full screen background image

வெத்து பைட்டு, குத்துப் பாட்டு, தம்மு சீன்- இவை எதுவுமில்லாமல் வருகிறது ஒரு சினிமா..!

வெத்து பைட்டு, குத்துப் பாட்டு, தம்மு சீன்- இவை எதுவுமில்லாமல் வருகிறது ஒரு சினிமா..!

ரீங்காரம்- அன்றாடம் மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் அனுபவிக்கும் உணர்வுகளை பற்றிய படம்.

‘முட்டாள் ஒருவனால் எழுதப்படுவதே வாழ்க்கை’ என ஷேக்ஸ்பியர் கூறியது போல ஏராளமான சுவாரஸ்யங்கள், எதிர்பாராத திடீர் திருப்பங்கள், எண்ண முடியாத சுகதுக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை.

எங்கிருந்தோ வந்து விழுகிற. ஒரு கல், குளம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்துவதைப் போல, வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பந்தமில்லாதவர்களால் சந்திக்கும் அதிர்வலைகளைச் சொல்கிற படம்தான் ‘ரீங்காரம்’.

ஜே ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ரீங்காரத்தை சிவகார்த்திக் இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் மட்டுமல்ல அவரது சீடர்கள் சி.ஜே. பாஸ்கர், சமுத்திரக்கனியிடம் மட்டுமல்ல மூர்த்தி, ‘அரசு’ சுரேஷ் போன்ற இயக்குநர்களிடமும் உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்து அனுபவங்களைப் பெற்றுள்ள சிவகார்த்திக் இயக்கும் முதல் படம் ‘ரீங்காரம்’.

கதையின் மையமாக நான்கு பாத்திரங்கள் நகர்கின்றன. ஒரு நாள் காலை முதல் மாலைவரை சில சம்பவங்களை நிகழ்த்துகின்றன. ஒருவரால் ஒருவருக்கு நேரும் அதிர்வலைகள் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இப்படம் சொல்கிறது. 4 பேர் ஒரு நாள்..  இதுதான் கதை என்கிறார் இயக்குநர் சிவகார்த்திக்.

கதையின் நாயகனாக பாலா நடிக்கிறார். கதையின் நாயகியாக கங்காரு பிரியங்கா நடிக்கிறார், இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், நடிப்பதற்கு தனக்கு அதிக பங்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். கலாபவன் மணி காமெடியானா? வில்லனா? என்று யூகிக்க முடியாத பாத்திரத்தில் வந்து கலகலப்பு மணியாக திகிலூட்டுகிறார். தான் நடித்த 350 படங்களைவிட இது புதுமையான கதாபாத்திரமாக இருந்ததாக தயாரிப்பாளரிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆடுகளம் வ.ச.ஐ.ஜெயபாலன், ஆடுகளம் திரைபடத்திற்குப் பின்பு தனது வயதிற்கும் தனது உருவத்திற்கும் மிக பொருத்தமான கதாபாத்திரமாக இருப்பதால் கதையோடு இணைந்து வாழ்வதாக மெய்சிலிர்க்கிறார். இது தனக்கு இன்னொரு விருதுக்கான படம் என்கிறார். படத்தின் திரைக்கதை உத்தியால் கவரப்பட்ட தயாரிப்பாளர் அதற்காகவே இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் ஹரீஸ் இவர் ஆர்த்தர் ஏ வில்சனிடம் உதவியாளராக பல படங்கள் பணிபுரிந்துள்ளார்.

இசை அலி மிர்ஸா. ஆதார் படத்திற்கு அடுத்தபடியாக அவர் இசை அமைக்கும் படம். ரீங்காரம் தலைப்பிற்கு ஏற்ப இனிமையான ரீங்காரமிடும் இசை தந்துள்ளதாகவும். இது இசை சம்பந்தமான படமாக அமையுமென்றும் கூறுகிறார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிவகார்த்திக். தயாரிப்பு ஜே.ஸ்டுடியோஸ்.

வளர்ச்சிக்கே சொந்தமான மலைக்கோட்டை அமைந்துள்ள திருச்சியில் பெமினா ஷாப்பிங் மால் மற்றும் 100 ஏக்கரில் அமைந்த கல்குவாரியிலும் முதல் கட்ட படபிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. மூன்றே மாதங்களில் முழுப்படம் என்கிற இலக்குடன் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு. தயாரிப்பு தரப்பு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

“இது புதியவர்களுக்கு வரவேற்பு தரும் காலம். புதிய முயற்சிகளுக்கும் ஆதரவு தருகிற சூழல். இப்படத்தின் திரைக்கதை நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். அதன் பாதையும் பயணமும் கவரும்படி இருக்கும் சம்பவக் கோவைகள் அழகாக தொடுக்கப்பட்ட விறுவிறுப்பூட்டும் திரைக்கதை இது. பின்னணி இசையிலும் படம் பேசப்படும். உண்மையான வண்டின் ரீங்காரம் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளது பலரையும் கவரும்…” என்கிறார் இயக்குநர்.

நம்பிக்கை தரும் நல்ல முயற்சிகள் என்றும் தோற்பதில்லை.

Our Score