சர்கார் – சினிமா விமர்சனம்

சர்கார் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சன் நெட்வொர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

படத்தில் விஜய் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி, பழ.கருப்பையா, லிவிங்ஸ்டன், துளசி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக் கரு – வருண் ராஜேந்திரன், திரைக்கதை – வருண் ராஜேந்திரன், ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், படத் தொகுப்பு – கர் பிரசாத், ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன், கலை இயக்கம் – டி.சந்தானம், நடன இயக்கம் – பிருந்தா, ஷோபி, தர், சண்டை இயக்கம் – ராம் லஷ்மண், பாடல்கள் – விவேக், இணை இயக்கம் – திருக்குமரன், ஒலி வடிவமைப்பு – லஷ்மி நாராயணன், உடைகள் – பல்லவி சிங், தீப்லி நூர், இணை தயாரிப்பு – சுந்தர்ராஜ், தயாரிப்பு நிர்வாகம் – உதய்குமார், சிவராமன், ஆடியோ – சோனி மியூஸிக், டிஸைன்ஸ் – கோபி பிரசன்னா, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.

இராமேஸ்வரத்தில் ஒரு மீனவரின் மகனாக பிறந்து வளர்ந்து படித்து இப்போது அமெரிக்காவில் மிகப் பெரிய கார்ப்பரேட் கிரிமினலாக (கவனிக்கவும் : கிரிமினல்தான்) இருப்பவர் சுந்தர் ராமசாமி.

ஜி.எல். என்னும் உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுந்தர் ராமசாமி என்னும் விஜய், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார்.

வந்த வேகத்தில் விமான நிலையத்தில் இருந்து நேராக ஓட்டு போட வாக்குச் சாவடிக்குச் செல்கிறார் விஜய். அங்கே அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அவருடைய ஓட்டை வேறு யாரோ ஒருவன் போட்டுவிட்டுப் போய்விட்டான் என்பது தெரிந்து அதிர்ச்சியாகிறார் விஜய்.

இதைச் சும்மாவிட மாட்டேன் என்று நினைத்து உச்சநீதிமன்றத்தில் மணிக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஒரு பெரிய வக்கீலைப் பிடித்து அவரை உடனடியாக சென்னைக்கு வரவழைக்கிறார் விஜய். அவர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்கிறார். விசாரணை நடக்கிறது.

“ஒருவரின் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் பதிவு செய்துவிட்டு போனால் உண்மையான வாக்காளருக்கு பதிலி ஓட்டு அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும்..” என்பது தேர்தல் கமிஷனின் 49-P பிரிவின் விதிமுறை. இந்த விதிமுறைப்படி தனக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதுவரையிலும் அத்தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது எனவும் தலைமை நீதிபதியிடம் முறையிடுகிறார் விஜய்.

தலைமை நீதிபதியும் இதனை ஏற்றுக் கொண்டு அடுத்த 2 நாட்களில் விஜய்க்காக மட்டும் அந்த வாக்குச் சாவடியைத் திறந்து வைத்து அவருடைய வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதுவரையிலும் அந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கக் கூடாது என்றும் தீர்ப்பளிக்கிறார்.

அந்தத் தீர்ப்புக்கு பிறகு காரில் செல்லும்போது கார் டிரைவர் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஒரு சோகக் கதையை அவரிடத்தில் சொல்கிறார். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமை காரணமாக இரண்டு சின்னப் பொண்ணுகளுடன் கணவன், மனைவி இருவரும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் ஒரு பெண் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் சொல்கிறார்.

இந்தக் கதையைக் கேட்டு சோகமான விஜய் அந்தப் பெண்ணை அவளுடைய குடிசை வீட்டில் போய் பார்க்கிறார். அதன் பின் அவருடைய நோக்கம் மெல்ல மெல்ல மாறுகிறது. அதே கோபத்தோடு ஒரு பெரிய கார்பரேட் நிறுவனத்தின் முதலாளி கொடுத்த விருந்தில் கலந்து கொள்கிறார்.

அந்த விருந்தில் கலந்து கொள்ளும் அப்போதைய ஆளும் கட்சியின் நம்பர் இரண்டான ராதாரவி விஜய்யை சீண்டுகிறார். “உன்னுடைய ஒரு ஓட்டையும் நான் போட்டுக் காட்டுறேன்.. பார்க்குறியா…?” என்று சவால் விடுகிறார். இதுவும் விஜய்யை உசுப்பி விடுகிறது.

உடனேயே தமிழகம் முழுவதும் இதுபோல யார், யாருடைய ஓட்டுக்களையெல்லாம் கள்ள ஓட்டுக்களாக போட்டார்களோ அவர்களையெல்லாம் இணையம் மூலமாக திரட்டுகிறார் விஜய். தமிழகம் முழுவதுமே 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் இது போன்று ஓட்டு போட முடியாமல் தவித்துப் போனது தெரிய வர.. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் வழக்கு தொடர வைக்கிறார் விஜய்.

