இந்த படம் முழுக்க, முழுக்க பாண்டிச்சேரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த காளி என்ற அருண் விஜய், அந்த சிறு வயது தோழியாக சித்தி இத்னானியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.
இப்போது அவர்கள் இருவரும் அடல்ட்ரி வயதுக்கு வந்த பின்பு சித்தி இத்னானி கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்தவர் இப்போது ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இன்னொரு பக்கம் காளி என்ற அருண் விஜய் சித்தி இத்னானி தன்னை காதலித்து வருகிறார் என்று நினைத்து சித்தி இத்னானியை திருமணம் செய்யும் ஐடியாவில் இருக்கிறார்.
ஆனால் சித்தி இத்னானியோ காளி அன்றாட காட்சி போல் இருப்பதால் “உன்னை திருமணம் செய்து கொண்டு நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. அதனால் மிகப் பெரிய பணக்காரன் ஒருவனை திருமணம் செய்யப் போகிறேன்” என்று வெளிப்படையாக சொல்லி காளியை நோகடிக்கிறார்.
தன்னுடைய காதல் பிசுபிசுத்துப் போன சோகத்தில் இருந்த அருண் விஜயை தற்செயலாக இன்னொரு அருண் விஜய்யான உபேந்திராவை சந்திக்கிறார். இருவருமே ஒரே மாதிரி இருப்பதால் இருவருக்கும் ஒரு குழப்பம் வருகிறது.
ஆனாலும் இது எப்படி சாத்தியம் என்பதைவிட, “சந்தித்து விட்டோம் இனிமேல் நாம் எப்படி இருப்போம் என்பதை நாம் யோசிப்போம்” என்று அட்வைஸை வீசுகிறார் பணக்காரரான உபேந்திரா.
காளி என்ற அருண் விஜய் உபேந்திரா என்ற அந்த பணக்கார அருணை சித்தி இத்னானியுடன் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
அப்பொழுது சித்தியின் கிரிமினல் மூளை வேலை செய்து “உபேந்திராவை கொலை செய்து விட்டால் அவரிடம் இருக்கும் மொத்த பணமும் நமக்கு வந்துவிடும். நாம் பணக்காரர் ஆகிவிடலாம்* என்று காளிக்கு அட்வைஸ் செய்கிறார். இந்த திட்டத்திற்கு காதல் மயக்கத்தில் இருக்கும் காளியும் ஒத்துக் கொள்கிறார்.
ஒரு நல்ல நாள் பார்த்து உபேந்திராவை திட்டமிட்டு கொலை செய்கிறார் காளி. உடனே உபேந்திரா போலவே தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு தானே உபேந்திரா என்கிறார்.
ஆனால், அதற்கு பின்புதான் காளிக்கு பல உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. அந்த சர்ச்சையான, சஸ்பென்ஸான விஷயங்கள் என்ன? உண்மையில் உபேந்திரா யார்? அவர் எதற்கு பாண்டிச்சேரிக்கு வந்தார்? இந்தப் பிரச்சனையில் இருந்து காளி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய் அந்த இரண்டிலுமே வெற்றி பெற்று இருக்கிறார். ஸ்டைலான ஒரு நடிப்பினை படம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார். கூடவே அந்த ஸ்டைலான அவருடைய பாடி லாங்குவேஜ் நம் கவனத்தை ஈர்க்கிறது.
அவருடைய நடிப்பிற்கு தன் உடல் அசைவையும், கூர்மையான பார்வையையும் இரண்டு கேரக்டர்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் கச்சிதமாக செய்திருக்கிறார் அருண் விஜய்.
ஆக்சன் காட்சிகளில் அக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பின்பு இவ்வளவு வேகமாக சண்டை இடுவது அருண் விஜய்தான் என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகளை பின்னி இருக்கிறார். ஆனாலும் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு அதிகமான இவருக்கான பில்டப் காட்சிகளும் பின்னணி இசையும் சேர்ந்து படம் முழுவதும் வருவதால் போக, போக நமக்கே அலுப்புதான் தட்டுகிறது.
நாயகி ஆந்திராவாக நடித்திருக்கும் சித்தி இத்னானி கதையை தேர்வு செய்துதான் நடிக்கிறேன் அதனால்தான் அதிகமான படங்களில் நான் நடிக்கவில்லை என்று சொன்னார்.
இந்தப் படத்தில் அவர் எதை வைத்து நடித்தார் என்றுதான் தெரியவில்லை. அவர்தான் இந்தப் படத்தின் ஒரு மையப் புள்ளி என்றே சொல்லலாம்.
ஆனால் தன்னை வைத்து சுழலும் அந்த திரைக்கதையில் அவர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது பரிதாபம்தான்.
இவருடைய ஸ்பெஷாலிட்டியே சிரிக்கும்போது அவரது கன்னத்தில் விழும் குழிதான். ஆனால், அதைகூட அழகாக காட்டாமல் இருண்மையிலேயே சித்தி இத்னானி வருவதால் அந்த அழகு முகத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது.
