full screen background image

ரோமியோ – திரைப்பட விமர்சனம்

ரோமியோ – திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் மீரா விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ரோமியோபடத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷாரா, ரோஜூ, ஷாலினி விஜயகுமார், அத்வைத், ஜெய சம்ரிதா, முரளி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்விநாயக் வைத்தியநாதன், ஒளிப்பதிவுஃபரூக் ஜே.பாஷா, இசை –  பரத் தனசேகர், படத் தொகுப்புவிஜய் ஆண்டனி, ஆடை வடிவமைப்புஷிமோனா ஸ்டாலின், கலை இயக்கம்எஸ்.கமலநாதன்

இந்த ரோமியோதிரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னாள் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அதிர்ச்சியடைய வைத்திருந்தது. “மொரட்டு ரொமான்ஸ், மில்க் அண்ட் விஸ்கி” என்ற கேப்ஷனுடன், முதலிரவு அறையில் நாயகி மிருணாளினி ரவி கையில் மது பாட்டிலுடன் இருந்த அந்த போஸ்டர், பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்திருந்தது.

“குடி, குடியைக் கெடுக்கும்” என்று அரசுகளே பிரச்சாரம் செய்து வரும் வேளையில் ஒரு பெண் முதலிரவு அறையிலேயே இந்தக் கோலத்தில் இருப்பதுபோல போஸ்டரை வெளியிட்டால் எப்படி..?” என்று இந்தப் படத்தின் மீதான கண்டனங்கள் வலுத்தபடியிருந்தன.

இப்போது படமே வெளியாகிவிட்டது. படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

நாயகன் விஜய் ஆண்டனி மலேசியாவில் ஹோட்டல் தொழிலில் பல்லாண்டுகள் வேலை செய்துவிட்டு சொந்த ஊரான தென்காசிக்குத் திரும்புகிறார். 35 வயதைத் தொட்டுவிட்டதால் எப்படியாவது இந்த வருடம் விஜய் ஆண்டனிக்குத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவரது அப்பாவான இளவரசுவும், அம்மாவான சுதாவும்..!

ஆனால் விஜய் ஆண்டனியோ தனக்குப் பிடித்த பெண்ணை முதலில் காதலித்துவிட்டு பின்புதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து வரும் வரனையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டேயிருக்கிறார்.

அதே ஊரை சேர்ந்த தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி மிருனாளினி ரவி ஐ.டி. முடித்தவர். ஆனால், சினிமாவில் மிகப் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். இதனால் தனது குடும்பத்தாரிடம் சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லிவிட்டு, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் மிருணாளியின பாட்டி இறந்துவிட்டதால் ஊருக்கு வருகிறார் நாயகி. வந்த இடத்தில் நாயகியைக் கண்டவுடன் விஜய் ஆண்டனிக்கு, காதல் பிறக்கிறது. மிருணாளினி சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவதை தெரிந்து கொண்ட தலைவாசல் விஜய், மிருணாளினியை சென்னைக்கு செல்லக் கூடாது என்று தடுக்கிறார்.

மகனின் விருப்பத்தை அறிந்த விஜய் ஆண்டனியின் பெற்றோர், மிருணாளியின் அப்பவிடம் கல்யாணம் பற்றிப் பேச அவர்களும் சம்மதிக்கிறார்கள். உடனேயே இருவரின் திருமணமும் ஊரிலேயே நடந்தேறுகிறது.

ஆனால் திருமணத்துக்கு முன்பேயே விஜய் ஆண்டனியிடம் “நாம் சென்னையில்தான் வாழ வேண்டும்” என்று மிருணாளினி சொன்னதால் விஜய் ஆண்டனியும் இதற்கு ஒத்துக் கொண்டு சென்னையில் வீடு பார்த்து மனைவியையும் அழைத்து வருகிறார்.

