காமெடி நடிகர் சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் ‘வல்லுவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் பாடல், டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடைபெற்றது.
அண்ணா சாலையிலேயே தேவி தியேட்டருக்குத் திரும்பும் வழியில் நடுவில் கேட்டைச் சாத்திவிட்டு வண்டிகளை உள்ளே அனுமதிக்க இடமேயில்லை என்று அலப்பறையை ஆரம்பித்துவிட்டார்கள். விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் பலரது டூவிலர்களும், கார்களும் உள்ளே அனுமதிக்கப்படாததால், சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு உள்ளே போனார்கள்.
தேவி தியேட்டர் வளாகம் முழுவதுமே சந்தானத்தின் ரசிகர் மன்றத்தினரின் தட்டிகள், போஸ்டர்கள்.. அத்தனையும் விதம்விதமாக இருந்த்து. மஹேந்திரா வேன்களில் வந்திருந்த சந்தானத்தின் வெளியூர் ரசிகர்களை தேவி தியேட்டரின் பின்பக்கம் உள்ள தெருவில் அனுமதித்ததால், அங்கே குடியிருப்பவர்களுக்கும் வேன்காரர்களுக்கும் ஏக தகராறு..
அதிகமான ரசிகர்களின் வருகையை எதிர்பார்த்து தியேட்டர் நிர்வாகம் காத்திருந்தாலும், போலீஸார் எதிர்பார்க்கவில்லை. குறைவான அளவிலேயே அவர்கள் வந்திருந்ததால் சந்தானம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு காவலர்களிடம் “நாங்க உள்ளே வர விரும்பலை. நீங்களே பார்த்துக்குங்க..” என்று சொல்லிவிட்டார்கள்.
ஒரு அளவுவரையிலும் பொறுமை காத்த ரசிகர்கள் சந்தானம் உள்ளே வந்துவிட்ட செய்தி தெரிந்தவுடன் அவர்களும் தியேட்டருக்குள் நுழைய பெரும்பாடுபட்டார்கள். மெயின் கேட்டிலும் அவர்களை அனுமதிக்காமல் போக.. மற்ற தியேட்டர்களுக்குச் செல்லும் வழியாக ஊடுறுவிய அவர்கள், தேவி தியேட்டரின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே நுழைய முற்பட்டார்கள்.
இரு தரப்பிலும் பலத்த சண்டைகள்.. வாக்குவாதங்கள்.. அடிதடிகள் எல்லாம் நடந்து முடிய… கை தட்டுவதற்காகவும், விசில் அடிப்பதற்காகவும் ஆள் வேண்டும் என்பதாலும் குறைந்த அளவு ரசிகர்களை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்கள்.
சந்தானத்தின் ஏற்பாட்டில்தான் இந்த ரசிகர் மன்ற களேபரங்கள் நடக்கின்றன என்பது புரிந்தது.. சந்தானம் அடுத்து கோடம்பாக்கத்தில் தன்னையும் ஒரு பெரிய ஹீரோவாக பலரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். சந்தானம் பேசுவதற்கு முன்பாக அவருடைய ரசிகர் மன்றத்தினரை மேடையில் அனுமதித்து ஆளுயர மாலையை அணிவிக்க வைத்தார்கள்.
இதே போலத்தான் இதே தேவி திரையரங்கில் நடைபெற்ற ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. அப்போது ‘பவர் ஸ்டார்’ தனது பவரை காட்டுவதற்காக லாரிகளில் ரசிகர்களை பிரியாணி கொடுத்து அழைத்து வந்திருந்தார். அதை அன்றைய விழாவில் கிண்டல் செய்த சந்தானம், இன்றைக்குத் தனது விழாவுக்கும் அது போலவே ஆட்களை தயார் செய்து அழைத்து வந்திருக்கிறார் என்பது எப்பேர்ப்பட்ட முரண்பாடு..!
சமீப காலமாக புதிதாக ஓவர் நைட்டில் புகழ் பெற்றுவிட்ட நடிகர்கள்தான் இந்த சில்லறை விளம்பரங்களைத் தேடி அலைகிறார்கள்.. சென்ற மாதம் ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது சிவகார்த்திகேயனின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள், செய்த கலாட்டா பத்திரிகையாளர்கள் மத்தியில் பிரசித்தம். அப்போதும் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் அனைவரும் விழாவுக்கு வந்தாக வேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தது தெரிந்தது.
இப்போது சந்தானத்தின் முறை. ‘உனக்குத்தான் ரசிகர்கள் இருக்கிறார்களா..? எனக்கு மட்டும் இல்லையா..? நான் வரவழைப்பேண்டா…’ என்று சொல்வது போலத்தான் நேற்றைக்கு நடந்த விழாவை கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே சென்ற ஆண்டே சந்தானத்தையும், சிவகார்த்திகேயனையும் இணைத்து வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க சிலர் முயன்றிருக்கிறார்கள். ஆனால் இருவருமே முடியாது என்று மறுத்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு ஈகோ பிராப்ளம் இருவருக்குமிடையில் இருக்கிறது.
பத்திரிகை பேட்டிகளில்கூட இருவரும் ஒருவரையொருவர் பெயர்களை உச்சரிப்பதைகூட தவிர்க்கிறார்கள். சினிமா நிகழ்ச்சிளில் ஒன்றுபோல் காட்சி தரவும் மறுக்கிறார்கள். இந்த ஈகோ சண்டையையெல்லாம் விஜய் டிவியைவிட்டு வெளியே வந்தவுடன் வாசலிலேயே கழட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதா..?
சூப்பர் ஸ்டார் பட்டமும், மாஸ் ஹீரோ பட்டமும் ஒரு சில படங்களுக்காக கிடைத்ததில்லை. அந்த வெற்றி அவருக்கு மட்டுமே உரித்தானது என்கிற அளவுக்கு ஒரு நடிகர் வளர்ந்த பின்புதான் அந்தப் பெயர் தானாகவே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. சந்தானமோ, சிவகார்த்திகேயனோ இதனை இன்னமும் முழுமையாக உணர்ந்தபாடில்லை..
சிவகார்த்திகேயனைவிட சந்தானம் வெளிப்படையாகவே தனது தாக்குதலை ஆரம்பித்துவிட்டார். அது அவருடைய மேடை பேச்சிலேயே ஒலித்தது. இனி சாதாரண காமெடியனாக நினைத்து யாரும் தன்னை அணுகக்கூடாது என்பதை தமிழ்த் திரையுலகத்தினருக்கு சொல்ல நினைத்திருக்கிறார். அதனை நேற்றைய விழாவில் மறைமுகமாக சொல்லிவிட்டார்.
இதன் முதல்படிதான் இந்த விழாவின் தொகுப்பாளினி ரம்யா, வார்த்தைக்கு வார்த்தை ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்று சந்தானத்தை அழைத்தது.. இந்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம்தான் தமிழ்த் திரையுலகில் எப்படியெல்லாம் நாய் படாத பாடு படுகிறது பாருங்கள்..?