‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, இன்று நடைபெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.
மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி. கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.
கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளன.
இந்த ‘சர்தார்’ படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.
இந்தத் தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து, எட்டுத் திக்கும் ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது.
இந்நிலையில் இந்த ‘சர்தார்’ படத்தின் வெற்றி விழா இன்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்” என்றார்.
கார்த்தியின் இந்த அறிவிப்பையடுத்து அவரது ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பரப்புரை செய்து வருகின்றனர்.









