மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் பம்பர் ஹிட் அடிக்கப் போகிறேன் என்று தைரியமாக சொல்லியிருக்கும் வடிவேலுவுக்கு எதிர்ப்புகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.
தெனாலிராமன், ஆந்திர மாநிலத்தின் ஆதர்ச மன்னரான கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரு மதியூக அமைச்சர். இவருடைய கதைகள் இன்றைக்கும் சிறுவர் இலக்கியமாகவே கருதப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் நம்முடைய ராஜராஜசோழனை போன்ற ஆந்திராவில் புகழ் பெற்றவர்..
இப்படிப்பட்ட புகழுடைய கிருஷ்ணதேவராயரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்வகையில் சில காட்சிகள் தெனாலிராமன் படத்தில் இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தலைமையில் இருபது தெலுங்கு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் படத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.
“வடிவேலு ஏற்கனவே நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் மன்னர்களை கோமாளி போல் சித்தரித்தார். தற்போது அவர் நடித்து ரிலீசாக உள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயராகவும் தெனாலி ராமனாகவும், இரு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். கிருஷ்ணதேவராயர் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்தவர். திருப்பதி கோவிலை அவர்தான் கட்டினார். ஆந்திர மக்களிடன் இதயங்களில் வீற்றிருக்கிறார். இப்படிப்பட்ட மாமன்னர் கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருந்தால் தெலுங்கு பேசும் மக்கள் வருத்தப்படுவார்கள். எனவே கிருஷ்ணதேவராயரின் வரலாறு தெரிந்தவர்களை வைத்து தெனாலிராமன் படத்தை மீண்டும் சென்சார் செய்ய வேண்டும். சர்ச்சையான காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்…” என்று தலைமைத் தணிக்கை அதிகாரியான பக்கிரிசாமியிடம் புகார் கொடுத்துள்ளார்களாம்..
கைப்புள்ளையை லவட்டி லவட்டி அடிக்கிறாய்ங்கப்பா..!