full screen background image

சங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்

சங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறையில் உருவான படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட.

இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டுள்ளார். நேரம் : 2 மணி 05 நிமிடங்கள்.

நல்ல படங்கள் எப்போதாவதுதான் வரும் என்ற நிலைமை தமிழ் சினிமாவில் தற்போது மாறி இருப்பதாகவே தோன்றுகிறது. அதன் காரணம் சென்ற வாரம் வெளியான ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’. இந்த வாரம் வெளியாகியுள்ள ‘சங்கத் தலைவன்’.

எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ என்ற நாவலைத்தான் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் படமாக தயாரித்திருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனின் உற்ற நண்பரான இயக்குநர் மணிமாறன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். வர்க்கப் போராட்டத்தையும் அதன் தீவிரத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் படம் பேசுகிறது.

அழித்தொழிப்பு’ என்னும் வார்த்தையை கிட்டத்தட்ட கம்யூனிஸ அமைப்பினரே மறந்து போயிருக்கும் நேரம் இது. அப்படியொரு அழித்தொழிப்பு மட்டுமே எளிய மக்களை அவர்களது வயிற்றில் அடிக்கும் பெரும் முதலாளிகளிடமிருந்து காப்பாற்றும் என்ற கசப்பான உண்மையை இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகன் கருணாஸ் ஓர் தறியாலையில் கூலி வேலை செய்கிறார். அங்கு அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். அண்ணன் என்று சொல்ல ஒரு தங்கையும் இருக்கிறார். ஆலையில் வேலை செய்யும்போது ஏற்படும் விபத்தில் அந்தத் தங்கையின் ஒரு கை பறிவிடுகிறது. அதனால், அந்தப் பெண்ணிற்கான நஷ்டத்தை ஆலை முதலாளி ஆன மாரிமுத்துதான்  கொடுக்க வேண்டும் என்று கருணாஸ் முதலாளியிடம் வேண்டுகிறார். ஆனால் முதலாளியே வெறும் முப்பதாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு தப்பிக்க நினைக்கிறார்.  

இதனால் கோபமான கருணாஸ் அந்தப் பகுதியின் நெசவாலைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவரான சமுத்திரக்கனியை நாடுகிறார். சமுத்திரக்கனி பெரும் முயற்சியெடுத்து மூன்று லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக மாரிமுத்துவிடம் இருந்து பெற்றுத் தருகிறார்.

சமுத்திரக்கனியுடன் கருணாஸ் கை கோர்த்தது முதலாளி மாரிமுத்துவுக்குத் தெரிய வர.. அவருடைய ஜென்ம விரோதியாகிறார் கருணாஸ். வேலையும் போகிறது. சமுத்திரக்கனியின் அட்வைஸில் இயக்கத்தில் சேர்கிறார். இதனால் அவரது காதலும் முற்றுப் புள்ளியாகி காதலிக்கு வேறு இடத்தில் திருமணமாகிறது.

ஆலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை போராட்டமாக வெடிக்க.. சமுத்திரக்கனி கைது செய்யப்படுகிறார். போராட்டத்தை வெளியில் இருந்து கருணாஸ் இயக்குகிறார். இதனால் இன்னும் கோபமாகும் மாரிமுத்து கருணாஸை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.

இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்தச் சங்கத் தலைவன்’ படம்..!

படத்தை கருணாஸ், சமுத்திரக்கனி கூட்டணி தங்கள் நடிப்பால் தாங்கிப் பிடித்து நிற்கிறார்கள். சமுத்திரக்கனி உணர்ச்சிபூர்வமாக வசனங்கள் பேசும்போது நம் கவனம் எங்கேயும் சிதறாது. அந்த அளவுக்கு எதார்த்தமான வசனத்துடன் தநது இயல்பான நடிப்பையும் தந்திருக்கிறார் சமுத்திரக்கனி..!

நள்ளிரவில் தூங்குவதற்காக சலூன் கடைக்குள் நுழையும் சமுத்திரக்கனிக்கும், கருணாஸுக்கும் இடையில் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் கம்யூனிஸம் என்றால் என்ன என்பது பற்றி சின்னப் பிள்ளைகளுக்குக்கூட வகுப்பு எடுப்பது போல இருக்கிறது. அட்டகாசம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உடலை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருவரும் பேசிக் கொண்டேயிருக்கும் அந்தக் காட்சி இயக்குநரின் இயக்கத் திறமைக்கு மிகப் பெரிய சான்று.

