full screen background image

சத்ரியன் – சினிமா விமர்சனம்

சத்ரியன் – சினிமா விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் கவின், ரியோ ராஜ், ஐஸ்வர்யா தத்தா, செளந்தர்ராஜா, அருள்தாஸ், போஸ்டர் நந்தகுமார், ஷரத் லோகித்தஸ்வா, ஆடுகளம் நரேன், யோகிபாபு, சுந்தரி திவ்யா, விஜயமுருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, கலை – ஆர்.கே.விஜயமுருகன், சண்டை பயிற்சி – அன்பறிவு, நடனம் – ஷெரிப், உடைகள் – பூர்ணிமா ராமசாமி, ஸ்டில்ஸ் – சி.ஹெச்.பாலு, இசை – யுவன்சங்கர்ராஜா, பாடல்கள் – வைரமுத்து, சினேகன், விவேக், ஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், படத் தொகுப்பு – வெங்கட்ராம்மோகன், எழுத்து, இயக்கம் – எஸ்.ஆர்.பிரபாகரன், தயாரிப்பு – செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன்.

‘சுந்தரபாண்டியன்’ என்னும் சாதி முலாம் பூசிய காதல் படத்தையும், ‘இது கதிர்வேலன் காதல்’ என்னும் முதிய காதல் படத்தையும் கொடுத்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இந்த முறை தனது லைனை மாற்றி கேங்க்ஸ்டர் கதைக்கு வந்திருக்கிறார்.

இதுவரையிலும் சமீபத்தில் வெளிவந்த அனைத்து ரவுடியிஸ படங்களிலும் மதுரையைத்தான் களமாக்கி வைத்திருந்தார்கள். அண்ணன் பிரபாகரன் கொஞ்சம் வித்தியாசமாக திருச்சிக்கு நகர்ந்திருக்கிறார்.

திருச்சியின் மிகப் பெரிய தாதா சமுத்திரம் என்னும் ஷரத் லோகித்தஸ்வா. ஆனால் அவருடைய முகம், அடையாளம், முகவரி எதுவும் தெரியாத அளவுக்கு வாழ்ந்து வருகிறார். இவரது மகன் செளந்தர்ராஜன். மகள் ஹீரோயினான மஞ்சிமா மோகன்.

திருச்சியை சேர்ந்த மாநில அமைச்சரான நந்தகுமார் அப்போதுவரையிலும் சமுத்திரத்துடன் நட்பாகத்தான் இருக்கிறார். ஆனால் இப்போது சமுத்திரம் எதிர்க்கட்சிக்கும் வேலை செய்வதை அறிந்து அவரைத் தீர்த்துக் கட்ட முனைகிறார்.

நினைத்தது போலவே சமுத்திரத்தின் பகையாளியான மணப்பாறை சங்கர் என்னும் அருள்தாஸ் மூலமாக சமுத்திரத்தைத் தீர்த்துக் கட்டுகிறார் அமைச்சர். இதையடுத்து அருள்தாஸ் அமைச்சரின் ஆசியுடன் திருச்சியின் மிகப் பெரிய தாதாவாகிறார்.

சமுத்திரத்தின் தளபதியாக இருப்பவர் ரவி என்னும் விஜயமுருகன். இவருடைய அடியாள்தான் ஹீரோ விக்ரம் பிரபு. சமுத்திரத்தைக் காப்பாற்ற அனுப்பப்படுகிறார் விக்ரம் பிரபு. ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.  இந்தச் சோகத்தோடு சமுத்திரத்தின் குடும்பத்திற்கு இனிமேல் பாதுகாவலனும் நானே என்றிருக்கிறார் விஜயமுருகன்.

மஞ்சிமா மோகன் கல்லூரிக்குச் செல்லும்போது சிலர் அவரை கிண்டல் செய்வது தெரிந்து அவருக்குப் பாதுகாப்புக்காக விக்ரம் பிரபுவை அனுப்பி வைக்கிறார் விஜயமுருகன். பாதுகாப்புக்காக வந்த விக்ரம் பிரபுவை, மஞ்சிமாவுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறார்.