சென்னைக்கு வந்தவுடன் மிருணாளினி, விஜய் ஆண்டனியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட மறுத்து “நான் சினிமாவில் பெரிய நடிகையாகப் போகிறேன். அதனால் நம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் நாம் டைவர்ஸ் செய்துவிடுவோம்” என்கிறார்.

முதலில் இதற்கு சம்மதிக்காத விஜய் ஆண்டனி விட்டுப் பிடிக்க நினைக்கிறார். ஆனால் மனைவி தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜய் ஆண்டனியை ஒதுக்கியே வருகிறார்.

இந்த நிலையில் மனைவி போகும் வழியிலேயே போய் அவரது நன்மதிப்பைப் பெற நினைக்கும் விஜய் ஆண்டனி, மிருணாளினி நடிக்கவிருக்கும் படத்தைத் தானே தயாரித்து அதில் தானே ஹீரோவாகவும் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்.

மிருணாளியின் நண்பர்களும் “இதுதான் நாம் அனைவரும் திரையுலகத்தில் கரை சேர ஒரே வழி” என்று சொல்லி மிருணாளினியையும் சம்மதிக்க வைக்கிறார்கள்.

இதன் பிறகு என்ன நடந்தது..? விஜய் ஆண்டனி அந்தப் படத்தைத் தயாரித்து முடித்தாரா..? இவர்களின் டைவர்ஸ் என்ன ஆச்சு..? கடைசியில் தம்பதிகள் பிரிந்தார்களா..? அல்லது  இணைந்தார்களா..? என்பதுதான் இந்த ‘ரோமியோ’ படத்தின் திரைக்கதை.

தனது நடிப்புக் கேரியரில் இதுவரையிலும் குடும்பத் தலைவனாக, மகனாக, காவல்துறை அதிகாரியாக, பத்திரிகையாளராக, போராளியாக என்று பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி முதல்முறையாக முழுக்க, முழுக்க காதலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு ‘ரோமியோ’வாக ‘அறிவு’ என்னும் கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ் சென்ஸூம் இயல்பாகவே வருகிறது. ஆனால் அவருடைய வயதும், தோற்றமும்தான் அதற்குக் கொஞ்சம் தடைக்கற்களாகத் தெரிகின்றன.

தன்னை அறவே வெறுக்கும் தன் மனைவியை இம்ப்ரஸ் செய்வதற்காக அவர் செய்யும் சின்னச் சின்னக் குட்டிக் கலாட்டாக்களும், சமையல் கலை திறமையும் சிரிக்க வைக்கிறது. இதுவரையிலான படங்களில் மனைவி கதாப்பாத்திரம் செய்திருப்பதை இந்தப் படத்தில் தான் செய்து ஆண்-பெண் சமத்துவத்தை சரி செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

அப்பாவித்தனமான காமெடியில் மட்டுமல்ல; ஒரு பாடல் காட்சியில் நடிகர் விஜய் ரேஞ்ச்சுக்கு நடனமும் ஆடி அசத்தியிருக்கிறார். கடைசியாக சென்டிமெண்ட்டாக சண்டை காட்சியிலும் நடித்து மனைவியை மீட்டெடுத்து, தன் குடும்ப வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்கிறார். மொத்தத்தில், இந்தப் படத்தில் ஒரு புதிய விஜய் ஆண்டனியை நீங்கள் பார்க்கலாம்.

வழக்கமான நாயகியாக இல்லாமல், படம் நெடுகிலும் நாயகனைப் போல கதையை நகர்த்தியிருக்கிறார் மிருணாளினி ரவி. அவரது தோற்றத்திற்கு ஏற்ற அழகுடன், காட்சிக்குக் காட்சி சிறப்பான உடையலங்காரத்துடன் கிறங்கடிக்கும் தோற்றத்தில் பார்ப்பதற்கே புதிய நாயகியாகத் தோற்றமளித்திருக்கிறார்.

