தனது மகனான நடிகர் விஜய்யின் பெயரில் ‘அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “கட்சியில் இருந்து யார் விலகினாலும் கட்சியை நான் தொடர்ந்து நடத்துவேன்…” என்று அதிரடியாய் அறிவித்துள்ளார்.
தன்னுடைய பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி துவங்கிய செய்தியறிந்ததும் அவசரம், அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய், “இந்தக் கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம்..” என்று சொல்லியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகரும், தன் கணவரான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டதாகச் சொல்லி தான் அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டதாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்.
அடுத்து அந்தக் கட்சியின் தலைவராக இருந்த பத்மநாபனும் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், “யாருமே இல்லாத கட்சியை இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்..” என்று எஸ்.ஏ.சந்திரசேகரடம் கேட்டபோது, “கட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியை நான் தொடர்ந்து நடத்துவேன்…” என்று அதிரடியாய் கூறினார்.
சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் “உங்கள் கட்சியிலிருந்து தலைவரே பதவி விலகியது ஏன்..?” என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது “நான் உருவாக்கிய கட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானே கட்சியை தொடர்ந்து நடத்துவேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது இது போன்ற மிரட்டல்கள் வருவது சகஜம்தான்.. என்று பதிலளித்தார்.
மேலும், “நான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே இருந்ததில்லை. வாழ்க்கையோ, சினிமாவோ எதுவாக இருந்தாலும் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பதைத்தான் நான் விரும்புகிறேன்..” என்றும் அவர் தெரிவித்தார்.