ஆதார் அட்டை வாங்கலியா என்று கல்யாண சாப்பாடுக்கு ஆர்டர் பிடிக்கும் ஸ்டைலில் மத்திய அரசு இதுவரையிலும் 10000 கோடிவரைக்கும் செலவு செய்து விளம்பரம் செய்து வருகிறது. இதே ஆதார் என்ற டைட்டிலேயே உருவாகியிருக்கும் படத்தில், மத்திய, மாநில அரசுகளை ஒரு பிடி பிடித்திருக்கிறார் இதன் இயக்குநர்.
அங்காடி தெரு மகேஷ், மித்ரா, மலையாள நடிகர் மது, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. நேரடி தமிழ்ப் படமாம்.. ஆனால் மலையாள வாடையடிக்கும் இயக்குநர்.. தயாரிப்பாளரும் மலையாளம்தான்..!
“விவாசாயக் கடனா 30000 ரூபா தர மாட்டீங்க. ஆனா அந்நிய நாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாயை கடனா தர்றேன்னு சொல்றீங்க.. அப்போ உள் நாட்டுல வாழுற நாங்கெல்லாம் இளிச்சவாயனுகளா?” என்று பொங்குகிறார் ஹீரோ மகேஷ்..
“விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்துட்டானுக.. காங்கிரீட் கட்டிடம் கட்டிட்டானுக.. போற போக்கை பார்த்தா கல்லைக் கரைச்சு. சிமெண்ட்டை அரைச்சுதான் திங்கணும் போலிருக்கு..” என்று ஒருவர் புலம்புகிறார்..
“தீவிரவாதியையும், தீவிரவாதச் செயலையும்விட கொடியது ஒரு நல்லவனின் மெளனம். நாங்க எல்லாரும் அமைதியா இருக்கிறதாலதான இப்படி ஆட்டம் போடுறீங்க.. எங்க பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.. நாங்க பொங்கி எழுந்தோம்ன்னா நீங்க தாங்க மாட்டீங்க..” என்று ஸ்கிரீனில் பொங்கி எழுந்துவிட்டார் சமுத்திரக்கனி..!
தற்போதைக்கு நாட்டைப் பீடித்திருக்கும் லஞ்சம், ஊழல், விவசாயப் புறக்கணிப்பு இதையெல்லாம் பற்றித்தான் இந்தப் படம் அலசுகிறதாம்.. ‘ஆதார்’ என்றால் இந்தி மொழியில் ‘ஆதாரம்’ என்று அர்த்தமாம். அதனால்தான் இந்தப் பெயரை வைத்திருப்பதாகச் சொன்னார் இயக்குநர்..!
இதையெல்லாம் தாண்டி மித்ராவுடனான டூயட் பாடலின் பின்னணியில், இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து அழகு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
வெகு நாட்கள் கழித்து இந்தப் படத்தில்தான் ஹீரோயின் உதட்டசைவை வைத்தே பாடல் வரிகளை கண்டறிய முடிந்தது.. மிச்ச, சொச்ச படத்திலெல்லாம் பாடல் காட்சிகளில் முகத்தைத் தவிர மீதியெல்லாத்தையும் காட்டுறாங்க. இதுலதாங்க மித்ரா மற்றும் மகேஷின் பாடல் வரிகளின் உச்சரிப்புகூட மிக நுணுக்கமாக குளோஸப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.. வெல்டன் டைரக்டர்..! பாராட்டுக்கள்..!