full screen background image

சாமி-2 ஸ்கொயர் – சினிமா விமர்சனம்

சாமி-2 ஸ்கொயர் – சினிமா விமர்சனம்

2003-ம் ஆண்டு கவிதாலயா புரொடெக்சன்ஸ் சார்பில் சீயான் விக்ரம், திரிஷா, கோட்டா சீனிவாசராவ், விவேக் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.

படத்தில் விக்ரமே நாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் டபுள் ரோல். முந்தைய பாகத்தில் விக்ரமின் மனைவியாக நடித்திருந்த த்ரிஷா இந்த பாகத்தில் நடிக்க மறுத்துவிடவே.. அவருக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ், திரிஷா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். மற்றும் டெல்லி கணேஷ், பிரபு, சுமித்ரா, சூரி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.தேவர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு – பிரியன், வெங்கடேஷ், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – இயக்குநர் சில்வா, பாடல்கள் – விவேகா, தயாரிப்பு – ஷிபு தமீன்ஸ், எழுத்து, இயக்கம் – ஹரி.

முதல் பாகத்தில் திருநெல்வேலியில் அராஜகம் செய்து வந்த பெருமாள் பிச்சை என்னும் கோட்டா சீனிவாசராவை சுட்டுக் கொன்று, செங்கல் சூளையில் வைத்து எரித்துவிட்டு அவர் போலீஸுக்கு பயந்து ஓடிவிட்டதாக கதைக் கட்டுகிறார் துணை கமிஷனரான ‘ஆறுச்சாமி’ என்னும் சீயான் விக்ரம்.

இப்போது அதே இடத்தில் கதை தொடர்கிறது. பெருமாள் பிச்சையின் இரண்டாவது மனைவியான சுதா சந்திரனும் அவரது மூன்று புதல்வர்களும் கொழும்புவில் வசித்து வருகிறார்கள். அப்பன் ஓடிப் போய்விட்டான் என்கிற அவப்பெயர் கல்லூரியில் படிக்கும் இளைய மகனான பாபி சிம்ஹாவுக்கு குடைச்சலாகவே இருக்க.. அப்பாவைத் தேடி தனது இரண்டு அண்ணன்களுடன் திருநெல்வேலிக்கு வருகிறார்.

இதே நேரம் துணை கமிஷனர் ஆறுச்சாமி வேறொரு ஊரில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவியான மிளகாய்ப்பொடி ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது ஐ.ஏ.எஸ்ஸுக்கு படித்து வருகிறார்.

திருநெல்வேலிக்கு வரும் பாபி சிம்ஹா தனது தந்தை காணாமல் போகவில்லை. ஓடி ஒளியவில்லை. ஆறுச்சாமியால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு செங்கல் சூளையில் வைத்து எரிக்கட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறார்.

இதையடுத்து பெருமாள் பிச்சை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை வெளியுலகத்துக்கு தெரிவித்துவிட்டு அதே ஊரின் முக்கியமான இடத்தில் நட்ட நடு ரோட்டில் பெருமாள் பிச்சைக்கு சிலையையும் வைத்துவிட்டு திருநெல்வேலியிலேயே முகாமிடுகிறார்கள் பிள்ளைகள் மூவரும்.

இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கர்ப்பிணியாக இருக்க.. ஆறுச்சாமியை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் பாபி சிம்ஹாவும், அவரது அண்ணன்களும். ஒரு நள்ளிரவில் புதுக்கோட்டை அருகே காரில் வரும் விக்ரமையும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷையும் குத்திக் கொலை செய்கிறது பாபி சிம்ஹாவின் கூட்டம்.

அத்தருணத்தில் ஐஸ்வர்யா இறந்தும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை உயிருடன் இருப்பதை அறியும் விக்ரம் ஐஸ்வர்யாவின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துத் தன் நெஞ்சில் சுமந்தபடியே உயிரை விடுகிறார்.

இப்போது படம் 28 ஆண்டுகள் கழித்து துவங்குகிறது. அதாவது 2032-ம் ஆண்டில்..! இப்போது குழந்தை விக்ரமை டெல்லி கணேஷ், சுமித்ரா தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள். அப்பா விக்ரம் இறந்தவுடனேயே குழந்தையைத் தூக்கிக் கொண்டு இவர்கள் இருவரும் டெல்லிக்கு வந்துவிட்டனர். இப்போது டெல்லியிலேயே படித்து முடித்து… மத்திய அமைச்சராக இருக்கும் பிரபுவின் அலுவலகத்தில் ஆபீஸராக இருக்கிறார் பேரன் விக்ரம். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார்.