மெயின் வில்லனாக ஹரிஷ் பெராடியும், இவருடைய மகன் பாலாஜி முருகதாஸ் மற்றும் மருமகள் தனியா ரவிச்சந்திரன் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு காட்சியிலும் வந்து தங்களது வில்லத்தனத்தை காட்டி விட்டுப் போய் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் படத்திற்கு படம் ஊமை சேட்டைகளையும் உடல் அசைவுகளால் காமெடியாகவும் பேசி வரும் ஜான்விஜய் இந்த படத்திலும் அதே நடிப்பையை காண்பித்திருக்கிறார்.
கூடவே வசனங்கள் எல்லாம் ‘ஏ’ பிளஸ் ரகமாகவும் இரட்டை அர்த்த ஆபாச வசனமாகவும் இருப்பதால் இவருடைய கேரக்டரை நம்மால் ரசிக்க முடியவில்லை.
படம் முழுவதும் இருட்டிலேயே எடுத்திருப்பதால் ஒளிப்பதிவாளரை வன்மையாக கண்டிக்க வேண்டி இருக்கிறது.
ஏனெனில், நடிப்பில் முக பாவனை மிக முக்கியம். ஆனால் அது முகப்பாவத்தையே நாம் பார்க்க முடியாதபடி மொத்தமாக இருட்டிலேயே நடிக்க வைத்திருக்கிறார்கள். இதனாலேயே அருண் விஜய் மற்றும் சித்தி இத்னானியை நம்மால் அதிகமாக ரசிக்க முடியவில்லை. படத்தில் ஏன் இவ்வளவு இருட்டு என்பதை ஒளிப்பதிவாளர்தான் சொல்ல வேண்டும்.
சாம் சி.எஸ். பின்னணி இசையை வழக்கம்போல அடித்து அடி இருக்கிறார். முதல் பாதி ரன் ஃபாஸ்ட் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் போட்டிருக்கும் அந்த பின்னணி இசை தூங்குபவர்களை எழுப்பி விடுவதை போலவே இருக்கிறது.
பாடலுக்கான இசையில் ‘கண்ணம்மா’ என்கின்ற அந்த பாடல் தியேட்டரை விட்டு வெளியில் வரும்பொழுதும் நம் மனதில் ஒலிக்கிறது. அதற்காக ஒரு பாராட்டுக்கள்.
படத் தொகுப்பாளர் ஆண்டனி இது ஒரு ஹீரோ மெட்டீரியல் ஸ்டோரி என்பதால் அதற்கு ஏற்றார்போல எடுத்துக் கொடுத்த காட்சிகளை நறுக்கி கொடுத்திருக்கிறார்.
இயக்குநரான க்ரிஷ் திருக்குமரன் “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்னும் புத்தரின் பொன்மொழியை வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
சித்தி இத்னானி பெரும் பணக்காரியாக வேண்டும் என்ற அந்த ஆசைதான் காளி என்ற இளைஞரையும், உபேந்திரன் என்ற இளைஞரையும் காலி செய்கிறது என்பதை நாம் உணர்வும் வகையில் கமர்சியல் ஆக்சன் படமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.
முதல் பாதியில் படம் ரன் வேகத்தில் பறக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது. இப்பதான் முடிந்தது என்பதுபோல நமக்கு தோன்றியது. அந்த வகையில் முதற் பாதியில் இருந்த ஃபாஸ்ட் ஸ்கிரீன் பிளே இரண்டாம் பாதியில் காணாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
பணத்திற்கு லோலோ என்று அழையும் சித்தி இத்னானி இறுதியில் பணமா, நானா என்ற காளியின் கேள்விக்கு நடிப்பினால் மட்டுமே பதில் சொல்வது போல அமைந்திருப்பது படம் பார்க்க வந்த ரசிகர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.
படம் முடிந்து வெளியில் சென்றவர்கள் என்ன நினைத்து சென்றார்களோ தெரியவில்லை. இப்படி ஒரு கிளைமாக்ஸ் கட்சியை இயக்குநர் வைத்திருப்பது சரியல்ல.
மால் தியேட்டர் இல்லாமல் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் மன நிலையையும் அவர்களது அறிவாற்றலையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்களுக்கு எளிதாக புரிவது போல நீங்கள் ஒரு படத்தை கொடுத்தால்தான் அந்தப் படம் நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களிடம் படம் பற்றி யாரும் சொல்ல மாட்டார்கள். இதனால் பாதிப்பு படத்தின் தயாரிப்பாளருக்குத்தான்.
இதை வருங்கால இயக்குநர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறோம்.
இந்த ‘ரெட்டை தல’ திரைப்படம் ஆக்சன் காட்சிகளுக்காகவே பேசப்படும்.