நடிப்பிலும் குறை வைக்கவில்லை. அமைதியாக இருந்து ஊமைக் கோட்டானாக கல்யாணத்தை முடித்த கையோடு கணவனிடம் டைவர்ஸ் கேட்கும் அந்த வஞ்சகி கதாப்பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். குடிப் பழக்கம் உள்ள ஆண்கள்கூட இவ்வளவு நேர்த்தியாக பாட்டிலைத் திறந்து, கல்ப்பாக குடிக்க மாட்டார்கள். அதையும் சிறப்புற செய்திருக்கிறார் மிருணாளினி.

கடைசியாகத் தன்னைத் தேடி வரும் விஜய்யிடம் அவரது தங்கையை மறைமுகமாக அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு கூர்மையான கண்களில் விசாரிக்கும் அந்த நேரத்தில் நாயகன், நாயகி இருவரின் நடிப்பும் சிறப்பு.

சென்னையில் பார் ஓனராக இருந்து கொண்டு விஜய் ஆண்டனியின் கல்யாண வாழ்க்கை சுபமாக முடிய டிப்ஸ் கொடுக்கும் யோகிபாபு, கடைசியில் விஜய் ஆண்டனியையே கலாய்க்கும் காட்சிகளில் சிரிப்போ சிரிப்பு..! விடிவி கணேஷூடனான காமெடிக் காட்சிகளில் குறையில்லை..!

மற்றபடி பெற்றோர்களான இளவரசு, சுதா ஜோடியும், தலைவாசல் விஜய், ஸ்ரீஜாரவி ஜோடியும் தங்களுக்கான கேரக்டர் நடிப்பை சிறப்புற செய்திருக்கிறார்கள். மிருணாளியின் நண்பர்களாக நடித்த அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. முதலில் மலேசியாவின் அழகையும், பின்பு தென்காசி பகுதிகளின் அழகையும் குறையில்லாமல் காட்டியிருக்கிறார். நாயகியின் அழகை இன்னமும் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பாடல் காட்சிகளிலும், சென்னைப் பகுதி காட்சிகளிலும் ஒரு அழகுச் சோலையே தெரிகிறது. அந்த வீட்டின் உள் அலங்காரத்தை வடிவமைத்த கலை இயக்குநருக்கு ஒரு பாராட்டு.

இப்படத்தின் மூலம் சையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் இசையமைப்பாளர் பரத் தனசேகரின் இசையில், பாடல்கள் கேட்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் அளவுக்கதிகமாக 7 பாடல்கள் என்றிருப்பதுதான் சலிப்பைக் கொடுத்துவிட்டது.

வெத்தல’, ‘செல்லக் கிளி’, ‘தனியா நான்’, ‘சிது சிது’, ‘யெம்மா கொல்றியே’, ‘ஐயோம்மா’, ‘யார்’ என்ற பாடல்களின் லிஸ்ட், படத்தின் ஸ்பீடை குறைத்து நமது மூடையும் மடை மாற்றுகின்றன. பின்னணி இசையை பரவாயில்லை என்றே சொல்லலாம்.

பெண்களுக்கு வெறுமனே படிப்பும், கல்யாணமும் மட்டுமே தேவையானதில்லை. அவர்களது கனவுகள், லட்சியத்தையும் அவர்கள் அடைய வேண்டும் என்பதை சொல்ல வந்த இயக்குநர், அதை சொல்லும்விதத்தில்தான் கோட்டைவிட்டுவிட்டார்.

பெண்கள் அவர்களின் 30 வயதுக்குள்ளாக குழந்தை பெற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் நல்லது என்பது உலகளாவிய மருத்துவர்களின் அறிவுரை. இதற்காகத்தான் பெண்களுக்குச் சீக்கிரமாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லையே..!?

சினிமாவில் நாயகியாக நடித்து, வயதான பின்பு.. மார்க்கெட் போன பின்பு எத்தனையோ நடிகைகள் 30, 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். ஆனால் இது பெயர், பணம், புகழ் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் குடும்பத்தாருக்கு ஓகேதான்.