பிரபுவின் மனைவி ஐஸ்வர்யா லட்சுமி. இவர்களது மகள் கீர்த்தி சுரேஷ். வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு டெல்லி திரும்பும் கீர்த்தி சுரேஷ் வழக்கமாக நாயகன் விக்ரமுடன் சண்டையுடன் தனது அறிமுகத்தைத் துவக்குகிறார்.

மத்திய அமைச்சரான பிரபுவுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் இடையில் இருந்த சில பணப் பிரச்சினை காரணமாக டெல்லியிலேயே கீர்த்தியை ஆள் வைத்து கடத்துகிறார் பாபி சிம்ஹா. அப்போது விக்ரம் இந்தக் கடத்தலை முறியடித்து கீர்த்தியைக் காப்பாற்றுகிறார். இதையடுத்து திரையுலக வழக்கத்தின்படி கீர்த்தி, விக்ரமை காதலிக்கத் துவங்குகிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடையும் விக்ரம் தனது தாத்தா டெல்லி கணேஷ், பாட்டி சுமித்ரா தம்பதிகளுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்றெண்ணி ஐ.பி.எஸ். ஸை தேர்வு செய்து முசெளரியில் அதற்கான பயிற்சியையும் முடித்துவிட்டு டெல்லி திரும்புகிறார்.

ஐ.ஏ.எஸ். முடித்து கலெக்டராக வருவான் என்று எதிர்பார்த்த தருணத்தில் ஐ.பி.எஸ். முடித்து அஸிஸ்டெண்ட் கமிஷனராக வந்து நிற்கும் பேரன் விக்ரமை பார்த்து அதிர்ச்சியாகிறார்கள் தாத்தாவும், பாட்டியும். இப்போதுதான் அவரது தந்தை யார், தாய் யார்.. அவர்களின் கதை முழுவதையும் டெல்லி கணேஷ் தனது பேரனிடம் சொல்கிறார்.

தனது தாய், தந்தை கொல்லப்பட்டதையும் அப்படி கொலை செய்தவர்கள் இப்போது திருநெல்வேலியில் அக்கிரமம் செய்து வருவதையும் அறியும் பேரன் விக்ரமான ராமசாமி கொதிக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு முதல் போஸ்ட்டிங்கே தமிழ்நாடு கேடரில் அதுவும் திருநெல்வேலிக்கே போட்டிருப்பதால் உடனேயே அங்கே செல்வதாக முடிவெடுக்கிறார்.

திருநெல்வேலிக்கு துணை கமிஷனராக வருவது தனது பரம விரோதியான ஆறுச்சாமியின் மகன் ராமசாமி என்று பாபி சிம்ஹாவுக்குத் தெரியாது. ஆனால் ராமசாமிக்கோ, பாபி சிம்ஹாவின் ஜாதகமே தெரிந்திருக்கிறது.

திருநெல்வேலி வந்த ராமசாமி என்னும் பேரன் விக்ரன் பாபி சிம்ஹா கூட்டத்தை அழித்தாரா.. இல்லையா… என்பதுதான் இந்த ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் சுவையான திரைக்கதை.

இயக்குநர் ஹரியின் படமாக்கலே சூப்பர்சானிக் எக்ஸ்பிரஸ் போலவே இருக்கும். அது போலத்தான் அவரது திரைக்கதையும் பற பறவென இருக்கும். திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ற வகையிலான நடிப்பையும், காட்சியமைப்பையும் ஒளிப்பதிவாளரும் வழங்கியிருப்பார். அடிதடி கரம் மசாலாவில் தோய்த்தெடுத்த சண்டை காட்சிகளிலும் அதே வேகம் இருக்கும். கூடவே குடும்ப செண்டிமெண்ட், நாட்டுப் பற்றுடனான காட்சிகள், போலீஸ் டிரெஸ்ஸுக்குரிய மரியாதை, போலீஸார் மீதான மரியாதை வரும்படியான காட்சிகள்.. இப்படி அக்மார்க் ஹரியின் இலக்கணப்படியே இத்திரைப்படமும் உருவாகியிருக்கிறது.