இதனை முதலில் விரும்பாத விக்ரம் பிரபு தனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே என்றெண்ணி ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இதனை மஞ்சிமாவின் குடும்பத்தினரும், விஜயமுருகனும் ஏற்கவில்லை. விக்ரம் பிரபுவையே தீர்த்துக் கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. இதன் பின் என்னவாகிறது என்பதுதான் இந்தச் ‘சத்ரியனின்’ திரைக்கதை.

மகாபாரதம் துவங்கி பண்டைய இந்தியாவின் அனைத்து புராதன கதைகளிலும் ‘சத்ரியன்’ என்றொரு பெயருக்கே பெரிய பெயர் உண்டு. அதுதான் ‘வீரன்’ என்ற பெயர். ‘சத்ரியன்’களுக்கு மட்டும்தான் ‘வீரன்’ என்ற பெயர் சூட்டப்படுவதால் இந்தப் படமும் ‘வீரன்’ என்ற பெயருக்காக வைக்கப்பட்டிருக்கிறது போலும்..!

விக்ரம் பிரபு, தாதா கேரக்டரில் நடிக்க அவ்வளவு கஷ்டப்படவில்லை. ரவுடிகளின் மேனரிசம் உள்ளடக்கிய கேரக்டர் ஸ்கெட்ச்சை இவருக்கு வழங்கியிருக்க வேண்டியது இயக்குநரின் கடமை. அதை அவர் செய்யாததால் நாம் விக்ரம் பிரபுவை மட்டும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை.

அட்லீஸ்ட் மேக்கப்பிலும், உடல் தோற்றத்திலுமாவது ஏதாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம். எதுவுமே இல்லாமல் சென்ற படத்தில் பார்த்த அதே விக்ரம் பிரபுவையே, இன்றைக்கு திருச்சி ரவுடியாக பார்த்தால் பட்டென்று மனதில் தூக்கி உட்கார வைக்க முடியவில்லை.

ஆனாலும், தன்னால் இயன்றதை வழங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. சண்டை காட்சிகளிலும் காட்டும் ஆவேசத்தையும் சில இடங்களில் வசனத்தில் காட்டியிருக்க வேண்டும். ஏனோ அப்படி செய்யாமல் விட்டுவிட்டதால் அவரது கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு சப்பையாகிவிட்டது.

உதாரணமாக விஜயமுருகன் விக்ரம் பிரபுவை பார்க்க வரும் மஞ்சிமாவை “வீட்டுக்குப் போ…” என்னும் சொல்லுமிடத்தில் அதைத் தடுத்து விஜயமுருகனை வெளியே போகும்படி சொல்லும் விக்ரம் பிரபுவின் வாய்ஸில் ஒரு நடிப்பும் இல்லை. கோபமும் இல்லை. ஆக்ரோசமும் இல்லை. ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் இயக்குநர் மறந்துவிட்டார் போலும்..!

தாராவிடம் வந்து பெண் கேட்கும் காட்சியிலும், அந்த ஒரு காட்சியில் அவருடைய இயல்பான குணம் சீண்டிவிடப்பட்டதால் தானும் கையில் கத்தியைத் தூக்கும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இந்த ஒரு காட்சியை இவ்வளவு அழகாக இயக்கியிருக்கும் இயக்குநர் மற்றவைகளையும் இதேபோல் செய்திருக்கலாமே..?

மஞ்சிமா மோகன் அழகி.. படத்தின் முற்பாதியையும், பிற்பாதியில் பல நேரங்களிலும் ஸ்கிரீனை பார்க்க வைத்திருப்பவர் இவர்தான். இவரது முந்தைய படத்தில் இவரைப் பயன்படுத்தியதைவிடவும் இந்தப் படத்தில் அதிகமான குளோஸப் ஷாட்டுகளில் இவரை அழகுற நடிக்க வைத்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார் மஞ்சிமா.