இதற்கிடையில் தேர்தல் முடிவும் வந்துவிடுகிறது. தற்போதைய முதலமைச்சரான பழ.கருப்பையாவின் தமிழக மக்கள் முன்னேற்ற முன்னணியே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. பழ.கருப்பையா முதல்வராக பொறுப்பேற்கும் அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு அனைத்து கள்ள ஓட்டு வழக்குகளும் ஒன்றாக விசாரணைக்கு வருகின்றன.

இதனால் கனடாவில் இருந்து திரும்பியிருக்கும் தனது மகள் வரலட்சுமியின் அட்வைஸ்படி பதவியேற்பை காலை 8 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார் பழ.கருப்பையா. இதையறியும் விஜய் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரி காலை 8 மணிக்கே நீதிபதிகளை நீதிமன்றத்திற்கு வரவழைக்கிறார்.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் சமயம் அங்கே ராஜ்பவனில் முதல்வர் பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது. விஜய் நீதிமன்றத்தில் அனைத்துவிதமான வாதங்களையும் முன் வைத்து நீதிபதிகளின் மனத்தை கரைத்துவிட.. அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலை அடியோடு ரத்து செய்கிறது சென்னை உயர்நீதிமன்றம். புதிதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு 14 நாட்கள் அவகாசமும் கொடுக்கிறது.

இதையடுத்து முதல்வர் பதவியேற்பு விழா பாதியிலேயே நிற்கிறது. கோபமான பொறுப்பு முதல்வரான பழ.கருப்பையா கண் ஜாடை காட்ட.. தமிழகமே பற்றி எரிகிறது. கடையடைப்பு, கல் வீச்சு, பேருந்து எரிப்புகள், தாக்குதல்கள் என்று தொடர்கின்றன. விஜய்யை கொலை செய்யவும் ஆட்கள் தேடியலைகிறார்கள்.

இந்த நேரத்தில் பழ.கருப்பையாவின் கட்சித் தலைமையகத்திற்கே நேரில் செல்லும் விஜய் அங்கேயிருக்கும் ராதாரவியிடம் வரும் தேர்தலில் அவருடைய கட்சித் தலைவரான பழ.கருப்பையாவை எதிர்த்து அவருடைய தொகுதியிலேயே நிற்கப் போவதாக சவால் விடுகிறார்.

இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற விஜய் அந்தப் பகுதி மக்களிடத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசுகிறார்.

அதே நேரம் அதுவரையிலும் எதிர்க்கட்சியாக இருந்த ஒரு கட்சியையே வளைத்துப் பிடித்து தனது கட்சியில் அவர்களை இணைத்து அதற்காக ஒரு விழாவையே நடத்துகிறார் பழ.கருப்பையா.

அந்த விழா மேடைக்கு தனது ஆதரவாளர்களுடன் பைக் அணிவகுப்பில் செல்லும் விஜய் ஒரு பேப்பரைக் கொடுத்து அதில் தான் எழுதியிருப்பதுபோல் “தமிழகத்தின் இந்த அனைத்து பிரச்சினைகளையும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்பேன்…” என்று அந்த மேடையில் இருக்கும் மைக்கில் மக்களிடத்தில் அறிவித்தால் தான் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகி விடுவதாகச் சொல்கிறார்.

ஆனால் அந்தத் திட்டங்களை வைத்துதான் தான் கோடி, கோடியாக சம்பாதித்து வருவதாகச் சொல்லி சிரிக்கிறார் பழ.கருப்பையா. இதனால் இன்னும் கோபமாகும் விஜய், அவருடைய தொகுதியில் மட்டுமல்ல.. 234 தொகுதிகளிலும் தன்னுடைய ஆதரவாளர்களை நிறுத்தி போட்டியிடப் போவதாக பழ.கருப்பையாவிடம் சவால் விடுகிறார்.

இந்த சவாலில் நாயகன் விஜய் எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் இந்த ‘சர்கார்’ படத்தின் திரைக்கதை.

படத்தின் கதைக் கருவோ சிம்பிளான ஒன்றுதான். தன்னுடைய ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டதால் அதை எதிர்த்து ஒரு சாமான்யன் எதிர்ப் புரட்சி செய்வதுதான் கதைக் கரு. இதைத்தான் ஒரிஜினலான ‘செங்கோல்’ கதையின் கதாசிரியரான வருண் ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். திரைக்கதையும் இதையொட்டிதான் எழுதி வைத்திருக்கிறார்.

