ஜெயம் ரவி நடிக்கும் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தின் பெயர் ‘சகலகலாவல்லவன்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்திற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளர் கே.முரளிதரனும், இயக்குநர் சுராஜும் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார்கள்.
படத்தின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் இது குறித்து பேசும்போது, “மொதல்ல ‘அப்பாடக்கர்’ன்னு பேரு வைச்சு தயாரிச்சு முடிச்சிட்டோம். அப்புறம் கடைசீல இதே பெயர்ல வர்ற மாதிரி வேற, வேற டைட்டில்களும் பதிவு செய்யப்பட்டிருந்த்து எங்களுக்குத் தெரிய வந்த்து. அதுனால வேற பெயர் வைக்கணும்னு யோசிச்சோம்.
இயக்குநரும், நானும் இது விஷயமா நிறைய தடவை பேசி, சண்டை போட்டு பெயரை மாத்தியே ஆகணும்ன்ற சூழலுக்கு வந்தோம். அப்போதான் இயக்குநர் சட்டுன்னு ‘சகலகலாவல்லவன்’னு வைக்கலாம்ன்னு சொன்னார். எனக்கும் அது பிடிச்சிருந்தது.
உடனேயே ஏவி.எம். சரவணன் ஸார்கிட்ட போன்ல பேசி பெர்மிஷன் கேட்டேன். உடனேயே அவர் எனக்காக, என் மீது வைத்திருக்கும் அன்புக்காக பெயரை விட்டுக் கொடுத்தார். பெரிய, பெரிய நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இதே தலைப்பை முன்பு கேட்டும், ஏவி.எம். சரவணன் ஸார் கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் கேட்டவுடன் கொடுத்திருக்கிறார். அவருக்கும், ஏவி.எம். நிறுவனத்திற்கும் எமது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும், இந்தப் படக் குழுவினர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.
இது பற்றி தன் பேச்சில் குறிப்பிட்ட இயக்குநர் சுராஜ், “அப்பாடக்கர்’ வேணாம்னு முடிவு செஞ்சாலும் எனக்கு அந்த டைட்டிலை விட மனசில்லை. ‘பெரிய அப்பாடக்கர்’, ‘இவன் அப்பாடக்கர்’, ‘இவன் ஒரு அப்பாடக்கர்’ன்னுல்லாம் பெயர் மாற்றி சொல்லிப் பர்ர்த்தேன். ஆனால் தயாரிப்பாளருக்கு இதில் உடன்பாடில்லை.
அப்போதுதான் ‘அப்பாடக்கர்’ என்கிற பெயருக்கான அர்த்தமும் எனக்குத் தெரிந்தது. ‘அப்பாடக்கர்’ என்றால் ‘எல்லாம் தெரிந்தவன்’. ‘அனைத்தும் அறிந்தவன்’ என்று பொருள். இந்த பெயரை முதன்முதல்லா ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்துல சந்தானம் பயன்படுத்தியிருந்தாரு..
இதே அர்த்தத்துல வேற தலைப்பு தேடினோம். அப்போ சட்டுன்னு சிக்கினதுதான் ‘சகலகலாவல்லவன்’. இதுவும் அதே அர்த்தம்தானே..? ஓகேன்னு அதையே வைச்சிட்டோம். ஆனாலும் ‘அப்பாடக்கரை’ கைவிட மனமில்லாமல் ‘அப்பாடக்கர் ஜெயம் ரவி நடிக்கும் சகலகலாவல்லவன்’ அப்படீன்னு டைட்டிலை மாத்திட்டோம்…” என்றார் சாதித்த திருப்தியோடு..!