முதல் பாதியில் பேரன் விக்ரம் வரும்வரையில் படத்தின் முந்தைய பாகத்தில் இருந்து சில காட்சிகளும், ஐஸ்வர்யா ராஜேஷுடனான சில காட்சிகளும் வலம் வருவதில் சிறிதளவு தொய்வு இருந்தது. ஆனால் திடுக்கென்று “28 ஆண்டுகள் கழித்து…” என்று சொல்லப்பட்ட பின்பு திரைக்கதையில் ஏறும் டெம்போ கடைசிவரையில் இறங்கவே இல்லை.

28 ஆண்டு கால இடைவெளிக்கு விளக்கம் சொல்வதுகூட ஹரியின் ஸ்டைல்தான். “இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டு காலம் வனவாசம் இருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும், 1 ஆண்டு அஞ்ஞாதவாசமும் கண்டார்கள். எல்லாம் சேர்த்து 27 ஆண்டுகள் ஆகிறது. இப்போது உன் அப்பன் செத்தும் 27 வருஷம் முடிஞ்சு 28-வது வருஷம் துவங்குது. திருநெல்வேலிக்கு போய் உன் அப்பன் சாவுக்கு காரணமானவங்களை கண்டு பிடி. என்ன செய்யணுமோ செய்..” என்று டெல்லி கணேஷ் பேரன் விக்ரமுக்கு வாழ்த்துச் சொல்லியனுப்புகிறார்..! அப்பா.. அப்பவே கண்ணைக் கட்டிருச்சு..!

சீயான் விக்ரம் வழக்கம்போல போலீஸ் அதிகாரிகளுக்கே உரித்தான மிடுக்குடனும், கோபத்துடனும், அதிரடி ஆபீஸராக தனது பராக்கிரமத்தைக் காட்டியிருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முந்தைய அதே விக்ரமை பார்ப்பது போலவே இருக்கிறது. அதே எனர்ஜி, பாடி பில்டப்புடன் படம் முழுவதும் வலம் வருகிறார் விக்ரம்.

சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியோடு வேகத்தைக் கூட்டியிருந்தாலும், கேமிராவின் ஒத்துழைப்பினால் இருபது வயது இளைஞனின் வேகத்தை திரையில் காட்டியிருக்கிறார் விக்ரம்.

திரிஷா மாமி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ். ஏற்கவே முடியவில்லை. ஆனால் ஒரு பாடல் காட்சி, சில வசனக் காட்சிகளோடு இவரது கதையை முடித்திருப்பதால் அதிகம் சேதாரமில்லை. திரிஷா இதில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதிலும் தப்பில்லைதான்.

பாபி சிம்ஹா அதிரடி வில்லனாக அனாயசமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் ‘அசால்ட் சேது’வை வெளிக்காட்டினாலும் ‘ராவண பிச்சை’யாக வாழ்ந்திருக்கிறார். வெறியோடு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு செல்பவர், தனது அண்ணன் பேச்சைக் கேட்டு திரும்பிய நிலையிலும் தனது கோபத்தைத் துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கொள்ளும் கோபத்தில் வில்லன்களில் சிறந்த வில்லன்களாகத் தெரிகிறார் பாபி சிம்ஹா.

கீர்த்தி சுரேஷ்.. இன்னும் எத்தனை படமாக இருந்தாலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அத்தனை அழகு. விக்ரமுக்கு ஜோடி என்கிற ஒரேயொரு நிரடல் மட்டுமே படத்தில். மற்றபடி அவர் வரும் காட்சிகளில் அழகுக்கும், ஈர்ப்புக்கும் பஞ்சமேயில்லை. பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டாமலேயே கவர்ந்திழுக்கிறார். இதனை மற்ற நடிகைகள் பாலோ செய்தால் நன்றாகவே இருக்கும்.

‘மீரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் விக்ரமுக்கு மாமியாராக நடித்திருக்கிறார். எல்லாம் காலம் செய்த கோலம்தான். பிரபு, டெல்லி கணேஷ், சுமித்ரா, ரமேஷ் கண்ணா என்று நால்வரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முட்டைக் கண் ஜான் விஜய்யை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இதேபோல் ஓ.ஏ.கே. தேவரையும் சொல்லலாம். சூரியின் காமெடி இந்தப் படத்தில் சுத்தமாக எடுபடவில்லை. அரதப் பழசு காமெடி காட்சியும், வசனமும் ஒரு இடத்தில்கூட சிரிப்பை உருவாக்கவில்லை என்பது சோகமான விஷயம்.

தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். வழக்கமான அடிதடி, ஆர்ப்பாட்டத்தில் இசையைக் கொளுத்தியிருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். ‘மொளகாப் பொடியே’ பாடலும், ‘அதி ரூபனே’ பாடலும் மெலடியைக் கேட்க வைத்தாலும், ‘டர்ரங்கா’வும், ‘புது மெட்ரோ ரயிலும்’ தாளம் போட வைக்கிறது. ‘அம்மா’ பாடல் சிறிது நேரம் மன அமைதியைத் தந்திருக்கிறது.

பின்னணி இசையில் அனைத்து வகை டிரம்ஸ்களையும் அடித்து, துவைத்து ரசிகர்களின் காதைக் கிழித்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். ஏற்கெனவே அனைத்து நடிகர்களும் கத்திக் கத்தியே பேசியிருக்கும் நிலையில், பின்னணி இசையும் சேர்ந்து கொள்ள.. இந்தப் படம் பார்த்த அத்தனை பேருக்கும் அன்றைய இரவில் காதில் இரைச்சல் வருவது உறுதி.

மறைந்த ஒளிப்பதிவாளர் பிரியன் மற்றும் வெங்கடேஷின் ஒளிப்பதிவில் கேமரா கதையுடன் ஓட்டமெடுக்கிறது. பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பே அதிகம். ஹரியின் வழக்கமான படம் போலவே இதிலும் கார்களும், ஜீப்களும் பறக்கின்றன. விழுகின்றன. தீப்பற்றி எரிகின்றன. அந்தப் பரபரப்பை ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் சிறப்பான முறையிலே கொடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் நமது பாராட்டுக்கள்.

“ஒரு சாமி”, “ரெண்டு சாமி” என்று அடித்து வீழ்த்திக் கொண்டே “ஆறுச்சாமி” என்று பாபி சிம்ஹாவின் எதிரில் வந்து கர்ஜிக்கும்போதே படம் ஓடத் துவங்கிவிட்டது. அந்த ஓட்டத்தை கடைசிவரையிலும் இறங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

பேரன் விக்ரம் சில காட்சிகளில் அமைதியான நடிப்பைக் காண்பிப்பதும், போலீஸ் டிரெஸ்ஸை உரசியவுடன் அவருக்குள் பற்றிக் கொள்ளும் தீயைக் காட்டும் காட்சிகளும் படத்தின் திரைக்கதையை முன்பேயே ஊகிக்க வைத்திருக்கிறது.

சில குளோஸப் காட்சிகளில் மட்டும்தான் பேரன் விக்ரமும், கீர்த்தியும் அப்பா, மகள் போல் தெரிகிறார்கள். தவிர்த்திருக்கலாம். போன படத்தில் “நான் போலீஸ் இல்லை.. பொறுக்கி” என்று சொன்னவர் இந்தப் படத்தில் “நான் போலீஸ் இல்லை.. பூதம்…” என்கிறார். இதற்கேற்ற பூதாகரமான காட்சிகளுக்காக நிறைய உழைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும்.. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போலத்தான் பல காட்சிகள் இருக்கின்றன.

முசெளரியில் இருந்து டிரெயினிங்கை முடித்த கையோடு வீடு திரும்பும் பேரன் விக்ரம் போலீஸ் டிரெஸ்ஸிலேயே வருகிறார். வந்தவரின் கைகளில் போஸ்டிங் ஆர்டராம். அதே திருநெல்வேலியாம். இது திரைக்கதைக்காக அமைக்கப்பட்டது என்பதால் மன்னிப்போம்.