வருணின் கதைப்படி கிளைமாக்ஸில் ஹீரோ திரும்பவும் சட்டக் கல்லூரிக்கே படிக்கப் போகிறார். முருகதாஸின் கதைப்படி ஹீரோ எதிர்க்கட்சி வேலையை மட்டுமே பார்க்க விரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார். அவ்வளவுதானே. எதற்கு இத்தனை சமாளிப்புகள்..? பொங்கல்கள்..?! ஒரு அறைக்குள் பேசி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை முருகதாஸ் தெருவுக்குக் கொண்டு வந்து தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்தக்  கதை உரிமை பிரச்சினையில் கடைசிவரையிலும் போராடி ஜெயித்த கதாசிரியர் வருண் ராஜேந்திரனுக்கு நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் விஜய்யே வியாபித்திருக்கிறார். அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் விஜய்.. விஜய்.. விஜய்தான்..! எந்தப் பொருளுக்கு மார்க்கெட் அதிகமோ அதைத்தானே சந்தையில் பரப்பி வைப்பார்கள். அது போலத்தான் விஜய்யின் மேனரிசங்களும், ஸ்டைல்களும், வசன டெலிவரிகளும், நடனங்களும், ஆக்ஷன்களும் அனைத்துமே விஜய்யின் ரசிகர்களை குறி வைத்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

விஜய்யின் நடிப்புக்காகவே உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் குடும்பம், அப்பா நடுக்கடலில் குண்டடிபட்டு செத்தது.. அவரது உடலை கடலிலேயே விட்டுவிட்டது என்று கதை சொல்லும் காட்சியில் மட்டுமே விஜய் கொஞ்சம் கண்ணைக் கசக்குகிறார். மற்றபடி அனைத்துக் காட்சிகளிலும் தில்லாலங்கடி ஆக்சன்கள்தான்..!

ஒரு மாஸ் ஹீரோவுக்கான அறிமுகத்துடன் அந்த தோற்றம் கொஞ்சமும் குறையாமல் அப்படியே கடைசிவரையிலும் வருவதுபோல விஜய்யை மாற்றுக் குறையாத தங்கமாகவே பாவித்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.

நடனக் காட்சிகளில் வழக்கம்போல.. சண்டை காட்சிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடு பக்கா மாஸ் காட்டியிருக்கிறார் விஜய். கட்சி அலுவலகத்தில் வந்து ராதாரவியுடன் சவால் விடும் காட்சி.. பழ.கருப்பையாவுடன் மேடையில் ஏற்படும் மோதல்.. போலீஸ் – பொதுமக்கள் மோதல் ஏற்படும் நேரத்தில் விஜய் தன் கொதிப்பைக் காட்டுவது.. மக்களிடத்தில் நெகட்டிவ், பாஸிட்டிவ் பற்றிக் கதை சொல்லி உசுப்பிவிடுவது.. என்று சில இடங்களில் கொஞ்சமேனும்  ஸ்கிரீனை இழுத்துப் பிடித்துப் பார்க்க வைத்திருக்கிறார் விஜய்.

செட் பிராப்பர்ட்டியை போல கையாளப்பட்டிருக்கிறார் ஒரு நாயகியான கீர்த்தி சுரேஷ். விஜய் கூடவே செல்வதும், வருவதும், ஓடுவதும், அவ்வப்போது சில கேள்விகளை கேட்பதும்.. இப்படி ‘வேலையத்த வேலைக்கு எட்டு பேர் ஓடுனாங்களாம்’ என்பதுபோல வீணடிக்கப்பட்டிருக்கிறார் கீர்த்தி.

விஜய்யின் வீட்டில் அவருடைய குடும்பத்தினர் அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும்போது, கீர்த்தி சுரேஷ் அப்பாவியாய், “எங்க அப்பா ரொம்ப நல்லவரு, கம்மியாத்தான் லஞ்சம் வாங்குவாரு…” என்று சொல்லுமிடம் நகைச்சுவையைக் கொடுத்தாலும் இத்தனை வெள்ளந்தியைத்தான் அவங்கப்பா பூத் ஏஜெண்ட்டா உக்கார வைச்சாராக்கும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை..!

ஒரு பாடல் காட்சியில் மட்டும் வாங்கின 1 கோடி ரூபாய் சம்பளத்திற்காக நடனமாடிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுக்கும் கீர்த்திக்கு நன்றி.!

இலக்கணச் சுத்தமாக தமிழ் பேசும் மகளாக.. ‘பாப்பா’ என்ற செல்லப் பெயரிலும், ‘கோமளவல்லி’ என்ற நிஜப் பெயரிலும் அழைக்கப்படும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இருந்து கொண்டு ராதாரவியிடம் விஜய் பற்றி போனில் பேசி டெம்பர் ஏற்றிவிட்டுவிட்டு கடைசியாக தன் அப்பாவுக்காக அரசியல் களத்தில் குதித்து நேருக்கு நேர் மோதுகிறார் வரலட்சுமி.

தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்காக அப்பாவை கொலை செய்து, பெற்ற தாயையும் கொல்லத் துடிக்கும் அளவுக்கு எதற்கும் அஞ்சாத கேரக்டர் ஸ்கெட்ச்சில் மன்னார்குடி மாபியா கும்பலின் தலைவியான சசிகலாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு அழுத்தக்காரியாய் நடித்திருக்கிறார் வரு சரத்குமார். நன்று..!