இன்னொரு டென்ஷன் அழகியாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, யார் லேசாக தன்னை இடித்தாலே எதுவும் கேட்காமல் பளாரென்று அறையும் மனவல்லமை கொண்டவராக நடித்திருக்கிறார்.  ஆனால் இத்தனை கோபமுடையவர் தன்னை அடித்தவரிடமே காதல் சரணாகதி அடைவது டிராமா திரைக்கதை. இவருடைய காதலரான அந்த டாக்டர் கேரக்டரையும், விக்ரம் பிரபுவையும் இணைத்த திரைக்கதை புள்ளி சூப்பர்ப்..!

வழக்கமான வில்லனாக நந்தகுமார், சரத் லோகித்தஸ்வாவும் வந்து சென்றிருக்கிறார்கள். எப்படியாவது திருச்சிக்கு தலைமை தாதாவாகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் அருள்தாஸின் அந்த தவிப்பும், சமுத்திரத்தைப் போட்டுத் தள்ளியவுடன் அவர் அடையும் சந்தோஷமும், அடுத்த பிரச்சினையாக விக்ரம் பிரபுவுடன் மல்லுக்கட்டி மோதி அலங்கோலமாகும் அந்தச் சண்டை காட்சியிலும் வெகுவாக நம்மைக் கவர்கிறார் அருள்தாஸ்.

விஜயமுருகன் இயல்பாக நடித்திருக்கிறார். அருள்தாஸை போட்டுத் தள்ளியதால் இவரும் தலைமறைவாக வேண்டிய நிலைமையில் பொரிந்து தள்ளுவதும்.. விக்ரம் என்று நினைத்து டாக்டரை புரட்டியெடுத்துவிட்டு நொந்து கொள்வதும் சிறப்பு. செளந்தர்ராஜன், ஒரு மிகப் பெரிய தாதாவின் மகனாக இருந்தும் கத்தியை பார்த்தாலே நடுக்கம் வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

‘இங்கேயும் ஒரு கங்கை’ தாரா மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு அம்மா கேரக்டரில்.. பெண் கேட்டு வந்த விக்ரம் பிரபுவிடம் அவர் பேசும் அந்த நீள வசனங்களே போதும் இவருக்கு.. பண்பட்ட நடிப்பை மிகையில்லாமல் காட்டியிருக்கிறார்.

யோகிபாபு என்றொரு நடிகர் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் வலம் வந்திருக்கிறார். ஏன் வந்தார்..? எதற்கு வந்தார்..? பின்பு என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியவில்லை. ஒருவேளை காட்சிகளை படமாக்கியும் கட் செய்துவிட்டார்களோ..?!

பார்த்துப் பார்த்து சலித்துப் போன கதையையே கொஞ்சம் மாற்றி, மாற்றி டிங்கரிங் வேலையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்கம் நல்லபடியாக இருந்தும் கதையும், திரைக்கதையும் சுவையில்லாததால் அடுத்து வரும் காட்சி, அடுத்து பேசப்படவிருக்கும் வசனம் இதையெல்லாம் ரசிகர்களே சொல்லும்படி இருப்பது மிகப் பெரிய பின்னடைவு.

படத்தின் பிளஸ்ஸாக பார்க்கப் போனால் மஞ்சிமா மோகனின் நடிப்பு, தனது காதல் தொடர்பாக அவர் வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சியமைப்பு, விஜயமுருகனுக்கும், விக்ரம் பிரபுவுக்கும் இடையில் நடக்கும் வார்த்தைப் போர்.. டாக்டருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையிலான சிறிய லவ் போர்ஷன்..  அருள்தாஸ் செட்டப் செய்யும் அந்த மரண சண்டை காட்சி.. இதெல்லாம்தான் விட்டுவிட்டு இந்தப் படத்தை பார்க்க வைத்திருக்கின்றன.

