full screen background image

சார்பட்டா பரம்பரை – சினிமா விமர்சனம்

சார்பட்டா பரம்பரை – சினிமா விமர்சனம்

K9 Studios’ மற்றும் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், காளி வெங்கட், அனுபமா குமார், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – முரளி, கலை இயக்கம் – த.ராமலிங்கம், படத் தொகுப்பு – செல்வா ஆர்.கே., சண்டை இயக்கம் – அன்பறிவ், எழுத்து உதவி – தமிழ்ப் பிரபா, எழுத்து, இயக்கம் – பா.ரஞ்சித்.

1970-களில் வட சென்னை பகுதியில் வசித்த மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருந்த குத்துச் சண்டை போட்டியை மையமாக வைத்து முழுக்க, முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்த உயர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் மாலை நேர சந்தோஷத்திற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குத்துச் சண்டை போட்டி, பிரிட்டிஷ் ஆட்சி அகன்ற பின்பும் வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக… குருகுலம் வாயிலாக நமது தமிழர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு நடத்தப்பட்டுதான் வந்திருக்கிறது.

1985-ம் ஆண்டுதான் இது போன்று குத்துச் சண்டை போட்டிகள் சென்னையில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. 1976-ல் வட சென்னையில் நடைபெற்ற இரண்டு குத்துச் சண்டை குரு குலங்களுக்கு இடையில் நடந்த போர்தான் இந்தப் படத்தின் கதை.

வடசென்னையில் குத்துச் சண்டைக்கு பயிற்சி அளிக்கும் ஒரு குரு குலம் சார்பட்டா பரம்பரை’. முன்னாள் குத்துச் சண்டை சாம்பியனான ‘ரங்கன்’ என்ற பசுபதி இங்கு ஆசிரியராக இருக்கிறார்.

இந்தக் குரு குலத்திற்கு போட்டி ‘இடியாப்ப பரம்பரை’. இந்தக் குருகுலத்திற்கு துரைக்கண்ணு ஆசிரியர். இவர்கள் இருவருக்குமிடையேதான் குத்துச் சண்டை போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவர்களுடைய சிஷ்யர்கள் அவ்வப்போது மோதிக் கொண்டிருக்க.. இந்தப் போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அவர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் போட்டியையே ஒரு கான்ட்ராக்டர் ஏலத்தில் எடுத்து நடத்துகிறார். ஜெயித்தவருக்கும், தோற்றவருக்கும் பரிசுகள் கிடைக்கின்றன. குத்துச் சண்டை ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பார் என்று சொல்லி பெட்டிங்கே நடத்துகிறார்கள். மைதானத்தின் வெளியில் ஏழை, எளிய மக்கள் கடை விரித்து பொருட்களை விற்று சம்பாதிக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தக் குத்துச் சண்டை போட்டி என்பது ஒரு சுற்றுலா தளம் போல மக்களை மகிழ்விக்கிறது.

சமீபமாக சார்பட்டா பரம்பரை’யில் இருந்து யாரும் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. ஜெயிக்கவில்லை. ‘இடியாப்ப பரம்பரை’யில் இருக்கும் வேம்புலி மிகப் பெரிய வீரனாக இருக்கிறான். அவனை வீழ்த்தும் வல்லமை படைத்தவன் ‘சார்பட்டா பரம்பரை’யில் யாரும் இல்லை.

இது குத்துச் சண்டை வரலாற்றில் ஒரு மாபெரும் வீரனாக இருந்தவர் படத்தின் நாயகனான ‘கபிலன்’ என்ற ஆர்யாவின் அப்பா. குத்துச் சண்டை தொடர்பான விரோதத்தில் அவர் ஒரு நாள் படுகொலை செய்யப்படுகிறார். இதனால் ஆர்யாவின் அம்மா பாக்கியம், ஆர்யாவை குத்துச் சண்டை பக்கமே போகக் கூடாது என்று தடை விதிக்கிறார். ஆனால் ஜீன் கோளாறில் ஆர்யாவின் மனம் முழுக்க குத்துச் சண்டையே நிரம்பி வழிகிறது.