படத்துக்குப் படம் வித்தியாசமாய் தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கும் ராதாரவி, இந்தப் படத்தில் வாய்க்குள் எப்போதும் குண்டு மிட்டாயை ஓரத்தில் திணித்துக் கொண்டு அது தெரியாமலேயே வசனம் பேசி நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சில இடங்களில் தானாகவே நகைச்சுவையை கொணர்ந்திருக்கிறார். நன்றி..!

பழ.கருப்பையா.. முதலமைச்சர் மாசிலாமணியாக.. மக்கள் விரோத அரசுக்கு தலைமை அமைச்சர் என்கிற பெயருக்கு ஏற்றாற்போல இவர் பேசும் வசனங்களும், காட்டிய நடிப்பும் ரசிக்கத் தகுந்ததுதான். அதிலும் மேடையில் தன் அருகில் அமர்ந்திருக்கும் விஜய்யிடம் அவர் பேசும் எகத்தாள, திமிர்வாதத்தைக் காட்டும் தொனி.. ரசிக்க வைத்திருக்கிறார்.

வரு அவருக்கு பி.பி. மாத்திரை கொடுக்கும் காட்சியில் அது தனக்கான மரணத்திற்கான வழி என்பதை உணர்ந்து கொண்டாரா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு இயக்குநர் அவரை நடிக்க வைத்திருக்கிறார். இது படத்தில் இருக்கும் ஒரு சின்னக் குழப்பம்..!

வருவின் அம்மாவாக வரும் துளசி சின்னக் கேரக்டர் என்றாலும் படத்தில் மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுக்கும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேற்கொண்டு யோகிபாபு உள்ளிட்ட பல பெரிய, சின்ன நடிகர்களும் முருகதாஸின் நல்ல இயக்கத்தினால் பார்க்கத் தகுந்த அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.. நன்று..!

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் மெகா பட்ஜெட் படங்களுக்கேற்ற உழைப்பும், தரமும் தெரிகிறது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக பல நூறு பேர் கொண்டவர்களை பிரேமுக்குள் அடக்கி ஆண்டிருக்கிறார் கிரிஷ். பாடல் காட்சிகளில் கலர்புல்.. குளோஸப் காட்சிகளில் விஜய்யை இன்னும் அழகாகக் காட்டியிருக்கிறார்.

அந்த பைக் பவனி காட்சி, மேடை காட்சி, போலீஸ் தடியடி காட்சி, இவற்றிலெல்லாம் இருக்கும் பிரம்மாண்டத்தை அப்படியே ஸ்கிரீனில் கொணர்ந்திருக்கிறார் கிரிஷ். பாராட்டுக்கள்.

கலை இயக்குநருக்கு இன்னொரு பக்கம் தனி ஷொட்டு.. மாசிலாமணியின் வீடாக காட்டப்படும் நடிகர் திலகத்தின் ‘அன்னை இல்லத்தை’ இத்தனை அழகாகவும், விரிவாகவும் வேறு எந்தப் படத்திலும் காட்டியதில்லை. இந்தப் படத்தில் அக்கக்காக காட்டியிருக்கிறார்கள். உட்புற அழகையும், வெளிப்புற அழகையும் பிரேமுக்குள் கொண்டு வர கலை இயக்குநர் மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார் போலும். நன்று..!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் நான்கு பாடல்கள்.. நான்கும் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிடும் ரகம். தியேட்டருக்குள் மட்டுமே கேட்க முடிந்தது. ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதுதான் பாடல்கள் யாருக்குமே புரியக் கூடாது என்பதற்காகவே எழுதப்படுகிறதே..!? ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் காட்சி வடிவத்தில் கதையையும் நகர்த்தியிருப்பதால் பார்க்க முடிகிறது. ‘சிமிட்டங்கரானுக்கு’ என்ன அர்த்தம் என்று பாடலாசிரியரையும், இயக்குநரையும்தான் கேட்க வேண்டும்..!

படத் தொகுப்பாளர் Sreekar Prasad, தன் முன்னே அள்ளிக் குவித்த காட்சிகளை திரைக்கதையோடு, இயக்கத்தோடு நமக்கும் எளிதாக புரிய வேண்டுமே என்பதற்காக நிறையவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். அப்படியிருந்தும் சில காட்சிகளை மேன்மைப்படுத்த இன்னமும் கவனத்துடன் இருந்திருக்கலாம்.

கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் காட்சியில் கவர்னரே மறு தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சொல்வது முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் வருகிறது. இது நிச்சயமாக எளிய மக்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. அடுத்தக் காட்சியில்தான் வேறொருவர் இதை தமிழில் சொல்கிறார். அந்தக் காட்சியின் வீரியம் இதனாலேயே குறைந்து போய்விட்டது. அதேபோல் நீட்டி நிமிர்ந்த சில காட்சிகளில் கத்திரியை வைத்து இன்னமும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் நீட்டாக இருந்திருக்கும்..!