அடுத்து கருணாஸுக்குள் இருக்கும் க்ளாஸிக் நடிகன் இந்தப் படத்தில் அட்டகாசமாக வெளியில் தெரிந்துள்ளார். தன் முகத்தில் தன் அகத்தை திறந்து காட்டி பல காட்சிகளில் அசரடித்துள்ளார். சுனுலட்சுமி தன்னை விரும்புகிறார் என்பதை அறிந்தாலும் அதை நேரடியாகக் காட்டாமல் தனது நிலைமையை எடுத்துச் சொல்லும் அவரது பக்குவமான நடிப்பிலேயே அவரை பிடித்துப் போகிறது.

தனது தந்தைக்காக தனது தகப்பனிடம் சென்று சீறும் காட்சியும்.. தன்னை அடித்துத் துன்புறுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், “உங்கள மன்னிக்கிற அளவு நான் மகாத்மா கிடையாது.. ஆனா இன்னொருத்தர இதே மாதிரி தொடும் முன்பு நீங்க யோசிக்கனும்.. அதுக்காகவாவது நான் கோர்ட்டில் நடந்தத சொல்வேன்…” என்று உறுதியுடன் சொல்லும் காட்சியிலும் மனிதர் ஏகத்திற்கும் அப்ளாஸ் வாங்குகிறார்.

நாயகிகளான ரம்யாவும், சோனுல‌ஷ்மியும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். ரம்யா தனக்கு முற்றிலும் அன்னியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சோனுலட்சுமி மிக இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக தனது நடிப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

ஊதாரி அண்ணன்.. புரிந்து கொள்ளாத அம்மா.. கிரிமினிலான சித்தப்பா மாரிமுத்து.. இந்த மூவரிடையேயும் இவர் மாட்டிக் கொண்டு தவிப்பது பரிதாபத்தை வரவழைக்கிறது.

படத்தில் இன்னொரு பக்கம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் ஆலை முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து. மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். அதிகார வர்க்க முதலாளியின் பாடி லாங்குவேஜ் அவருக்குப் பக்காவாக செட் ஆகியுள்ளது.  கருணாஸை எப்படியாவது பழி வாங்கியே தீர வேண்டும் என்ற நினைப்பில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் மிக யதார்த்தம்..!

வசனங்களே படத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. கம்யூனிஸப் பிரச்சாரமோ என்று சொல்லும் அளவுக்கு பாட்டாளிகளின் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடுத்தடுத்த காட்சிகளில் வசனங்களில் சொல்லியிருக்கிறார்கள். இது பிரச்சாரமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும் மக்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள்தான்.

“போர்க் களம் செல்லும்போது போர்க் களத்திலேயே ஆயுதம் தேடிக் கொள்பவனே உண்மையான வீரன்..”

“ரொம்ப பேசினா என்னைய அர்பன் நக்சலாக்கி விடுவார்கள்..”

“அடிமை ஒரே நாளில் விற்கப்படுகிறான். பாட்டாளி ஒவ்வொரு நாளும் சுரண்டப்படுகிறான்.”

“பெண்களின்றி எந்த போராட்டமும் வென்றதில்லை”

“தொழிலாளிக்கான அநீதி என்பது சும்மா மேடைப் பேச்சுன்னு நினைச்சேன்.. அது எனக்கே நடந்தப்பதான் அது எவ்வளவு பெரிசுன்றதை உணர்ந்தேன்..”

இது போன்ற வசனங்கள் இதுவரையிலும் பொதுவுடமை இயக்கம் பற்றி அறியாதவர்களுக்குக்கூட  தெரிய வைத்துவிடும். இந்த வசனங்களுக்காகவே இயக்குநருக்கு இன்னுமொரு பாராட்டுக்கள்..!

நடிகர்களின் தேர்விலேயே படம் பாதிக் கிணறைத் தாண்டி விட்டது. இயல்பான திரைக்கதையிலும் படம் சொல்ல வந்திருக்கும் சாரத்திலும் படம் முழுக் கிணறையும் தாண்டியுள்ளது.

இந்த அழகான திரைக்கதையோட்டத்துக்கு சிறப்பான பூஸ்ட் கொடுத்துள்ளது ராபர்ட்டின் பின்னணி இசை. ஒளிப்பதிவும் போராட்டத்தின் வீரியத்தை சூரியன் போல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தொட்டதிற்கு எல்லாம் மக்களை வஞ்சிக்கும் அதிகார வர்க்கம் கொடி கட்டி திமிராக ஆடும் இந்த நேரத்தில்.. மக்கள் போராட்டத்திற்கு முன் அதிகாரங்கள் எல்லாம் வெறும் சாம்பலுக்குச் சமம் என்று உரக்கச் சொல்லியிருக்கும் சங்கத் தலைவன்’ படத்தை நாம் கொண்டாடியே தீர வேண்டும்.

Our Score