தமிழ் திரையுலகம் தோன்றிய நாளில் இருந்தே அம்மா கதாபாத்திரத்துக்கும், அம்மா செண்டிமெண்டுக்கும் ஏகப்பட்ட முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு நாயகி அம்மாவாக கோலோச்சி கொண்டு இருப்பார் . அந்த வகையில் இப்போது சரண்யா பொன்வண்ணனின் காலம் என கூறலாம்.
எல்லா உச்ச நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், தற்போது triple v records என்ற நிறுவனத்தின் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் ‘என்னமோ நடக்குது’ படத்தில் வினோத் வசந்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
இந்த கதாபாத்திரம் பற்றி அவரிடம் விசாரித்தால், சென்னை தமிழில்… கொச்சையான மொழியில் பதில் அளித்து அதிர்ச்சியளித்தார். கேரளாவில் பிறந்து சென்னை கான்வென்ட் பள்ளியில் படிப்பை முடித்த சரண்யாவிடம் இதை எதிர்பார்க்காததால், அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு இயக்குனர் ராஜ பாண்டி பதிலளித்தார்.
“இந்த படத்தில் சரண்யா சென்னையில் ஒரு குடிசை பகுதியைச் சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்க உள்ளார் . இதற்காக பிரத்தியேகமாக சென்னை தமிழை கற்று கொண்டார். சில நாட்களில் கற்றுக் கொண்ட அந்த மொழியை ஏற்ற இறக்கத்துடன் வெளுத்து கட்டிக் கொண்டிருக்கிறார்” என்கிறார்.
‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் குடிசை பகுதியில் நடந்தது. இடைவிடாமல் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான, தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா எல்லா காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தாராம். அவருடன் அந்த காட்சிகளில் நடித்த விஜய் வசந்த், சரண்யா வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்று சிரமப்பட்டுவிட்டாராம்.
கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும்போது அங்கிருந்த சரண்யா உட்பட அனைவரையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த். அந்தக் காட்சியில் ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர்தான் என்பதை நிரூபித்து, தேசிய விருது பெற்ற நடிகையிடமே பாராட்டு பெற்றுள்ளார் விஜய் வசந்த்.
சரண்யா பாராட்டியது சென்னை தமிழில்தானா என்பதுதான் தெரியவில்லை.