தெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..!

தெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..!

‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ‘ஈரம்’, ‘அரவான்’, ‘மரகத நாணயம்’ என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. 

தற்போது சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆர்.எக்ஸ்.100’ என்ற படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில், பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் கார்த்திகேய கும்மாகுண்டா ஹீரோவாகவும், பயல் ராஜ்புத் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். அஜய் பூபதி எழுதி, இயக்கியிருந்தார். படம் இந்தாண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், இதுவரையிலும் 22 கோடி ரூபாய் வரையிலும் வசூலை வாரிக் குவித்திருக்கிறதாம்.

இந்தப் படத்தின் தமிழாக்க உரிமையை பலத்த போட்டிகளுக்கிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் ‘100’  ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

இத்திரைப்படத்தைத் தயாரிப்பது தொடர்பாக தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் பேசுகையில், “விநியோக துறையில் ஒரு நம்பகத் தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ராஜதந்திரம்’ வீரா நடிக்கும் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’, அதர்வா – ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் ‘100’ ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.

நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ்.100’ என்ற படம் வெளிவந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது.

ஆதி என்னை அழைத்து அந்தப் படத்தைப் பார்க்க சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றிருக்கிறேன்.

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சமுள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர்தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வுகள் முடிவாகிவிடும். செப்டெம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது…” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ்.

Our Score