full screen background image

விஜய் ஆண்டனிக்கு இதுவரையில் கிடைக்காத கெமிஸ்ட்ரி..!

விஜய் ஆண்டனிக்கு இதுவரையில் கிடைக்காத கெமிஸ்ட்ரி..!

2012-ல் ஜீவா ஷங்கரின் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த படம் ‘நான்’. இந்த படம் பரவலாகப் பேசப்பட்டதென்பதால் உடனடியாக அடுத்தப் படத்தைத் துவக்கிவிடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் சாகவாசமாக 2 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ‘சலீம்’ என்ற படத்தைக் கொண்டு வந்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

‘நான்’ படத்தில் இந்துவாக இருக்கும் விஜய் ஆண்டனி, சலீமாக உருவெடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இப்போது அதே சலீம் டாக்டராகி வெளியில் வந்த பின்பு நடக்கும் தொடர் கதைதான் இந்த ‘சலீம்’ படமாம். ஆக.. “இது நான் படத்தின் இரண்டாம் பாகமா..?” என்று கேட்டதற்கு “அப்படியும் வைச்சுக்கலாம்…” என்று வித்தியாசமாகவே பதில் தந்தார் விஜய் ஆண்டனி.

யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காத ஒருவன் ஒரு நாளில் திடீரென்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்த ‘சலீம்’ படத்தின் கதையாம். “இனி படங்களுக்கு இசையமைக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஏன்னா நான் நடிக்கவே விரும்புகிறேன். நடிப்பது ரொம்ப ஈஸியா இருக்கு.. எனது அடுத்த படமான ‘இந்தியா-பாகிஸ்தான்’ படத்துக்கும் நான் மியூஸிக் போடலை. இன்னொருத்தர்தான் இசையமைக்கப் போறார்..” என்றார் விஜய்.

படத்தின் டைட்டிலே உருது மொழி எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு கூடவே வரும் இஸ்லாமிய இசையும், பாடலும் மனதை ஒருநிலைப்படுத்துவதாகவும் கூறினார். இளையராஜா இசையமைத்த ‘ஜன்னி ஜன்னி’ பாடலைக் கேட்டால் எனக்கு அப்படியொரு பக்திமயமான உணர்வு ஏற்படும். இத்தனைக்கும் அதில் வரும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அது மாதிரியே இந்த உருதுப் பாடலும் கேட்பவர்களை நிச்சயம் உருக வைக்கும். இந்த உருது பாடலின் வார்த்தைகளை தமிழாக்கம் செய்து யூடியுபில் வேறு காட்சிகளோடு வெளியிடுவேன்…” என்றார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன் விஜய் ஆண்டனிக்கு ‘இசைய தளபதி’ என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார். அது பற்றியும் பேசிய விஜய், “எனக்கு அது மாதிரியான பட்டமெல்லாம் தேவையில்லை. ச்சும்மா விஜய் ஆண்டனின்னு கூப்பிட்டால்கூட போதும்..” என்றார் தன்னடக்கத்துடன்..!

கடைசியாக அவர் பேசியதுதான் வில்லங்கம். “படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளான அக்சாவும், அஸ்மித்தும்தான்.. ஏதோ கெமிஸ்ட்ரி.. கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க.. எனக்குத்தான் அது இதுவரைக்கும் செட்டாகலை.. இப்பத்தான நாம ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் ரெண்டு, மூணு படம் முடியட்டும். அப்பவாவது வருதான்னு பார்ப்போம்..” என்றார்.

இந்த ‘கெமிஸ்ட்ரி’ ஏதும் வில்லங்கத்தில் போய் முடியாமல் இருக்கட்டும்..!

Our Score