ஆனால் தென்காசியில் சாதாரண ஓட்டு வீட்டில் வசிக்கும் தலைவாசல் விஜய்யும் இதையே நினைப்பார் என்று எதிர்பார்ப்பது நமது தவறுதானே..?! இதை இயக்குநர் வசனத்தின் மூலமாக அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் சினிமாவில் நாயகியாக நடிக்கவிருப்பதாலேயே நாயகி மது அருந்தும் பழக்கம் உள்ளவராகவும், அவர் மட்டுமில்லாமல் அவருடைய நண்பர்களும் அப்படியே இருப்பதாகக் காட்டியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

ஆண்களே குடிக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு குற்றவுண்ர்ச்சியே இல்லாமல் பெண்களும் குடிக்கலாம் என்று குடியை ஆராதிப்பதுபோல காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்..!

சினிமாவிற்குள் இருக்கும் முதலாளிகள் என்றழைக்கப்படும் தயாரிப்பாளர் ஒருவரே நாயகியை படுக்கைக்கு அழைக்கிறார் என்றவுடன் அவரைத் தேடிப் போய் செருப்பால் அடிக்கும் நல்லவராக விஜய் ஆண்டனியைக் காட்டியிருப்பது மிகப் பெரிய கதையாடல். சினிமாவுக்குள் இருந்து கொண்டே இப்படியொரு சூழல் இருப்பதையும் மறைக்காமல் வெளிப்படுத்தியிருக்கும் விஜய் ஆண்டனியின் தைரியத்தை நாம் பாராட்டலாம்.

திருமணம் என்பது விளையாட்டு பொருளல்ல. மிருணாளினி 18 வயது பெண்ணும் அல்ல. திருமணத்திற்குத் தலையாட்டிவிட்டு சென்னைக்கு வந்தவுடன் “நாம் டைவர்ஸ் செய்து கொள்ளலாம். எனக்கு என் கேரியர்தான் முக்கியம்..” என்று நாயகி சொல்வதெல்லாம் பக்கா பிராடுத்தனம். ஏமாற்று வேலை. சீட்டிங் பார்ட்டிகளின் வேலை.

இதை ஒரு நாயகியின் கேரக்டர் ஸ்கெட்ச்சாக கொண்டு வந்து வைத்திருப்பது அந்தக் கேரக்டருக்கே டேமேஜாகிவிட்டது. இதனாலேயே அந்தத் தயாரிப்பாளர் நாயகியை படுக்கைக்கு அழைக்கும் காட்சி, பார்வையாளர்களுக்குள் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் வசனங்கள் முழுவதும் சாதாரண ரசிகனின் மூளைக்குள் போய் அமர ரொம்பவே கஷ்டப்படுகிறது. மாத நாவல்களில் வரும் பொடி வைத்துப் பேசும் வசனங்களாகவே கடைசிவரையிலும் அவைகள் இருப்பதால்… படம் சொல்ல வந்த கருத்து, ரசிகர்களின் மனதில் பதியாமலேயே போய்விட்டது.

மேலும், ‘விக்ரம்’ என்ற அந்த நாயகனின் இன்னொரு கதாப்பாத்திரத்திற்கு பெரிதாக மெனக்கெடாமல் ஏஐ தொழில் நுட்பத்தில் உதவியால் குரலை மாற்றச் செய்து பேசியிருப்பதில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது வருத்தமே..!

படத்தின் நீளத்தையும் சற்று குறைத்து, பாடல்களையும் குறைத்து, திரைக்கதையின்  தேக்க நிலைகளையும் சரி செய்து, நாயகியின் சினிமா இல்லாத கனவு ஒன்றினைக் கையிலெடுத்து, இருவரும் இணைந்து அந்தக் கனவை நோக்கிப் பயணிப்பதுபோல கதையோட்டத்தை அமைத்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.

RATING : 3 / 5

Our Score