தன் அப்பா வீரனாக இருந்த சார்பட்டா பரம்பரை’யில் சேர்ந்து அந்தப் பரம்பரைக்கு இருக்கும் தோல்விப் பெயரை வெற்றிப் பெயராக மாற்ற நினைக்கிறார் ஆர்யா. இதை அவரது அம்மா தடுக்கிறார். பசுபதியே முதலில் ஆர்யாவைத் தேர்வு செய்வதில் தடுமாறுகிறார். பின்பு ஒரு காட்சிப் போட்டியில் சந்தோஷை ஆர்யா வீழ்த்தியதை பார்த்த பிறகு அவரை முன் நிறுத்த ஒத்துக் கொள்கிறார்.

அம்மா மற்றும் மனைவியின் எதிர்ப்புகளையும் தாண்டி குரு பசுபதியின் பெயரையும், குரு குலத்தின் பெயரையும் காப்பாற்ற குத்துச் சண்டை மேடையேறும் ஆர்யா எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் மீதமான கதை.

குருவாக ரங்கன்’ என்ற கதாபாத்திரத்தில் பசுபதி வாழ்ந்திருக்கிறார். அவருடைய இறுக்கமான முகமும், புரிந்து கொள்ளாதவர்களை நினைத்து அவர் கொள்ளும் எரிச்சலும்.. அனைவரையும் அடக்கி ஆளும் அவரது வசன உச்சரிப்பும், தனது குணாதிசயங்கள் மொத்தத்தையும் காட்டும் அந்த முக நடிப்பும், இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவர் இவர்தான் என்று அடித்துச் சொல்கிறது.

ஆர்யா தனது உடலமைப்பை இந்தப் படத்திற்காக கூட்டியும், குறைத்தும் மிக எளிய மனிதராக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் வேகமும், நடிப்பும், ஆக்சன்களும் ஆர்யாவுக்கு ஒரு பூங்கொத்தை பரிசாகப் பெற்றுத் தருகிறது.

ஒரு பக்கம் அம்மாவிடம் அடிக்கடி அடி வாங்குவது போதாமல்.. தன்னைப் புரிந்து கொள்ளாமல் பேசும் மனைவியையும் சமாளித்து இந்தப் போர்க்களத்தில் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள படும்பாடு “ஐயோ பாவம்” என்று சொல்ல வைக்கிறது. அதே நேரம் ஒரு மனிதன் இந்த அளவுக்கா வெள்ளந்தியாக இருப்பான் என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

மனைவியிடம் கொஞ்சல், எதிரிகளிடம் பொங்கல், அம்மாவிடம் பணிதல், குருவிடம் சரணடைதல் என்று பலவித பாவங்களையும் அடுத்தடுத்தக் காட்சிகளில் சளைக்காமல் கொடுத்திருக்கும் ஆர்யாவுக்கு நமது பாராட்டுக்கள்.

“யாருய்யா அந்த டான்ஸிங் ரோஸ்..?” என்று இன்றைக்கு மொத்தத் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அந்த நடிகர். அற்புதமாக, வில்லாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு குத்துச் சண்டை மேடையில் அவர் காட்டும் ஆக்சன்களும், அநாயசமாக மிக எளிதாக ஆர்யாவை வெல்ல முடியும் என்று நினைத்து அவர் செய்யும் சாகசங்களும் அற்புதம். அழகு.. அந்த பத்து நிமிடங்கள் சொக்கிப் போய்விட்டோம். வெல்டன் ரோஸ் ஸார்..!

டாடி’ என்ற ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் இன்னொரு பக்கம் தனது விஸ்தாரமான ஆக்கிரமிப்பை செய்திருக்கிறார். துவக்கத்தில் இருந்தே ஆர்யாவை குத்துச் சண்டை பக்கம் இழுத்துக் கொண்டு போக நினைக்கும் அவரது ஒன் லைன் ஆர்டர்.. மிகச் சிறப்பு. அதற்கேற்ற நடிப்பை கச்சிதமாகக் காட்டியிருக்கிறார் ஜான் விஜய்.

‘வேம்புலி’யுடனான முதல் ஆட்டம் கலவரத்தில் முடியும் நேரத்தில் ஆர்யாவைக் காப்பாற்றுகின்ற அந்தத் தருணத்திலும், மருத்துவமனையில் ஆர்யாவைச் சேர்ந்துவிட்டு உடனிருக்கும்போது பேசும் காட்சியிலும் மனதைத் தொடுகிறார் ஜான் விஜய்.

