீஷ் பெரடி தேடி வரும் வேளையில், சிசிடிவி புட்டேஜை வைத்தே மிக எளிதாகப் பிடிக்கும் சூழல் இருக்கும் நிலையில் இத்தனை நாட்களாக தேடும் வேட்டையில் என்னதான் செய்கிறார் என்ற கேள்விதான் எழுகிறது.

அதிலும் சந்தியா இருந்த மருத்துவமனை சிசிடிவி புட்டேஜ், அவர் கொடுத்த அட்ரஸ், போன் நம்பர் இதை வைத்து எதையும் செய்ய முடியாமல் முதலில் தவிப்பதே சிரிப்பாகிவிட்டது. இந்தத் தேடுதல் வேட்டையை இன்னமும் அதி தீவீரமாக்கி திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்.

ஸ்ரீகாந்த், 2 பேரை தன் கண் முன்னேயே கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைப்பதைப் பார்த்தும் போலீஸுக்கு போகாமல் அமைதியாக இருக்கும் பிரியங்காவின் கேரக்டர் ஸ்கெட்ச் குழப்பத்தைத்தான் தருகிறது. அதே நேரம் ஸ்ரீகாந்த் கொலைகாரனாக மாறியதற்காக திரைக்கதையில் சொல்லப்படும் காரணமும் அழுத்தமாக இல்லை.

ரகு தன் கள்ளக் காதலிக்காகவும், பிரியங்காவிடம் இருக்கும் கோடி பணத்துக்காகவும் கொலை செய்ய முயற்சிப்பது ஏற்கத்தக்க திரைக்கதையாக இருந்தாலும், மனைவி வீடு திரும்பிவிடுவாள் என்ற நிலையில் கள்ளக் காதலியுடன் பெட்ரூமில் லூட்டி அடிப்பதெல்லாம் திரைக்கதையின் வசதிக்காகவே வைக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது.

சஸ்பென்ஸ், திரில்லருக்கான கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான லாஜிக் இல்லாத திரைக்கதையைக் கொடுத்திருந்தால் இந்தப் படம் சிறந்ததொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

“சத்தமின்றி முத்தம் தா’ என்ற தலைப்புக்கும், கதைக்கும் என்ன தொடர்பு..?” என்று கேட்கிறீர்களா..!

வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் மனைவி கணவனைக் காணாமல் தேடும்போது பெட்ரூமில் தனது கள்ளக் காதலியுடன் ஜல்சா செய்யும் முட்டாள் கணவன்,  வீட்டு வாசலுக்கே கேட்கும்படியாக அதிக சப்தத்துடன் கள்ளக் காதலிக்கு “இச்.. இச்..” என்று முத்தம் கொடுத்து மனைவியிடம் மாட்டிக் கொள்கிறார். அதனால்தான் இப்படியொரு தலைப்பாம்..!

RATING : 3.5 / 5

Our Score