“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..?” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..!

“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..?” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..!

‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது இறப்பு பற்றிய அவதூறுகளும், கிசுகிசுக்களும், வதந்திகளும் காற்றுவாக்கில் அவரது பாடல்கள் போலவே உலகமெங்கும் பரவிவிட்டன.

முதல் வதந்தி : எஸ்.பி.பி.யின் சிகிச்சைக்கான செலவை கட்டுவதற்கான பணம் அவருடைய குடும்பத்தினரிடம் இல்லை. ‘பணத்தைக் கட்டாவிட்டால் எஸ்.பி.பி.யின் உடலை தர மாட்டோம்’ என்று எம்.ஜி.எம். மருத்துவமனையின் நிர்வாகம் சொல்லிவிட்டது. இதனால் கலங்கிப் போன எஸ்.பி.பி.சரண் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார். துணை ஜனாதிபதியின் தரப்பில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பேசிய பின்பே எஸ்.பி.பி.யின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம்.

இரண்டாவது வதந்தி : எஸ்.பி.பி.யின் மருத்துவ சிகிச்சைக்கான மொத்தக் கட்டணம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்.

மூன்றாவது வதந்தி : எஸ்.பி.பி.யால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் அஜீத்குமார் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த வரவே இல்லை. ஆனால் எஸ்.பி.பி. சரணை தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்தார்.

இந்த மூன்று செய்திகளும் செய்தி கிடைக்காமல் காத்து வாங்கிக் கொண்டிருந்த சிலருக்கு அல்வா கிடைத்ததுபோல ஆகிவிட.. எந்த அளவுக்கு பரப்புரை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இதனைப் பரப்பிவிட்டார்கள்.

இதனால் மனம் நொந்து போன எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரண் இன்று மதியம் எம்.ஜி.எம். மருத்துவமனையில் எஸ்.பி.பி.க்கு சிகிச்சையளித்த மருத்துவர்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த வதந்திகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “அப்பா இப்போது காலமாகிவிட்டார். அப்பாவை இந்த மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்தே ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருந்தன. அவர் மரணமடைந்த பிறகும்கூட வதந்திகள் ஓயலை. இப்போது மருத்துவக் கட்டணம் தொடர்பாக சில வதந்திகளைப் பரப்பிக்கிட்டிருக்காங்க.

அப்பாவின் மரணத்திலிருந்து மீண்டு வருவதற்கான அவகாசத்தைக்கூடக் எங்களது குடும்பத்திற்குக் கொடுக்காமல் பிரச்னையை ஏற்படுத்துறாங்க.

எங்களால் அப்பாவுக்கான மருத்துவக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் நாங்கள் தமிழக அரசை அணுகினோம் என்றும், தமிழக அரசு தாமதம் செய்ததால் இந்திய துணை ஜனாதிபதியின் மகளை அணுகி அவர் தலையிட்டு மருத்துவக் கட்டணத்தை செட்டில் செய்த பிறகே, அப்பாவின் உடலை மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் ஒப்படைச்சதாகவும் ஏதேதோ கதை கட்டிக்கிட்டிருக்காங்க.

இப்படி அப்பாவின் மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது. எம்.ஜி.எம் மருத்துவமனையை நம்பி வந்தோம். அவங்க சிறந்த முறையில் அப்பாவுக்கு சிகிச்சையளிச்சாங்க. ஒவ்வொரு நாளுமே என்னிடமும் எங்கள் குடும்பத்தினரிடமும் கலந்தாலோசித்துதான் அப்பாவுக்கு சிகிச்சையளிச்சாங்க.

என்ன பில்லிங் செய்தார்களோ அதில் ஒரு பங்கை நாங்க வாரா வாரம் செலுத்திக்கிட்டுருந்தோம். ஒரு பங்கு இன்ஷூரன்ஸ்ல சரியாயிருச்சு. அப்பா இறந்ததும் இறுதியாக செட்டில்மென்ட் செய்வதற்காகப் பணத்தோடுதான் நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன்.

பில் தொடர்பாக ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தில் வேறு யாருடனும் நான் பேசலை. இங்குள்ள டாக்டர் தீபக் என்னுடைய நெருங்கிய நண்பர். ‘நாங்கள் இன்னும் எவ்வளவு பணம் கட்டணும்..?’னு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், “இதுவரை செலுத்தியதைத் தவிர, வேறெந்தக் கட்டணமும் வாங்க வேண்டாம். உடலைப் பத்திரமாக ஒப்படையுங்கள்”னு எம்.ஜி.எம். மருத்துவமனையின் சேர்மன் சொல்லிட்டதாகச் சொன்னார். இதெல்லாம் தெரியாமல் சிலர் வந்தியைப் பரப்புறாங்க. நாங்க இந்த மருத்துவமனைக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கோம்.