குத்துச் சண்டை பக்கம் போனாலே வெளக்கமாத்தை எடுத்து வந்து சாத்து, சாத்தென்று சாத்தும் ‘பாக்கியம்’ என்ற அம்மாவாக அனுபமா குமார். இதுவரையில் அவர் மீதிருந்த ஒட்டு மொத்த பிம்பத்தையும் இந்தப் படத்தில் கலைத்துப் போட்டிருக்கிறார். அவருடைய ஸ்பீட் டயலாக் டெலிவரியின் பல வசனங்கள் காதுகளில் இருந்து மிஸ்ஸானாலும், தன் நடிப்பை குறையில்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார்.

மருமகள் வந்ததும் தனது பொறுப்பில் இருந்து சற்று விலகி நின்று கொண்டு மகனை எச்சரிப்பதும், மகனைவிட்டு விலகிச் சென்று தனியாக இருப்பதும், பேத்தியை தூக்கிக் கொஞ்சக்கூட பிடிக்காமல் முகம் மாறுவதுமாக ஒரு அக்மார்க் வீராப்பு தமிழச்சியைக் காட்டியிருக்கிறார் அனுபமா குமார்.

ஆர்யாவின் மனைவி ‘மாரியம்மாளாக’ துஷாரா விஜயன். இதுவரையிலும் இல்லாத நாயகிகளின் தோற்றத்தில் இரண்டு மூக்குத்தி அணிந்து பார்க்கவே முடியாத கோலத்தில் இருந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். எதிர்பார்க்கவே இல்லை அந்த முதலிரவு நடனத்தை.. வெறித்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

கணவனை விட்டுப் பிடிப்பதுபோல தன் பக்கம் இழுப்பதும், அவனது சுணங்கிப் போன முகத்துக்காக குத்துச் சண்டைக்கு அனுமதிப்பதுமாக ஒரு சராசரி பெண்ணாக நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்பு படம் நெடுகிலும் குடிகார கணவனை சமாளிக்கும் பரிதாபத்தையும் நம்மிடமிருந்து பெறுகிறார். அந்தக் காட்சிகளில் ஐயோ பாவம் என்று நாமாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. நல்லதொரு இயக்கத்தினால் இவரிடமிருந்து நடிப்பு வரவழைக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல கலையரசனின் மனைவியாக நடித்தவரும் கணவனின் கொஞ்சலை ஏற்க முடியுமாலும், கலையரசன் குடும்பத்தினர் மீதான கோபத்தைக் காட்ட முடியாமலும் தவிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். கடைசியாக கலையரசனை தேர்வு செய்யாததற்காக பசுபதியிடம் வந்து அவர் வாதாடும் காட்சியில் வசனங்கள் பளிச். மருமகள்-மாமனார் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு நாகரிகமாக இருக்குமோ, அந்த அளவுக்கு கச்சிதமாக எழுதியிருக்கிறார் ரஞ்சித்.

பசுபதியின் மனைவியாக அறிமுக நடிகை கீதா. வழக்கம்போல கணவருக்கும், மகனுக்கும் இடையில் மாட்டிக் கொள்ளும் ஒரு சராசரி கதாபாத்திரம். அந்தச் சமாளிக்கும் வேலையையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே கோபத்தோடு பேசுபவர் அடுத்தடுத்தக் காட்சிகளிலும் அப்படியேதான் பேசுகிறார். இவருக்குக் கொஞ்சம் குளோஸப் காட்சிகளை வைத்திருந்தால் அவரது அறிமுகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பசுபதி சிறை சென்று திரும்பிய பின்பு அவரது கால் பாதத்தைப் பிடித்து பாசத்துடன் சாப்பிடச் சொல்வதும், உடனேயே பசுபதி நல்லி எலும்பை கடித்துத் தின்னும் அந்தக் காட்சியும் செம ரசனையான காதல் காட்சி. ஆர்யா, கலையரசன் இருவரின் காதலைவிடவும் இந்த ஒரு நிமிட காதலே சபாஷ் சொல்ல வைக்கிறது.

