உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில், இமான் இசையில், எழில் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.
பிரமாண்டமான ‘பாகுபலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போதே வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
குறிப்பாக பி, சி சென்டர்களில் அமோக வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து எந்த கவலையும் இல்லாமல் வாய் விட்டு சிரித்து விட்டு போகிறார்கள்.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக் குழுவுடன் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களான கடலூர் கிருஷ்ணாலயா துரைராஜ், வட ஆற்காடு விநியோகஸ்தர் ஸ்ரீனிவாசன், கோயமுத்தூர் விநியோகஸ்தர் ராஜமன்னார், மதுரை விநியோகஸ்தர் குணசேகரன், ஐ டிரீம்ஸ் திரையரங்கு உரிமையாளர் மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
‘சரவணன் இருக்க பயமேன்’ ரிலீஸுக்கு முதல் நாள் வரை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா..? என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக ‘பாகுபலி’ ஓடிக் கொண்டிருக்கும்போது தைரியமாக ரிலீஸ் செய்தார் உதயநிதி. படமும் வெற்றியை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது என தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்.
“படத்தை குறித்த விமர்சனம் வேறுவிதமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடித்து போய் விட்டது. வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இயக்குநர் எழில் ரசிகர்களின் நாடி துடிப்பை சரியாக கணித்து வைத்திருக்கிறார்.
‘எம்புட்டு இருக்கு ஆசை’ பாடலை இமான் ஸார் யாருக்காக இசைத்தார் என்பது இப்போதுவரையிலும் சந்தேகமாவே இருக்கு. அது உதயநிதிக்காக போட்டதா அல்லது ரெஜினாவுக்காக போட்டதான்னே தெரியலை.. ஆனால் அதையும் அத்தனை அழகாக படமாக்கியிருந்தார் எழில் ஸார்..” என்றார் நடிகர் சாம்ஸ்.
நடிகர் சூரி பேசும்போது, “எழில் இருக்க பயமேன், எழில் ஒரு மினிமம் கேரண்டி இயக்குநர். எழில் சார் என்ன கொடுப்பார் என ரிலீஸுக்கு முன் நினைத்தேனோ அது பட ரிலீஸுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது என உதயநிதி ஸார் திருப்தியோடு சொன்னார். உதயநிதி மாதிரி நல்ல மனிதருக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும்…” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது ‘சரவணன் இருக்க பயமேன்’. இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லையே தவிர, அவை தவறான படங்கள் இல்லை. ‘பாகுபலி’ என்கிற சுனாமிக்கு மத்தியில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யலாமா..? வேண்டாமா..? என்ற தயக்கத்தில்தான் இருந்தேன்.
என் விநியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. குறிப்பிட்ட அளவு, நல்ல திரையரங்குகளை பிடித்து கொடுத்தார்கள். இன்னும்கூட 80 திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..” என்றார்.
இந்த விழாவில் படத்தின் இயக்குநர் எழில், நாயகி ரெஜினா கஸாண்ட்ரா, நடிகர் யோகிபாபு, ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷ், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.