ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.
ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.
ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் தன் சீடருக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார்.
“இதே சத்யம் திரையரங்கில்தான் என் முதல் படம் ‘ராஜா ராணி’யின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி. என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் சார் வாய்ப்பு கொடுத்ததால்தான் இயக்குனர் அட்லீயாக இங்கு உங்கள் முன் நிற்கிறேன்.
நிறைய கதைகள் கேட்டு அதில் ஒரு கதையாகத்தான் இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை தேர்ந்தெடுத்தேன். நான் பேய்க்கு ரொம்ப பயந்தவன். அதனாலதான் இந்த பேய் படத்தை எடுக்க நினைத்தேன்…” என்றார் தயாரிப்பாளரும், இயக்குநருமான அட்லீ.
“கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்’ என்று சொல்வது வழக்கம். இனிமேல் அதில் ‘ஒரு சினிமா எடுத்து பார்’ என்ற வாக்கியத்தையும் சேர்க்கணும். அவ்வளவு கஷ்டம் முதல் படத்தை எடுத்து முடிப்பது.
என் குருநாதர்கள் பிரியதர்ஷன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரிடமும்தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். நா.முத்துக்குமார் கடைசியாக படுக்கையில் இருந்தபோது எழுதி கொடுத்த வரிகளை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது என்றார்…” இயக்குநர் ஐக்.
“இளமையில் உடம்போடும், முதுமையில் உயிரோடும் போராடும் ஒரு மனிதன் இடையில் வாழ்க்கையோடு போராடுகிறான். அப்படி ஜீவா, அட்லீ, ஐக், விஷால் சந்திரசேகர் ஆகிய 4 இளைஞர்கள் வாழ்க்கையில் சாதிக்க போராடி கொடுத்துள்ள படம்தான் இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.’ இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார் நடிகர் தம்பி ராமையா.
“ஐக் கதை சொல்ல வந்தபோது கமல்ஹாசனின் உதவியாளர். ‘விஸ்வரூபம்’ படத்தில் வேலை செய்தவர். ஹாலிவுட் ரேஞ்சில் படம் இருக்கும் என நினைத்துதான் கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் முற்றிலும் மாறாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்…” என்றார் படத்தின் நாயகன் ஜீவா.
இந்த விழாவில் நாயகி ஸ்ரீதிவ்யா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சி.இ.ஓ. விஜய் சிங், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், நடிகர் கிருஷ்ணா, பாடலாசிரியர் விவேக், பாடகி சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.