டூட்டியில் சேரும்போதே அதிரடியோடு ஆரம்பிக்கிறார் பேரன் விக்ரம். பொதுவாக நேரடி ஐ.பி.எஸ்.கள் பணியில் சேரும்போது முதலில் பாரா டூட்டியாக போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஒரு வாரத்திற்கு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு நின்றாக வேண்டும். அடுத்த வாரம் ஸ்டேஷனுக்கு வரும் புகார்தாரர்களிடமிருந்து புகாரை வாங்கி எழுதிப் பழக வேண்டும். அடுத்த வாரம் ஸ்டேஷனில் இருக்கும் ஆயுதங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டாக வேண்டும். அதற்கடுத்த வாரம் கேஸ் டைரியை எழுதும் பணியைச் செய்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு 15 நாட்கள் கழித்தே அவருக்குக் கொடுக்கப்படும் ஏரியாவில் துணை கமிஷனராகப் பொறுப்பேற்க முடியும். இதுதான் நடைமுறை.

இதெல்லாம் ஹரியின் திரைப்படத்தில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது நமக்கும் தெரியும் என்பதால் வேறொன்றும் சொல்வதற்கில்லை.

படத்தின் துவக்கத்தில் “பெண்களிடம் மரியாதையாக பேச வேண்டும். மனைவியாகவே இருந்தாலும் வாடி, போடி என்று அழைக்கக் கூடாது…” என்றெல்லாம் அறிவுரை சொல்லியிருக்கும் இயக்குநர், பின்பு பேரன் விக்ரம், கீர்த்தி சுரேஷின் கன்னத்தை பதம் பார்க்கும் காட்சியை வைத்திருக்கும் முரண்பாடுதான் ஏன் என்று தெரியவில்லை.

ஜனாதிபதி மாளிகை வாசலில் கருப்புப் பணம் இருக்கும் வேனை நிறுத்திவிட்டு, ஜனாதிபதிக்கு ஒரு மெயில் அனுப்பி அதன் மூலமாக அனைத்து அரசு இயந்திரங்களையும் அங்கே கொண்டு வருவதற்கான திரைக்கதை ஹரியிடம் மட்டுமே கிடைக்கும். டெல்லியில் இப்போதிருக்கும் சூழலில் வண்டியை ஓட்டி வந்தது யார் என்பதை சிசிடிவி கேமிரா மூலமாகக் கிடைக்காதா என்ன..?

‘இப்பவெல்லாம் யார் ஜாதி பாக்குறா?’ என்பதைப் போல “இப்பவுமா ஜாதியைப் பத்தி பேசுறாங்க…” என்று இடைவேளைக்கு பின்பு பேரன் விக்ரம் அதிர்ச்சியாகிறார். ஆனால் முற்பாதியில் டெல்லி கணேஷ் தனது ஜாதி அடையாளத்தைக் காட்டி புரோகிதம் செய்யும் வேலையிலும் பேரனை இறக்கிவிட்டுவிட்டு, “பூணூல் அடையாளம் இனிமேல் உனக்கு வேண்டாம்…” என்று சாதிய ரீதியாகவே பேசுவதையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் விக்ரம். இயக்குநர் மறந்துவிட்டார் போலிருக்கிறதே..!

2018-ம் ஆண்டான இப்போதே திருநெல்வேலியின் நிலைமை இத்தனை மோசமாக இருக்கிறது. 2032-ல் எப்படியிருக்கும்..? அப்போதும் மாநில அமைச்சராக இருக்கும் ஓ.ஏ.கே.தேவரை எதிர்த்து லோக்கல் போலீஸ் துணை கமிஷனர் வாலாட்டுவதையும், அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாகவும் காட்டுவது போலீஸாருக்கே சிரிப்பை வரவழைத்துவிடும் திரைக்கதை..!

தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழலில் போலீஸாருக்கு நல்ல பெயரும், மரியாதையும் கிடையவே கிடையாது. அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பின்பு அளவு கடந்த கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது தமிழக காவல் துறை.

இந்த நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகளை தேவதூதன் ரேன்ச்சுக்கு உயர்த்தும் இந்தப் படம் ஓடுகிற தியேட்டர்களில் பெரிய பூரிப்பையும், பாராட்டுக்களையும் பெறாமல் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

ஆனால் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக.. அதுவும் இத்துறையில் கை தேர்ந்த இயக்குநர் ஹரியின் உருவாக்கத்தில் ஒரு கமர்ஷியல் கம்மர்கட் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை..!

சீயான் விக்ரமின் ரசிகப் பெருமக்களுக்கும், இயக்குநர் ஹரியின் ரசிகர்களுக்கும் நிச்சயமாக இத்திரைப்படம் ஒரு விருந்துதான்..!

Our Score