உடை வடிவமைப்பாளருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும். படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் காட்சிக்கு, காட்சி ரிச்சாக இருப்பதுபோலவும், கவர்வதுபோலவும் உடையலங்காரத்தை அளித்திருக்கிறார். இதுவும் ஒரு கவன ஈர்ப்பாகவே இருக்கிறது..! பாராட்டுக்கள்..!

‘கத்தி’ படம் போல வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயமோகனை வசனமெழுத வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். ஆசானும் வஞ்சகம் வைக்காமல் எழுதியிருக்கிறார் போலும்.. ஆனால் ‘வசனம்’ என்னும் இடத்தில் ‘முருகதாஸ்’, ‘ஜெயமோகன்’ என்று இருவர் பெயரும் இருப்பதால் யாரை பாராட்டுவது என்பது தெரியாததால் இந்தப் பாராட்டுக்களை சாய்ஸிலேயே விட்டுவிடுகிறோம்.

நாயகன் விஜய்க்கு பொருத்தமான கேட்ச்சிங்கான பெயராக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய கூகிளின் தலைவர் சுந்தர் பிச்சையில் இருந்து சுந்தரையும், ஜெயமோகனின் பிரியத்துக்குரிய எதிரியான இலக்கிய பிரம்மா சுந்தர ராமசாமியின் பெயரில் இருந்து ராமசாமியையும் சேர்த்து வைத்து சுந்தர் ராமசாமியாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனால் சொல்லப்பட்டு, ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஜெயலலிதாவின் உண்மைப் பெயரான ‘கோமளவல்லி’ பெயரை வில்லியான வரலட்சுமி சரத்குமாருக்கு வைத்திருப்பதும் ஒரு குதர்க்கமான செயல்தான். ஆனால் ஜெயலலலிதா இருந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் தைரியசாலிகள் என்று இவர்களை பாராட்ட முடியவில்லை..!

“நம்பர் 2 பொசிஷன்ல இருக்கற உனக்கே இவ்ளோ அலம்பல் இருந்தா நம்பர் 1 பொசிஷன்ல இருக்குற எனக்கு எவ்ளோ இருக்கும்..?” என்று ராதாரவியிடம் சீறுகிறார் ‘இளைய தளபதி’ விஜய்.

“மக்கள் சாகவே கூடாதுன்னு அரசாங்கம் நினைக்கல. கலெக்டர் ஆபிஸ் முன்னால வந்து பிரச்சனை பண்ணக் கூடாதுன்னுதான் நினைக்கறாங்க…” என்கிறார் டிரைவர்.

“நம்ம நாட்டுல பிரச்சனைக்கு தீர்வு தேவை இல்லை ஸார்.. இன்னொரு பிரச்சனைதான் தேவை.. அன்னைக்கு மக்கள் டைவர்ட் ஆனா போதும்ன்னுதான் அரசு நினைக்குது..” என்கிறார் கந்துவட்டிக் கதையைச் சொல்லும் டிரைவர்.

”அஸ்தியைக் கரைக்குற கடல்ல… என் அப்பாவைக் கரைச்சோம்” என்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மகனான சுந்தர் ராமசாமி என்கிற விஜய்.

“திருடனை பிடிக்கிறது மட்டுமே சட்டத்தோட வேலை இல்லை. திருடப்பட்ட பொருளை உரியவங்களுக்கு திருப்பித் தர்றதும் சட்டத்தோட கடமைதான்..” என்று தலைமை நீதிபதியிடம் வாதாடுகிறார் விஜய்யின் வழக்கறிஞர்.

“1000 ருபா திருடுன திருடனைப் பிடிக்க போலீஸ் 10,000 ருபா செலவு பண்றதில்லையா ஸார்..? அது மாதிரிதான் இதுவும்.. 9000 ருபா நட்டம்னு நினச்சா அந்தத் திருடன் வாழ்நாள் பூரா திருடீட்டேதான் இருப்பான்…” – நீதிமன்றத்தில் “திரும்பவும் தேர்தல் வைச்சா எவ்ளோ செலவாகும் தெரியுமா..?” என்று நீதிபதிகள் கேட்கும் கேள்விக்கு, நாயகன் விஜய் இப்படித்தான் பதில் சொல்கிறார்.

“கண்ட்டெய்னர்ல கோடி, கோடியா பணத்தை கடத்துனவங்க எல்லாரும், அது என்னாச்சுன்னு தெரியாமலேயே மாசக் கணக்கா பெட்ல இருந்தே செத்துப் போய்ட்டாங்க..” என்று மறைமுகமாக ஜெயலலிதாவை தாக்கியிருக்கிறார்கள் முருகதாஸும், ஜெயமோகனும்..!

“நம்ம ஜனங்கள்ல பாதிப் பேரு முட்டாளுங்க; இல்ல.. ஸாரி.. நம்ம ஜனங்கள்ல பாதிப் பேரு புத்திசாலிங்க.. பாத்தீங்களா..? ஒரே விஷயம்தான்.. ஆனால் சொல்ற விதத்துலதான் வேறுபடுது..” என்று மக்களையே கிண்டலடிக்கிறார் கார்ப்பரேட் கிரிமினலான விஜய்.

