full screen background image

ரெபெல் – திரைப்பட விமர்சனம்

ரெபெல் – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  கலை இயக்கத்தை உதயா கவனிக்க,  பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். பத்திரிக்கை தொடர்புயுவராஜ், புதுமுக இயக்குநரான எஸ்.ஆர்.நிகேஷ் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு உண்மை சம்பத்தைத் தழுவி சர்ச்சைக்கிடமான கதை, திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

1980-களில் நடக்கும் கதை. மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் சுப்ரமணிய சிவாவின் மகன் கதிர் என்ற ஜி.வி.பிரகாஷ்குமார்.

தன் தலைமுறையில் தாங்கள் கஷ்டப்பட்டது போதும்.. தங்களது பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அவர்களது கஷ்டத்திற்கிடையேயும் கல்லூரிப் படிப்புக்காக அருகில் இருக்கும் பாலக்காடு சித்தூரில் இருக்கும் அரசு கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்.

அப்படி தங்களது பெற்றோர்களின் கனவுகளை சுமந்து கொண்டு ஜி.வி.பிரகாஷும் அவரது நண்பர்களும் பி.ஏ. வரலாறு படிப்பதற்காக அந்தக் கல்லூரிக்குள் கால் வைக்கிறார்கள்.

அந்த நேரத்தில் கேரள மாநிலத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் இரண்டு பிரிவு மாணவர் அமைப்புகள் அந்தக் கல்லூரியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு பிரிவு கேரள மாணவர்கள் அமைப்பும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருக்கிறார்கள். அது தமிழ் மாணவர்களை தலை தூக்க விடாமல் செய்வதில்தான்..!

தமிழ் மாணவர்கள் அந்தக் கல்லூரியில் அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். கேரள மாணவர்களுக்கு நவீனமான பில்டிங்கில் ஹாஸ்டல் ரூம், கிடைக்க தமிழ் மாணவர்களுக்கு ஓட்டு வீடுதான் கிடைக்கிறது. ராகிங்’ என்ற பெயரில் தமிழர்களை கேவலப்படுத்துகிறார்கள். தமிழர்களின் அடையாளமான வேஷ்டியைக்கூட தமிழ் மாணவர்கள் கட்டக் கூடாது என்கிறார்கள்எதிர்த்து பேசுபவர்களை அடித்து, உதைக்கிறார்கள்.

எப்படியாவது படிப்பை முடித்தால் போதும் என்று இவர்களின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் தமிழ் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக.. ஒரு தமிழ் மாணவன் அடித்துக் கொல்லப்படுகிறான். அந்தக் கொலை லோக்கல் அரசியல் செல்வாக்கினால் சாதாரண மரணமாகவும் ஆக்கப்பட்டு விடுகிறது.

இதற்கு மேலும் பொறுமை காத்தால் நாம் தமிழர்களே இல்லை என்றெண்ணிய தமிழ் மாணவர்கள் ஜி.வி.பிரகாஷ் தலைமையில், அந்த வருடத்தில் நடக்கவிருக்கும் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் தமிழ் அணி ஒன்றை அமைத்துப் போட்டியிடுகிறார்கள்.

இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் இரண்டு கேரள கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்புகளும் தமிழ் மாணவர் அமைப்பை நசுக்கப் பார்க்கிறார்கள். அழித்தொழிக்க நினைக்கிறார்கள்.

இந்தப் போரில் ஜெயித்தவர் யார்..? தமிழ் மாணவர்கள் வெற்றி பெற்றார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ரெபெல்’ என்ற புரட்சியைத் தூண்டும் படத்தின் திரைக்கதை.

தனது திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு புரட்சியாளன் வேடத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அதற்காகப் பெரிதும் மெனக்கெடவில்லை. போன படத்தில் பார்த்த அதே தோற்றத்தில், அதே நடிப்பைதான் இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறார்.

தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை முதல்முறையாக சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தயக்கத்துடன் பேசுவதில் துவங்கி, கடைசியாக இவர்களின் கட்சி அரசியலைப் புரிந்து கொண்டு அதேபோல் தானும் மாறுகின்ற காட்சிவரையிலும்  தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

இந்த நடிப்பில் மமீதா பைஜூவுடனான காதல் உணர்வைக் காட்டுவது, அறச்சீற்றத்தை தனது பேராசிரியர் கருணாஸிடம் காட்டுவது.. எதிரிகளிடம் அனல் கக்கும் வசனங்களைப் பேசி வீரத்தைக் காட்டுவதாக பலதரப்பட்ட நடிப்பையும் காண்பித்து இதிலும் ஓகே வாங்கிவிட்டார்.

கையோடு இனிமேல் ஜி.வி.பிரகாஷை ‘ரெபெல்’ ஸ்டார் என்றுகூட பட்டம் கொடுத்து அழைத்துவிடலாம். அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.

நாயகியான மமீதா பைஜூவின் முதல் படத்தைப் பார்த்துவிட்டு இதில் அதே மாதிரியான நடிப்பை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அதற்கான ஸ்கோப் படத்தில் நாயகிக்கு இல்லாததால் அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம்தான். ஆனால், தான் வருகின்ற காட்சிகளில் கவன ஈர்ப்புக்குக் குறை வைக்கவில்லை இந்த மலையாளத்துப் பைங்கிளி.

ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோருக்கு சம அளவில் திரைக்கதையில் இடம் கொடுக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதித்யா பாஸ்கரின் சோகமான முடிவுதான் படத்தின் முடிச்சு. கல்லூரி வினோத் துவக்கக் காட்சியில் தனது அப்பாவின் வேலையை வசனமில்லாமல் நடித்துக் காண்பிக்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்..!

அவ்வப்போது அடங்கிப் போகும்படி அறிவுரை சொல்லி தமிழ் மாணவர்களை நல்வழிப்படுத்த முயலும் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ் போன்றவர்கள்தான் இந்தப் புரட்சிகளின் முதல் எதிரி என்பதை இயக்குநர் பதிய வைக்கவில்லை என்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா படத்திற்குப் படம் நடிப்பில் மெருகேற்றிக் கொண்டே போகிறார். இதேபோல் ஆதித்யா பாஸ்கரின் அம்மாவாக நடித்தவர் பாட்டி மாதிரியிருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலு ரஹீம் இருவரும் தங்களது தமிழர்கள் மீதான வன்மத்தை காட்டும்போதும், கட்சி, அமைப்பு, தேர்தல், என்ற அரசியல் சாக்கடையில் தேய்ந்து போயிருக்கும் முட்டாள் தொண்டர்களை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 

1980-ம் காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஒரேயொரு காம்பவுண்டுக்குள்ளேயே வைத்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

இதற்காக அதிகம் உழைத்திருக்கும் கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர் இருவரையும் பாராட்ட வேண்டும். அதோடு படத்தை அதீத சிரத்தையுடன் கடைசிவரையிலும் மலையாள மண்ணின் அடையாளத்துடன் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மலையாள வரிகளுடன் துவங்கும் காதல் பாடல்களும், போராட்ட வெறியை ஏற்றும் புரட்சிக்கான பாடலும் நன்று. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

1980-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் நிகேஷ் சொல்லியிருக்கிறார்.

அந்த நேரத்தில் கேரளத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இன விரோத, மொழி விரோத செயல்களுக்கான அடிப்படையை இந்தப் படம் முழுமையாகச் சொல்லவில்லை.

1980-களில் கேரள அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அதிகாரப் போர் இரு தரப்பாருக்குமே உயிரை எடுக்கும் போர்க்களமாக இருந்தது.

இ.கே.நாயனாரும், கே.கருணாகரனும், ஏ.கே.அந்தோணியும் மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து கேரள அரசியலை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது கிளைகளை நிறுவி மாணவர்களை, அவர்களது இளம் பிராயத்திலிருந்தே தங்களது கட்சியின் தொண்டர்களாக்கி மூளைச் சலவை செய்து கொண்டிருந்தன.

அந்த இளைஞர்களின் துடிப்பான, வேகமான செயல்களால் ஏற்படும் மோதல்கள் மரணம்வரையிலும் சென்றாலும்கூட இப்போதுவரையிலும் இந்த வளர்த்தெடுப்பு கேரளாவில் மாறவே இல்லை.

மொழியால் ஒன்றுபட்டோம் என்ற கோஷம், வேற்று மொழி பேசுபவரை அன்னியமாகவே பார்க்க வைத்திருக்கிறது. இந்த வித்தியாசத்தை உணராத இளைஞர்கள் பலர் இது போன்று தமிழ் மாணவர்களை அடக்கு முறையால் கொடுமைப்படுத்தியது அக்காலத்தில் மலையாள மொழியில் திரைப்படமாககூட எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியாக தற்போது தமிழில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக இது அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

இத்திரைப்படம் கேரளாவில் திரையிடப்பட முடியாது என்ற யதார்த்த நிலைமை புரிந்தும், இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளரை பெரிதும் பாராட்ட வேண்டும்.

மொழி உணர்வு என்பது ரசனையின்படி அதனதன் உயர் தன்மைகளை கற்றுக் கொள்ளவும், இதன் வழியாக சொல்லப்படும் கலாச்சாரத்தையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் கைவிடாமல் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தவும் உதவ வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

ஆனால், துரதிருஷ்டவசமாக இதில் அரசியல் என்னும் சாக்கடை நுழைந்ததால் வேற்று மொழி மனிதரையே தன் சொத்துக்களை அபகரிக்க வந்த திருடனைப் போல் பாவிக்க வைத்து, தன்னை அண்டி வந்த வேற்று மொழி மக்களை அடிமையாக்கவும் துணிந்தது. இதுதான் இந்த 1980-களில் இந்தப் பாலக்காட்டு சித்தூர் கல்லூரியில் நடந்திருக்கிறது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் முழுமை பெறாத திரைப்படமாக நமக்குத் தோன்றினாலும், நடந்த கதையை அத்தோடு முடித்துவிட்டு பின்னர் இந்தப் பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டு தமிழ், மலையாள மாணவர்களிடையே நல்லுறவு பேணப்பட்டது என்று இயக்குநர் தெரிவிப்பது உண்மையாக நடந்த கதை என்பதால் சரியான நேரத்தில், சரியான கோணத்தில் இத்திரைப்படம் முடிக்கப்பட்டிருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு திரைப்படமாக இந்த ரெபெல் நமக்கு முழு திருப்தியைத் தராவிட்டாலும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய ஆவணத் திரைப்படமாக இது பதிவாகியிருப்பது பாராட்டுக்குரியது.

இதில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகளுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்..!

RATING : 3.5 / 5

Our Score