‘வெற்றிச் செல்வன்’ என்னும் கலையரசனின் கதாபாத்திரம் மட்டுமே கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்துவிட்டது. முதலில் ஆர்யாவுடன் சண்டையிடுகிறார். கொலை செய்யவும் முயல்கிறார். பின்பு ஆர்யாவுக்கு தவறான வழியைக் காட்டுகிறார். அவரை சிறைக்கு அனுப்பும் சம்பவத்தில்கூட ஒரு காரணமாக இருக்கிறார். பின்பு கட்சி மாறுகிறார். கெட்ட தொழில்களை செய்கிறார். ஆனாலும், கடைசியில் மீண்டும், மீண்டும் ஆர்யாவுடன் நட்பாகிறார். இதுதான் கலையரசனின் கேரக்டர் ஸ்கெட்ச் மீது என்ன பார்வையை செலுத்துவது என்பது புரியாததற்குக் காரணம்.

ஆனால் நடிப்பில் கலையரசன் குறை வைக்கவில்லை. அந்தந்த காட்சிகளுக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். வில்லன்தான் என்றால் அப்படியே இருந்திருக்கலாம். சட்டென்று மாறும் வானிலை போல இவரும் மாறிக் கொண்டேயிருந்ததால் கடைசியில் ரசிக்க முடியவில்லை. வருத்தம்தான்.

‘வேம்புலி’யாக நடித்த ஜான் கொகைன் தனது குத்துச் சண்டை பயிற்சியை வைத்தே நடித்திருக்கிறார். தன்னுடைய இயல்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார். இறுதியான கிளைமாக்ஸ் சண்டையில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இன்னொரு பக்கம் சந்தோஷ் மற்றும், அவருக்கு அண்ணன் தணிகையாக நடித்தவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வில்லன் என்றால் கடைசிவரையிலும் வில்லனாகவே காட்ட வேண்டும். ஆனால் இவர்கள் பாதி வில்லன், பாதி நண்பன் கதையாக வருவதும், போவதுமாக இருக்க அந்தக் காட்சிகளின் இயக்கத்தினால் மட்டுமே இவர்களது கதாபாத்திரம் நமது மனதில் நிற்கிறது.

இவர்கள் மட்டுமல்ல.. படத்தில் ஒரு காட்சியில் நடித்தவர்கள்கூட மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ரஞ்சித்தின் இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது காட்சியாளர்களின் பங்களிப்பு.

நடிப்பைத் தவிர மற்றவற்றிலும் இத்திரைப்படம் ஒரு பள்ளிக்கூடமாகவே காட்சியளிக்கிறது. இது போன்ற வரலாற்றில் இடம் பெற்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களை காட்சியாக்கும்போது அனைத்துத் துறைகளையும் செழுமைப்படுத்திக் காட்ட வேண்டும். இதில் அதை 95 சதவிகிதம் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

முதல் பாராட்டு கலை இயக்குநருக்கு. 1976-ம் வருடத்திய வீடுகள், தெருக்கள், ஹோட்டல்கள்.. பேருந்துகள்.. நடிகர்களுக்கு அதற்கேற்ற ஒப்பனைகள், உடைகள், பேச்சு வழக்குகள் என்று அத்தனை கிராப்ட்டுகளிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

அந்தக் கால ரேடியோ, போஸ்டர்கள், குத்துச் சண்டைக்கான அழைப்பிதழ், மேடைகள், குதிரைகளின் பராமரிப்பு, வீடுகளின் உள் அலங்காரம், தட்டு, டம்ளரில்கூட முனைப்பெடு்த்து செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரின் கேமிராவில் சிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய பங்களிப்பு நிச்சயமாக பெரியதுதான். 500 பேர் இருக்கும் அவ்வளவு பெரிய கூட்டத்தை பதிவு செய்வது என்பது எளிதான காரியமல்ல. அத்தனை பேரையும் மிக எளிதாகக் கையாண்டு படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார்கள் என்றால் மிகப் பெரிய சல்யூட்டைத்தான் இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் கொடுக்க வேண்டும்.

சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு மிக அதிகம்தான். அந்த ஆக்ரோஷமான சண்டையை எப்படி பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று எப்படி செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை. அத்தனையும் அப்படியே அதே ஆக்ரோஷத்துடன் பதிவாகியிருக்கிறது. பாராட்டுக்கள்..!

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அழகு.. சிறப்பு. ஆனால் பாடல்கள் தனிக் கவனம் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அதோடு திரைக்கதையின் வேகத்தில் படம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் பாடல்களும் இந்தப் படத்திற்குத் தேவைப்படவில்லை. இருந்தவையும் நமக்கு குறையைக் கொடுக்கவில்லை.