”அவன் கார்ப்பரேட் கிரிமினல்ன்னா நான் கருவுலயே கிரிமினல்..” என்கிறார் வரு சரத்குமார்.

“நெகடிவ்வா சொன்னால்தான் ஒரு விஷயம் ஜனங்களுக்கு போய்ச் சேரும்..” என்கிறார் விஜய்.

“எதிர்க்க ஆளே இல்லைன்னு இறுமாப்போட இருக்கறதுதான் ஜனநாயகத்தோட முதல் பலகீனம்..” என்கிறார் விஜய்..!

“மற்ற மாநிலத்தில் எல்லாம் சமூக அக்கறைக்காக போராடி உயிரை விட்டவங்க யாருன்னு கேட்டா நாற்பது வருஷம் முன்னாடி செத்தவரை சொல்வாங்க. ஆனா,  நம்ம மாநிலத்துல கேட்டா போன மாசம் செத்தவங்கன்னுகூட  சில பேரை சொல்வோம். இதைச் சொல்றதுக்கு வருத்தமா இருந்தாலும் பெருமையாவும் இருக்கு…” என்கிறார் விஜய்.

“ஆட்சிக்கு வந்தால் எது வேணாலும் பண்ணலாம்னு நினைக்கிற அரசியல்வாதிங்களோட திமிரை அடக்கணும்.. நானும் அடக்கறேன்..” என்று கொதிப்போடு சொல்கிறார் விஜய்..!

இப்படி படம் நெடுகிலும் ஆங்காங்கே விட்டுவிட்டு சில வசனங்களால் இன்றைய அரசியல்வியாதிகளை வாரியிருக்கிறார்கள் முருகதாஸும், ஜெயமோகனும்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும்தான் இவர்களது டார்கெட் என்பது தெள்ளத் தெளிவு. கண்டெய்னர் மேட்டரில் ஜெயலலிதாவை மறைமுகமாகச் சாடும் விஜய். ராதாரவி மூலமாக கருணாநிதியை மோசமான ஒரு தலைவராக சொல்ல வைத்திருக்கிறார். “என் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் டாக்டர் கலைஞர்…” என்று மேடைக்கு மேடை சொல்லியிருக்கும் ராதாரவிதான், தன் தானைத் தலைவனைத்தான் இந்த வசனத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தே பேசியிருக்கிறார். எல்லாம் பணம் செய்யும் வேலை.. பணத்திற்கு முன்பு தலைவனாவது..? கட்சியாவது..?

இதே ராதாரவிதான் சில ஆண்டுகளுக்கு முன்பாக சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ‘இந்தியா டுடே’ இதழில் கிண்டலடித்து எழுதியிருந்த ஜெயமோகனை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் ஜெயமோகனை வறுத்தெடுத்திருந்தார். ‘ஜெயமோகனை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன்’ என்றெல்லாம் சொல்லியிருந்தார் ராதாரவி. இப்போது ஜெயமோகன் எழுதிய வசனத்தையே பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு..! இதைத்தான் காலத்தின் கோலம் என்பார்களோ..?!

வசனங்களை தவிர மற்றபடி இன்றைய நாட்டு நடப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்து அதில் பல அரசியல் சம்பவங்களையும், விஷயங்களையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் கோர்த்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.

விஜய்யின் ஒரு விரல் புரட்சி, தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்கச் சொல்லி நீதிமன்றத்திற்கு செல்வது.. மறு தேர்தலுக்குத் தானே காரணமாய் இருப்பது.. மாநிலம் முழுவதிலும் இது போன்று பாதிக்கப்பட்டவர்களை ஒன்று சேர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட வைப்பது.. தானே வேட்பாளராகக் களத்தில் குதிப்பது, கடைசியாக 234 தொகுதிகளிலும் ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவது என்னும் அரசியலை சுத்தமா நினைக்கும் திரைக்கதை சாதாரண பொது ஜனங்களை ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

அதிலும் விஜய் தேர்வு செய்யும் மக்கள் வேட்பாளர்களாக, சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், ஆசிரியை சபரிமாலா, பேராசிரியை சரஸ்வதி, திருநங்கை கல்கி, மற்றும் உ.சகாயம் போன்ற ஒரு ரிட்டையர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று நிகழ்கால ஆளுமைகளையும், சமூக ஆர்வலர்களையும் அடையாளப்படுத்தும்விதமாக காட்சிகளை வைத்திருப்பதும் பாராட்டுக்குரியதுதான்..!

அதோடு நெல்லையில் கந்து வட்டிக்காக ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம், பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த கண்டெய்னர் பணம், சென்ற சட்டமன்றத் தேர்தலின் கடைசி நேரத்தில் தி.மு.க. மீது அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. மீது தி.மு.க.வும் சுமத்திய அதிரடி குற்றச்சாட்டுக்கள்.. என்று எல்லாவற்றையும் தகுந்த இடத்தில் தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர்.