அதேபோல, அரசு தரப்பிலும் உதவி கேட்டிருந்தோம். உதவின்னா பண உதவியில்லை. பொதுவாகப் பேசியிருந்தோம். அரசு தரப்பிலும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினாங்க. நான் சுகாதாரத் துறை செயலாளரிடமே நேரடியாகப் பேசினேன். ‘என்ன உதவின்னாலும் அரசு செய்யத் தயார்’ன்னு சொன்னாங்க.

அப்பாவுக்கான சிகிச்சை கட்டணத்தை நான் வெளிப்படையா சொல்ல முடியாது. ஏன்னா அது கொஞ்சம் ரகசியமானது. இதில் இந்த மருத்துவமனைக்கும் பங்கிருக்கு என்பதால் அதைச் சொல்ல முடியாது. அது எதுக்கு பத்திரிகையாளர்களுக்கு..?

அடுத்து அப்பா இறந்த நேரத்தையும் தப்புத் தப்பா சொல்லிக்கிட்டிருக்காங்க. என் அப்பா எப்போ இறந்தார்னு நான் அறிவித்த நேரம்தான் சர்டிஃபிகேட்லயும் இருக்கு. அதனால இறந்த நேரம் குறித்தும் சந்தேகம் வேண்டாம்.

உண்மை இப்படியிருக்க… வீண் வதந்திகளைப் பரப்புறவங்களிடம் ஒன்று கேட்கிறேன்… நீங்க எஸ்.பி.பி இறந்ததை நினைச்சு வருத்தப்படுறீங்களா…? இல்லை ஹாஸ்பிட்டல் பில்லிங் பத்தி வருத்தப்படுறீங்களா..?

நடிகர் அஜித் வரலைன்னு இன்னொரு பிரச்னையைக் கிளப்புறாங்க… அஜித் வந்தால் என்ன..? வரலைன்னா என்ன…? பேசினா என்ன..? பேசலைன்னா என்ன..? அஜித் என் நண்பர். என் தந்தைக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் எங்கிருந்து வேண்டுமானாலும் வருத்தப்படலாம். நேர்லதான் வரணுங்கிறதில்லை.

அடுத்து ஒரு மிக முக்கியமான தகவல், எஸ்.பி.பி. கொரோனாவால் இறக்கலை. அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார். நுரையீரல் தொற்று காரணமாவே இறந்தார். ஏற்கெனவே அப்பாவின் ரசிகர்கள் வருத்தத்திலிருந்த நிலையில், அவருக்கு டிராக்கியஸ்டமி செய்யப்பட்டது தெரிஞ்சா இன்னும் அதிகமாகக் கவலைப்படுவாங்கன்னுதான் அதைச் சொல்லலை.

நான் தினமும் அப்பாவைப் பார்த்துக்கிட்டிருந்தேன். சைகையில் பேசிக்கிட்டிருந்தார். ஐ பேட்ல எழுதினார். நாங்க பண்ற காமெடிக்கு சிரிச்சுக்கிட்டிருந்தார். நல்லா உற்சாகமாகத்தான் இருந்தார்..

வெளியூர்ல இருந்தும் வெளிநாட்டுல இருந்தும் நிறைய பேர் அப்பாவுடைய சமாதியைப் பார்க்க வர்றாங்க. அதற்கான அனுமதிக்காக லோக்கல் பஞ்சாயத்திடமும் போலீஸ் டிபார்ட்மென்ட்டிடமும் பேசிக்கிட்டிருக்கேன். அப்பா போன பிறகு, பாரத ரத்னா விருது கிடைச்சாலும் சரி கிடைக்காட்டாலும் சரி… அரசு கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக பெற்றுக் கொள்வோம். எனக்கு என் அப்பாதான் பாரத ரத்னா.

இப்போது எங்க அப்பா உயிருடன் இல்லை. உலகத்துக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிருடன் இல்லை, அவ்வளவுதான். இது எதிர்பாராத மரணம்கிறதால எங்களால எளிதில் ஜீரணிக்க முடியலை. எங்களுக்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுது.

நான் இப்போ எங்க அம்மாவைப் பாத்துக்கிறதா… இல்ல.. உங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டிருக்கிறதா..? ஆகையால், எங்க குடும்பத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க.. ப்ளீஸ்..” என்றார் உருக்கமாக.

Our Score