ஒரு காலத்தில் வெற்றி பெற்று பேசப்பட்ட படங்களில் சிலவற்றுக்கு மட்டுமே காலம் கடந்து நிற்கும் தகுதியும் உண்டு. அத்தகைய திரைப்படங்கள் பல ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு செய்கிறபோதும் வெற்றி பெறும். இதற்கு சமீபத்திய உதாரணம் ‘கர்ணன்’ படம்.
இந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கிற படம் ‘சங்கராபரணம்’. 1978-ல் அதாவது 36 ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கில் வெளியான படம் இது.
இது முழுக்க முழுக்க இசை சார்ந்த படம். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்காகவே இப்போதுவரையிலும் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற படமாக இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் தெலுங்குலகில் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்து வெற்றி கண்டது இந்தப் படம்.
இந்தப் படத்தில் சோமயாஜூலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, முரளிமோகன், துளசி ஆகியோர் நடித்திருந்தனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்னிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். கே.விஸ்வநாத் இயக்கியிருந்தார்.
அந்தக் காலக்கட்டத்திலேயே தெலுங்கு மொழியிலேயே இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாகி வெற்றி கண்டது. இந்தப் படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த இயக்குநருக்கான விருது கே.விஸ்வநாத்திற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது கே.வி.மகாதேவனுக்கும், சிறந்த பாடகர் விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், சிறந்த பாடகி விருது வாணி ஜெயராமுக்கும் கிடைத்த்து.
இவ்வளவு சிறப்புமிக்க இத்திரைப்படம் மீண்டும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இரண்டே கால் மணி நேரம் ஓடக் கூடிய இந்தப் படம் தமிழில் இப்போதும் ரசிக்கப்படும் என்று அனைவருமே எதிர்பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தை நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு மேலும் மெருகேற்றி.. ஒலிக்கலவை செய்திருக்கிறார்கள். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இப்படத்தில் 12 பாடல்கள் உண்டு. இந்தப் பாடல்களை இப்படியே தமிழில் உருமாற்றியுள்ளார்கள். அன்று பாடியே அதே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், எஸ்.ஜானகியே மீண்டும் பாடியுள்ளனர். மீண்டும் இதற்கான ஒலிப்பதிவு நடந்தபோது எஸ்.பி.பி. நெகிழ்ச்சியில் கண் கலங்கி அழுதே விட்டாராம். இதில் வரும் ‘சங்கராபரணமு’ என்ற எஸ்.பி.பி. பாடிய பாடலை ஒருமுறை கேட்டால் மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும் போல தோன்றும்..!
பின்னணி இசையும் அதே மாறாத இசைக் குறிப்புகளுடன் மீண்டும் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்கு டி.ஐ. டி.டி.எஸ். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாடல்களை தமிழில் ராஜேஷ் மலர்வண்ணன் மற்றும் நாவேந்தன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்தில் நடித்திருந்த சோமயாஜூலு, ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா, இசையமைப்பு செய்த கே.வி.மகாதேவன் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமான ‘ராஜலட்சுமி’ இன்றும் ‘சங்கராபரணம் ராஜலட்சுமி’ என்றே அழைக்கப்படுகிறார். இவர் இன்றும் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடன கலைஞர் மஞ்சு பார்கவி இப்போதும் சீரியல்களில் நடித்து வருகிறார். படத்தில் சிறுவனாக நடித்திருந்த சிறுமி துளசி, இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்தில் நடித்திருக்கும் துளசி இவர்தான்..
36 ஆண்டுகளுக்குப் பிறகு மொழி மாற்றம் செய்யப்படும் ஒரே இந்தியப் படம் இந்த ‘சங்கராபரணமா’கத்தான் இருக்கும். ஸ்ரீசபகிரிவாசன் மூவிஸ் சார்பில் பி.எஸ்.ஹரிஹரன் மற்றும் டி.பி.செந்தாமரைக்கண்ணன் இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்கிறார்கள். டி.என்.ஆர்ட்ஸ் சார்பில் ரத்னம் இதனை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யவிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடக்கவிருக்கிறதாம்.
இப்படத்தின் இனிமையான பாடல்களையும் காட்சிகளையும் இந்த வீடியோவில் காணலாம் :
நன்றி : ANAND REDDY CH K