full screen background image

110 நாள் படப்பிடிப்பு; 2,28,700 அடி நீளத்திற்கு படமாக்கப்பட்டுள்ள ‘சகுந்தலாவின் காதலன்’ திரைப்படம்..!

110 நாள் படப்பிடிப்பு; 2,28,700 அடி நீளத்திற்கு படமாக்கப்பட்டுள்ள ‘சகுந்தலாவின் காதலன்’ திரைப்படம்..!

சன் தொலைக்காட்சி நிறுவனம் தனது சினிமா தயாரிப்பு துணை நிறுவனமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்து அதன் வாயிலாக வாங்கி, வெளியிட்டு மாபெரும் வெற்றியை அடைந்த முதல் படம் ‘காதலில் விழுந்தேன்’.

இந்த ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் இயக்குநரான பி.வி.பிரசாத், இப்போது ‘பிரசாத் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ‘சகுந்தலாவின் காதலன்’.

இந்தப் படத்தில் பிரசாத்தே ஹீரோவாக நடித்துள்ளார். ‘தாமிரபரணி’ பானு, சரயு, மனோசித்ரா என்று மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான பசுபதி, கருணாஸ். சுமன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெகன், மனோபாலா, ராஜ்கபூர், ஜார்ஜ், மிப்புசாமி மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, ஒளிப்பதிவு – ராசாமதி, படத் தொகுப்பு – வி.டி.விஜயன், என்.கணேஷ்குமார், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், ஆக்சன் பிரகாஷ், கலை இயக்கம் – சகு, நடனம் – பாபி ஆண்டனி, ஸ்டில்ஸ் – சுகசெல்வன், தயாரிப்பு மேற்பார்வை – மோகன் கணேசன், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – பி.வி.பிரசாத்.

p.v.prasath-1

சமூக நலம் சார்ந்த கதையை, நகைச்சுவையோடு சமூக நலனை பிரதிபலிக்கும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘சகுந்தலாவின் காதலன்’ திரைப்படம்.

கதையோடு பயணிக்கும் ஒளிப்பதிவு. காட்சிகளை உயிரோட்டமாக உருவாக்கும் யதார்த்தம். கற்பனையைக் கண் முன்னே கொண்டு வரும் பிரதிபலிப்பு. வானவில் என்னும் கதையில் எட்டாவது வண்ணமாக படைத்த ஒளி ஓவியமாய், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ராசாமதி.

இந்திய மொழிகளில் இதுவரையிலும் 500 படங்களுக்கும் மேல் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய மிகப் பெரிய படத் தொகுப்பு ஜாம்பவனான வி.டி.விஜயன், இந்த ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தை என்.கணேஷ்குமாரோடு இணைந்து படத் தொகுப்பு பணியினை செய்துள்ளார். இவருடைய படத் தொகுப்பு ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தை உயர்தரமான படைப்பாக உயர்த்தியுள்ளது.

கதையோடு பயணித்த கலை அமைப்பு. பாடல்களுக்கே உரித்தான வண்ண அரங்குகள். சிறைச்சாலை அரங்குகளை அமைத்த நேர்த்தி. ‘காதலில் விழுந்தேனில்’ கலை அமைத்து பெருமைப்படுத்திய சகு இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் சண்டை பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், ஆக்சன் பிரகாஷும் மேற்கொண்டுள்ளனர். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோ படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் சுமன், பசுபதி, பிரசாத் பங்கேற்ற சண்டை காட்சியை தமிழ் மற்றும் தெலுங்கு சண்டை கலைஞர்களை வைத்து மிகப் பெரிய சண்டை காட்சியை வடிவமைத்துள்ளார் சுப்ரீம் சுந்தர்.

இதேபோல் செங்கல்பட்டு சிறை போல் உருவாக்கப்பட்ட சிறை அரங்கத்தில் நான் கடவுள் ராஜேந்திரன், ஜெ.கே.செந்தில்குமாரோடு பசுபதி மோதும் சண்டை காட்சியை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்து கொடுத்துள்ளார்.