தமிழகத்தில் இருக்கும் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒன்றாக இருக்கும் 32 பிரச்சினைகளையும் தொகுத்து இத்தனைக்கும் பிரச்சினை கண்டால்தான் தமிழகம் சுபிட்சமாகும் என்று பேசியிருப்பது விஜய்யின் அரசியல் அவா என்பது தெள்ளத் தெளிவாகிறது. ‘மீத்தேன்’, ‘ஹைட்ரோ கார்பன்’, ‘மீனவர்’, ‘நியூட்ரினோ’, ‘8 வழி சாலை’, ‘டோல்கேட்’, ‘மணல் கொள்ளை’, ‘சுரங்கக் கொள்ளை’ என்று தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் மக்கள் விரோத திட்டங்களை பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தலில் நிற்பதாக முடிவு செய்த பிறகு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒருங்கிணைக்கும் பணிக்காகவும், தங்களது அமைப்பின் கொள்கைகளை பறைசாற்றவும் விஜய் துவக்கும் புதிய இணையத்தளத்தின் பெயராக ‘சாட்டை.காம்’ என்று வைத்திருப்பதும் ஒரு பெருமைக்குரிய விஷயம்தான். நண்பர் சவுக்கு சங்கரின் ‘சவுக்கு.காம்’-ஐ இது நினைவுபடுத்துகிறது என்பதில் அனைவருக்கும் பெருமைதான்..!

ஆனாலும் திரைக்கதையில் பலவித நாலாவித ஓட்டைகளையும் சொருகி வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.

கதைப்படி கீர்த்தி சுரேஷ், விஜய்யின் அண்ணனான பிரேமின் மனைவியின் தங்கை. பிரேமும், கீர்த்தியின் அக்காவும் டைவர்ஸாகிவிட்டார்கள். ஆனாலும் விஜய்யும், கீர்த்தியும் மட்டும் நட்பாக இருக்கிறார்கள். பழ.கருப்பையாவின் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் லிவிங்ஸ்டன், கீர்த்தி சுரேஷின் அப்பாவாம்.

விஜய் ஓட்டுப் போட வரும் பூத் உள்ள தொகுதியில்தான் லிவிங்ஸ்டன் போட்டியிடுகிறாராம். அதனால் கீர்த்தி சுரேஷ் அங்கே பூத் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார். எல்லாம் ஓகேதான். ஆனால் இதற்கடுத்து விஜய் போகும் இடங்களிலெல்லாம் கீர்த்தியையும் சேர்த்தே அழைத்துப் போகிறாரே.. இது எதற்கு..? இவர்களுக்குள் காதல்.. அதனால்தான் என்றாலும் கட்சி, அரசியல் என்ற லாஜிக் இடிக்கிறதே..!?

கீர்த்தி, தன் கட்சிக்காரரான லிவிங்ஸ்டனின் மகள் என்பது ராதாரவிக்கும், பழ.கருப்பையாவுக்கும் தெரியாதா..? வரு சரத்குமாருக்கும் தெரியாதா..? அவர்கள் ஏன் அதனைக் கடைசிவரையிலும் கண்டு கொள்ளாமலேயே இருந்தார்கள் என்பதே புரியவில்லை.

இதில் விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்ச்சே ஏற்க முடியாததாக இருக்கிறது. விஜய் தனக்குத்தானே சொல்லிக் கொள்வது “தான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்ஸ்..” என்றுதான். ஒரு கிரிமினல் எப்படி இன்னொரு வகையான கிரிமினல்ஸைவிடவும் மேம்பட்டவனாகவும், நல்லவனாகவும் இருக்க முடியும்.?

விஜய்யை பற்றி பல சாப்ட்வேர் நிறுவனங்களின் தலைவர்களும், வரு சரத்குமாரும் சொல்வது அவர் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே அவர் கண் வைக்கும் கம்பெனிகளை கபளீகரம் செய்வார் அல்லது அழித்துவிடுவார் என்பதுதான். அப்பேர்ப்பட்ட கிரிமினல் எப்படிங்க தன்னுடைய சொந்த நாட்டில் மட்டும் திடீர், குபீர் நல்லவராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வார்..?

அதிலும் அவரது முதல் காட்சியே லாஸ் வேகாஸில் பப்பில் ஆடிப் பாடுவதுதான். அது முடிந்தவுடன்தான் ஐயா தாயகம் திரும்பி ஓட்டுப் போட வருகிறாராம். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா..? அதோடு திடீர், திடீரென்று கீர்த்தியுடன் பேசும்போது சுணக்கமாகவும், சின்னப்புள்ளத்தனமாகவும் பேசுவதெல்லாம் அவரது கெத்தான கேரக்டருக்கு சறுக்கலாய் அமைந்திருக்கிறது.

நீதிமன்றத்தில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற வழக்கு இருக்கும்போது எந்த கவர்னர் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முன் வருகிறார்..? வருவார்..? அதே விழாவுக்கு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் வர மாட்டார்களா என்ன..? இங்கே பதவியேற்பை வைத்துக் கொண்டு அங்கே வழக்கை எப்படி விசாரிப்பார்கள்..?

