கல்யாண சர்ச்சைகள் விடாது கருப்புவாக தொடரும் நடிகை பட்டியலில் மீரா ஜாஸ்மினும் இடம் பிடித்துவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம்தான் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை சர்ச்சில் கரம் பிடித்தார் மீரா ஜாஸ்மின்.. அத்திருமணத்தை இந்த ஏப்ரல் மாதம்தான் ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் தம்பதிகள்.
ஆனால் அந்த நேரம் மணமகன் அனில் ஜான், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்திருந்ததாக அந்தப் பெண்ணே புகார் கூறியிருந்தார். மீரா ஜாஸ்மினின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாகவும் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதையறிந்த அனில் ஜான், தன்னுடைய திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கோர்ட் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்புடன்தான் கல்யாணத்தை நடத்தி முடித்தார்கள்.
அந்தப் பெண் தொடர்பான வழக்கு இப்போது சர்ச்சையாகியிருப்பதால் அதற்கான சரியான ஆவணங்களை அனில் ஜான் தாக்கல் செய்யாததால், இவர்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டதாம் பத்திரப் பதிவுத் துறை அலுவலகம்..
என்னடா இது சோதனை என்று இரண்டு குடும்பத்தின் பெரியவர்களும் கேரளாவில் யோசனையில் இருக்க.. இது எதைப் பற்றியும் கவலையில்லாமல் துபாயில் நிம்மதியாக இருக்கிறார்கள் மீரா ஜாஸ்மினும், அவரது கணவரும்..!