தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் பத்திரிகையாளர்களை மண்டை காய வைப்பது கருத்துக் கணிப்பு மட்டுமே அல்ல.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆதரவு மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினரின் ஆதரவு யாருக்கு என்கிற விஷயத்திலும்தான்..
இப்போது நடைபெறவிருக்கும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினியின் வாய்ஸை கேட்டு பெறும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி மிக தீவிரமாக இருந்தது. இரண்டு முறை நரேந்திர மோடி சென்னை வந்தபோது ரஜினியை சந்திக்க வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இப்போதைக்கு பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் கோச்சடையான் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்கிற ஒரே விருப்பத்தில் இருக்கும் ரஜினி, அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் மோடியை சந்திப்பதை கவனமாகத் தவிர்த்துவிட்டார்.
ஆனாலும் அழகிரி அவரை சந்தித்ததும் பிரச்சினை வேறு பக்கம் அவரை இழுத்தது. அழகிரி தலைமையில் தி.மு.க. எதிர்ப்பலைகளின் ஆதரவை பி.ஜே.பி. அணி கேட்டுக் கொண்டிருக்க இதற்குப் பின்னணியி்ல ரஜினியின் ஆசீர்வாதமும் இருக்கிறது என்கிற பேச்சும் எழுந்தது.
இனிமேலும் அமைதியாய் இருந்தால் கோச்சடையானுக்கே ஆபத்து வரும் என்பதை உணர்ந்துதான் இன்றைக்கு அறிவி்ப்பை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
இந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதி்லலை என்றும், நடுநிலைமை வகிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார் ரஜினி. நன்று. சிறந்த முடிவுதான்.
ஆனாலும் ரஜினி ரசிகர் மன்றங்களுக்கு எந்தவித கட்டளையையும் கொடுக்காததால், வழக்கம்போல லோக்கல் அரசியலுடன் இணைந்து அவரவர்க்கு பிடித்தமானவர்களுக்கு வேலை செய்து ஜோதியில் ஐக்கியமாவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..