‘மைனா’, ‘கயல்’, ‘வாகை சூடவா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பாபி ஆண்டனி, இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இப்படத்தில் வரும் கிராமிய, மேற்கத்திய, தமிழ் கலாச்சார பாடல்களுக்கு தத்துவமிக்க நடன அமைப்பை தந்து இப்படத்திற்கு பெரிதும் உதவியுள்ளார் பாபி ஆண்டனி.

sakunthalaavin kadhalan-poster-2

‘காதலில் விழுந்தேன்’ படத்தில் குத்துப் பாடல் வரிசையில் இன்றைக்கும் முடிசூடா ராணியாக திகழும் ‘நாக்க முக்க’ பாடலை எழுதி கேட்டவர்களை ஆட வைத்த இயக்குநர் பி.வி.பிரசாத், இந்த ‘சகுந்தலாவின் காதலன்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.

‘எனக்கா கேட்டேன்’ பாடலை கார்த்திக் பாடியுள்ளார். ‘மொளகா’ பாடலை வேல்முருகன் பாடியுள்ளார். ‘அழகான தஞ்சாவூர்’ பாடலை விஜய் ஏசுதாஸும், மானசியும் பாடியுள்ளனர். ‘சகுந்தலா’ பாடலை நாகை சரஸ்வதியும், பி.வி.பிரசாத்தும் பாடியுள்ளனர். ‘ஊரான் ஊரான்’ பாடலை நந்தினியும், நர்மதாவும் பாடியுள்ளனர்.

‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம் பெற்ற ‘நாக்க முக்க’, ‘தோழியா என் காதலியா’ போன்ற பாடல்களைபோல, இந்தப் படத்தில் பாடல்களும் கடல் கடந்து அனைத்து ரசிகர்களையும் ஆட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னுமொரு சந்தோஷமான விஷயம் என்னவெனில் இந்தப் படத்தின் பாடல்களை ‘வி மியூஸிக்’ நிறுவனம் வெளியிடுகிறது என்பதுதான்.

‘வி மியூஸிக்’ நிறுவனம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’யின் துணை நிறுவனமாகும்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை முதன்மையாக கொண்டுள்ள நிறுவனம் இது. இந்த நிறுவனத்தை நடிகர் விஷாலின் சகோதரியான ஐஸ்வர்யா ரெட்டிதான் கவனிக்கிறார்.

இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் படங்களின் இசையை வாங்கி வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே வெளிவந்த படங்களான ‘பூஜை’, ‘ஆம்பள’, ‘கதகளி’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, மற்றும் ‘வரவிருக்கும் துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சண்டைக்கோழி-2’ ஆகிய படங்களின் இசையையும் இந்த நிறுவனமே வெளியிடவுள்ளது.

இந்த வரிசையில் இந்த ‘சகுந்தலாவின் காதல்’ படத்தின் இசையை இந்த ‘வி மியூஸிக்’ நிறுவனம் வெளியிடுவது நிச்சயம் பெருமைக்குரிய விஷயமாகும்.

சென்னையின் மையப் பகுதிகளான தீவுத்திடல், ஈ.வி.பி. பிலிம் சிட்டி, மோகன் ஸ்டூடியோ, விக்டோரியா ஹால் ஆகிய இடங்களில் அரங்கம் அமைத்து இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் காட்சி அமைப்புகள் படமாக்கப்பட்டது. கதையில் வரும் யதார்த்த காட்சிகளுக்காக சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன.

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஸ்டூடியோக்களில் ஒன்றான ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் சிறைச்சாலை, வீதிகள், சண்டை காட்சிகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில், பாரம்பரியமும், பரபரப்பும் நிறைந்த ரயில் நிலையங்களில் ஒன்றான காச்சிகுடாவில் காதல் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதேபோல் ஆந்திராவின் முக்கிய நதிகளில் ஒன்றான கோதாவரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நெற்களஞ்சியத்தின் சின்னமான ராஜமுந்திரி சாலைகளிலும், சிறைச்சாலையிலும் படத்திற்கான முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மொத்தமாக இந்தப் படத்திற்கு 110 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 2,28,700 அடிக்கு நீளத்திற்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 75.600 அடி படச் சுருளில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1,53,100 அடி நீள படப்பிடிப்பு டிஜிட்டலில் பதிவாக்கப்பட்டது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் படச் சுருளில் படமாக்கப்பட்ட கடைசி படம் இந்த ‘சகுந்தலாவின் காதலன்’ என்பது இன்னொரு சுவையான விஷயமாகும்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தின் பெரும்புள்ளிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Our Score