‘கத்தியெடுத்தவன் கத்தியால்தான் சாவான்…’ என்கிற ஒற்றை வரியை இன்னும் எத்தனை படங்களில்தான் சொல்லிக் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ‘அவனுக்கு நான் லைன் போடுறேன்..’, ‘வன்முறைங்கிறது ஒரு வழிப் பாதை..’, ‘இந்தக் கத்தி இன்னிக்கு உன் கைல இருக்கு. நாளைக்கு இன்னொருத்தன் கைக்கு போகும்…’, ‘இன்னிக்கு நீ திருச்சியை ஆளலாம்.. ஆனால் நாளைக்கு இன்னொருத்தன் உன்னை போட்டுட்டு, இதே இடத்துல உக்காருவான்..’ என்று ரவுடிகளின் வசன டிக்சனரியை புரட்டியெடுத்திருக்கிறார் வசனகர்த்தா பிரபாகரன்.

இப்படி படம் நெடுகிலும் வன்முறைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல வசனங்களும் இடைவெளியில்லாமல் வந்து கொண்டேயிருப்பதால் நமக்குத்தான் அலுப்பாக இருக்கிறது..!  

இவ்ளோ பெரிய வீடு.. பணக்காரத்தனம் இருந்தும் மஞ்சிமா ஏன் பேருந்தில் கல்லூரிக்கு செல்கிறார் என்பதே தெரியவில்லை. இத்தனையாண்டுகளாக சமுத்திரம் தன்னை எப்படி மறைத்துக் கொண்டார் என்றும் தெரியவில்லை. சமுத்திரம் கொலையை அவ்வளவு சீக்கிரமாக போலீஸே கண்டுகொள்ளாமல் விடுவதும், அதை இந்தக் குடும்பமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுமாக திரைக்கதையில் சில லாஜிக் மீறல்கள்தான்.

இருந்தும் அமைச்சரின் தெனாவெட்டு பேச்சு.. கேஸை மூடும்படி கமிஷனர், ஏ.சி. ஆடுகளம் நரேனிடம் பேசுவது.. அதே டயலாக்கை அருள்தாஸின் கொலையின்போது ஆடுகளம் நரேன் திருப்பிப் பேசுவது.. ரவுடிகளை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் போலீஸாரின் நரித்தனம்.. தனக்கு ஒரு ஆபத்தென்றால் எவனையும் பலி கொடுக்க தயங்காத அரசியல்வியாதிகளின் வஞ்சகத்தனம்.. என்று சிலவற்றை மட்டுமே ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சியின் சில, பல பகுதிகளை கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். விக்ரம் பிரபுவை விஜயமுருகனும், அவரது ஆட்களும் துரத்திக் கொண்டு வரும் காட்சியிலும், விஜயமுருகனும், விக்ரம் பிரபுவும் சண்டையிடும் காட்சி, அருள்தாஸின் மரண மாஸ் சண்டை காட்சி.. இவைகளில் ஒளிப்பதிவாளருக்கு இணையாக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவும் பின்னணி இசையில் மனதைத் தொட்டிருக்கிறார்.

அதே நேரம் பாடல் காட்சிகளில் நடனம் அமைக்காமலும், மாண்டேஜ் ஷாட்டுகளாக வைத்து நம்மைக் காப்பாற்றியிருக்கும் இயக்குநருக்கு நமது நன்றிகள்..!

2 மணி 30 நிமிடத்தில் 15 நிமிடக் காட்சிகளை திட்டமிட்டு குறைத்திருக்கலாம். பல வசன காட்சிகளை நீக்கியிருக்கலாம். செய்திருந்தால் படம் இன்னமும் கிரிப்பாக இருந்திருக்கும்..!

விக்ரம் பிரபுவுக்கு ஏற்றது காமெடி கலந்த மென்மையான காதல் கதைகள்தான்.. அதையே அவர் தொடர்ந்தால் அவருக்கு மட்டுமல்ல.. தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கும் நல்லது என்றே நினைக்கிறோம்..!

Our Score