ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக பெற்றிருக்கும் திரில்லர் திரைப்படமான ‘ரம்’ சென்சாரில் ‘U/A’ சான்றிதழை பெற்றிருக்கிறது.
‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘வி.ஐ.பி.’ படப் புகழ் ஹரி ஷிகேஷ், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சாய் பரத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்போது இந்தப் படம் சென்சாரில் ‘U/A’ சான்றிதழை பெற்றிருக்கிறது. இது பற்றிப் பேசிய தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா, “ஒரு திரைப்படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போது நான் உணர்கிறேன். வர்த்தக உலகில் அமோக வரவேற்பை எங்களின் ‘ரம்’ திரைப்படம் பெற்று இருப்பதற்கு மிக முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிரூத்தும், அவருடைய பாடல்களும்தான் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.
படத்தில் பணியாற்றிய நடிகர் – நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சாய் பரத். இந்த படத்தை உலகமெங்கும் வெளியிட திட்டமிட்டிருக்கும் ‘சாய் சர்கியூட்’ நிறுவனத்திற்கும், அவர்களின் முயற்சிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேற்கொண்டு, நல்ல தரமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களையும், திறமையான கலைஞர்களையும், திரையுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள்…” என்று பெருமையுடன் கூறினார்.