அதிலும் தலைமை நீதிபதி, தன் செல்போனில் கவர்னரை அழைத்து தான் தேர்தலை ரத்து செய்துவிட்டதாகச் சொல்வதாக வைத்திருக்கும் காட்சி, ‘ஸ்ப்பாபா’ என்று சொல்ல வைக்கிறது.

அதிலும் பதவிப் பிரமாணம் துவங்கி நான்கு வரிகளைச் சொல்லிய பின்பு போன் வருகிறதாம். கவர்னர் உடனேயே பதவிப் பிரமாணத்தை நிறுத்திவைத்துவிட்டு போனை எடுத்து பேசுகிறாராம்.

ஒரு கவர்னர் முதலில் தன் செல்போனை தன் கையிலேயே வைத்திருப்பதை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா..? அந்த மேடையில் பதவிப் பிரமாண பேப்பரைத் தவிர வேறு எதுவும் இருக்காது. இருக்கவும் முடியாது.

எந்தவொரு நீதிபதியும் அவசரத்தனமாகவே இருந்தாலும் தொலைபேசி மூலமாக யாருக்கும் தீர்ப்பு பற்றிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இதில்…!? தோள் மீது ஏறி அமர்ந்து காது குத்துவது போன்றதுதான் இந்தக் காட்சி. சாதாரண பொது ஜனங்கள்கூட இதனை ஏற்க மாட்டார்கள் மிஸ்டர் முருகதாஸ்..!

முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் போர் என்று சொல்லும் அளவுக்குத்தான் காட்சிகள் இருக்கின்றன. முருகதாஸுக்கே உரித்தான விறுவிறு காட்சிகளும், திரைக்கதையின் உசுப்பேற்றல்களும் இல்லாதது மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

அவ்ளோ பெரிய கட்சி மீட்டிங்கில் இத்தனை பேரை அலட்சியமாக உள்ளே விடுவார்களா என்ன..? உள்ளே விட்டாலும் சம்பந்தமே இல்லாமல் மேடையேறி பொறுப்பு முதல்வரின் அருகில் அமர முடியுமா..? இப்படியெல்லாம் லாஜிக் மீறல்கள் எல்லை தாண்டி போயிருக்கின்றன.

அதேபோல் ஒரு நபர் வெறும் 14 நாட்கள் இடைவெளியில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் 8 கோடி மக்களின் அபிமானத்தையும், வாக்குகளையும் பெறுவது நடக்குற காரியமா..? பகல் கனவில்கூட இப்படி யாரும் காண மாட்டார்கள்..! சமூக வலைத்தளங்களால் இதனை செய்ய முடியும் என்று நினைத்தால் இதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் இப்படியொரு சம்பவம் நடந்தால் எப்படியிருக்கும் என்கிற கனவை மட்டுமே நம்மில் விதைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பிரச்சினையை கிளப்புவதுபோல செய்து ஓட்டளிக்கும் தினத்தன்று மக்களின் மன நிலையை மாற்றுவதெல்லாம் மக்களின் பகல் கனவு லிஸ்ட்டில்தான் போய் முடியும்..! ஆனால் அந்தத் திரைக்கதையில் கொஞ்சம் ரசிக்கக் கூடிய டிவிஸ்ட்டுகள் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.

அதே சமயம் ஜல்லிக்கட்டு, வெள்ள மீட்பு போன்ற சம்பவங்களை அழுத்தமில்லாத காட்சிகளில் சேர்த்து சொல்லியிருப்பதும் நமக்கு ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி “ஒருவரின் ஓட்டை கள்ள ஓட்டுப் போட்டுவிட்டால் அதற்குப் பதிலாக பதிலி ஓட்டினை சம்பந்தப்பட்டவர்கள் உடனேயே போடலாம்” என்கிற தேர்தல் கமிஷனின் 49-பி சட்டப் பிரிவு பற்றி அறிமுகமும், தெளிவும்.. தமிழகம் முழுவதிலும் உள்ள வாக்காளப் பெருமக்களுக்கு இத்திரைப்படம் மூலமாய் போய்ச் சேர்ந்திருக்கிறது.

இதற்காக படத்தின் உண்மையான கதாசிரியரான வருண் ராஜேந்திரனுக்கும், நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

இந்த ‘சர்கார்’ அரசியல் படம் என்றாலும்கூட பொது ஜனங்களால் நம்ப முடியாத அரசியலையும், அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் நேர்மையான, ஜனநாயகமான அரசியலையும் ஒரு சேர கொடுத்திருக்கிறது..!

விஜய்யின் வெற்றி பட வரிசையில் இத்திரைப்படம் சேர்கிறதோ இல்லையோ.. விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இது இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!

இந்த ‘சர்கார்’ ஒரு ‘காபந்து சர்கார்’தான்..!

Our Score