குறைகளே இல்லையா என்றால் அதில்லாமல் எந்த இயக்குநரால் படம் எடுக்க முடியும்..?

வசன ஒலிப்பதிவு மிகப் பெரிய  குறை. ஒருவர் வசனம் பேசி முடிப்பதற்குள்ளாக அடுத்தவர் பேசுவதும்.. அந்த வசன நடைகூட கொஞ்சம் இலகு மாறி இருப்பதால் புரிந்து கொள்வது சற்று கஷ்டமாகத்தான் உள்ளது. வேறு ஏதாவது மாற்று வழி செய்திருக்கலாம்.

கலையரசன் மற்றும் சந்தோஷ் மற்றும் அவரது அண்ணனான தணிகை இந்த மூவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சை சரி செய்திருக்கலாம்.

அதோடு படம் பேசும் அரசியலும், சாதியமும் ஒன்றுகொன்று முரணாக இருப்பதையும் கவனித்திருக்கலாம். படம் நடக்கும் வருடம் 1976. நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட்டு நாடே சிறைச்சாலை போன்றிருக்கும் நேரத்தில் தமிழகம் மட்டுமே சுதந்திரமாக இருப்பதை இந்த விளையாட்டும் காட்டுகிறது. இதை சரியாக சொல்லியிருக்கலாம்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியன்று மாலை 6 மணிக்குத்தான் கலைஞர் மு.கருணாநிதி  தலைமையிலான தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஆனால் படத்தில் பட்டப்பகலில் கலைக்கப்பட்டதாக வருகிறது. ஆனாலும் “திமுககாரன் எதுக்கும் பயப்பட மாட்டான்…” என்ற வசனத்தைத் தைரியமாக வைத்தமைக்காக பாராட்டுக்கள். பசுபதி திமுககாரர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதும் சிறப்பானதுதான்.

ஆனால் அதே நேரம் ஏன் தேவையில்லாமல் எம்.ஜி.ஆரையும், அ.தி.மு.க.வையும் வம்புக்கு இழுக்க வேண்டும்..? ‘நேற்று இன்று நாளை’ படத்தின் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வரும் ‘மாஞ்சா கண்ணன்’ அதிமுககாரராக காட்டப்பட்டு அவர் மூலமாக கலையரசனும், ஆர்யாவும் சமூக விரோதச் செயல்களைச் செய்வதாகக் காட்டியிருப்பது நியாயமில்லாத செயலாகவே தோன்றுகிறது.

அப்போதைய காலக்கட்டத்தில் அதிமுகவில் அதிகபட்சம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மட்டுமே இருந்தார்கள். எம்.ஜி.ஆரை போன்ற தோற்றத்துடன் அலையும் ஒருவர்  கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் கள்ளச் சாராயம் காய்ச்சி காசு சம்பாதிக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பது ரஞ்சித்தின் சொந்த அரசியல் நம்பிக்கையை நம்மிடம் திணித்திருப்பது போலவே தோன்றுகிறது.

கடைசியாக படத்தின் நீளமும் கொஞ்சம் அதிகம்தான். அரை மணி நேரக் காட்சிகளை அலட்டிக் கொள்ளாமல் வெட்டியிருந்தால்கூட படம் நன்றாகவே இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்பது ஊர், உலகத்திற்கே தெரியும் என்றாலும் அதை எப்படி கொண்டு செல்லப் போகிறேன் பாருங்கள் என்று நம்மை உட்கார வைத்து நொடியும் போரடிக்க விடாமல் மூன்று மணி நேரமும் படத்தைப் பார்க்க வைத்திருக்கும் பா.ரஞ்சித்தின் அந்த இயக்கத் திறமைக்கு மிகப் பெரிய சல்யூட்.

இந்தாண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த கலை இயக்கம், சிறந்த சண்டை இயக்குநர், சிறந்த திரைக்கதை… இவைகளுக்கான தேசிய விருதினை இத்திரைப்படமே வெல்லும் இன்று இப்போதே அறுதியிட்டுச் சொல்லலாம்..!

புதிதாக திரையுலகத்திற்குள் நுழைய விரும்பும் இளைஞர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்..!

Our Score