சினிமாவில் நன்றி என்கிற வார்த்தை மட்டும்தான் பலருக்கும் பிடிக்காதது..! இல்லாதது.. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரையும், நடிக்க வைத்த முதல் இயக்குநரையும் திரும்பிப் பார்த்து நன்றி தெரிவிக்கும் நடிகர், நடிகையரை விரல்விட்டு எண்ணிவிடலாம்..
இப்படியிருக்கும் சூழலில், இன்றைக்கு பிரம்மன் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குநரான சாக்ரடீஸ் மைக் முன்பாகவே கண்களில் கண்ணீர் வடிய நடிகரும், இயக்குநருமான சசிகுமாரை நன்றியுடன் நினைவு கூர்ந்தது முதுகுத் தண்டை கொஞ்சம் சில்லிட வைத்தது..
தயாரிப்பாளர் மஞ்சு, கன்னட தேசத்துக்காரர். பல கன்னடப் படங்களைத் தயாரித்தவர். தமிழிலிருந்து பெரும்பாலான ஹிட் படங்களை ரீமேக் செய்தவராம்.. இப்படி பெரிய கை கிடைத்த பின்பும், தான் வைத்திருக்கும் கதைக்குப் பொருத்தமானவர் சசிகுமார் மட்டுமே என்பதால் அவரிடம் கதை சொல்ல 2 வருடங்கள் காத்திருந்த கதையை மிக உருக்கமாகச் சொன்னார் சாக்ரடீஸ்..
சசிகுமாரை பிடிக்க அவரது ஆசிரியர்களை முதலில் பார்த்துப் பேசி, தனக்காக ரெகமெண்ட் செய்யச் சொன்னது.. பின்பு எடிட்டர் ராஜாமுகமதுவிடம் சொல்லச் சொன்னது. இத்தனைக்கும் பின்புதான் சசிகுமார் சிக்கினாராம்.. கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒத்துக் கொண்டதால்தான் உடனடியாக தயாரிப்பாளரும் ஓகே சொல்ல.. படம் துவங்கிவிட்டதாம்..
தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமே சினிமா இயக்குநராவதுதான் என்பதால் இந்த மேடைக்குத் தன்னை கொண்டு வந்து நிறுத்திய சசிகுமாரை என் உயிர் உள்ளவரையில் மறக்கவே மாட்டேன்.. என்று உருகி, மருகி கண்ணீர் விட்டார் சாக்ரடீஸ்..
இன்னொரு முறை தயாரிப்பாளர் மஞ்சுவைப் பற்றிச் சொல்லியும் இதேபோல் கண்ணீரை சிந்தினார் சாக்ரடீஸ்.. தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தாலும் அவரிடம் சொன்ன நாட்களைவிடவும் அதிக நாட்கள் தான் ஷூட்டிங் நடத்த எடுத்துக் கொண்டதாகவும், செலவு பயங்கரமாக அதிகமாகிவிட்டதையும் ஒத்துக் கொண்டு.. அதற்கான பலனை தான் ஸ்கிரீனில் கொடுத்திருப்பதாகவும் சொன்னார் இயக்குநர். இதனை தயாரிப்பாளரும் தன் பேச்சில் ஒப்புக் கொண்டார்..! அப்புறமென்ன.. கெட்டி மேளம் கொட்டிர வேண்டியதுதானே..?
படத்தின் மீதான நம்பிக்கையால் மதுரை தவிர்த்து தமிழகம் முழுவதும் சொந்தமாகவே ரிலீஸ் செய்யப் போகிறாராம் தயாரிப்பாளர் மஞ்சு. மதுரையில் மட்டும் சசிகுமார் ரிலீஸ்.. படத்தின் ஹீரோதான் என்றாலும் கறாராக ரேட் பேசித்தான் அவருக்குக் கொடுத்தாராம் மஞ்சு..
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தவிர மத்ததெல்லாம் தானாகவே நமக்குக் கிடைக்கிறது..!