‘கேம்பர் சினிமா’ நிறுவனம், தான் தயாரித்த ‘ராமானுஜன்’ என்ற ஆங்கில திரைப்படத்தை பன்னாட்டு அளவில் வெளியிட, ‘வான்ரையான்ஸ் என்டர்டைன்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ‘ராமானுஜன்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பு சர்வதேச அளவில் வெளியிடப்படும். இந்தியத் தயாரிப்பான ஓர் ஆங்கிலத் திரைப்படம், ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!
‘வான் ரையான்ஸ் என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் ‘என்ற நிறுவனம் சிங்கப்பூரில் முறையாக பதிவு செய்யப்பட்டதாகும். சர்வதேச ஊடக படைப்புகளில் முதலீடு செய்வதும், பல நாடுகளில் அந்த படைப்புகளை வெளியிடுவதுமே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
‘கேம்பர் சினிமா’ நிறுவனமானது, ஸ்ரீவத்சன் நடாத்தூர், சுஷாந்த் தேசாய், சரண்யன் நடாத்தூர், சிந்து ராஜசேகரன் தேசாய், ஆகிய நான்கு இளைஞர்களால் உருவானதாகும்.
இந்த நான்கு தொழில் முனைவோரும் இணைந்து, திரைக்கதையாசிரியர்-இயக்குனரான ஞான ராஜசேகரன், ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப், கலை-இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஆகிய தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற திறமைசாலிகளையும், ரமேஷ் விநாயகம் என்ற புகழ் பெற்ற இசையமைப்பாளரையும், தங்களது முதல் படைப்பில் ஒருங்கிணைத்துள்ளனர்.
புகழ் பெற்ற நட்சத்திர ஜோடியான ஜெமினி கணேசன்-சாவித்திரி ஆகியோரின் பேரனுமான ‘அபிநய்’, ‘ராமனுஜன்’ வேடத்திலும், மலையாள நடிகையான ‘பாமா’, அவரது மனைவி ஜானகி வேடத்திலும் நடித்துள்ளனர். திறமை வாய்ந்த திருமதி சுகாசினி மணிரத்தினம், பிரபல ஆங்கில மேடை-திரைப்பட நடிகரான ‘கெவின் மக்கோவன்’, ஆகியோருடன், அப்பாஸ், ‘நிழல்கள்’ ரவி, டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், சரத்பாபு, ராதா ரவி, டி.பி.கஜேந்திரன், ‘தலைவாசல்’ விசை, மற்றும் ஆங்கில நடிகர்களான மைக்கேல் லீபர், ரிச்சர்ட் வால்ஷ், ஆகியோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
திரைக்கதையாசிரியர்-இயக்குனரான ஞான.ராஜசேகரன் அவர்கள், மிக விரிவான, ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் ‘ராமானுஜனின்’ வாழ்க்கை வரலாற்றையும், அவரது சாதனைகளையும் ‘அதிகாரபூர்வமாக’ இப்படத்தில் பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது.
அவரது காலகட்டத்தில் எந்தவொரு புகழையும் பெற்றிடாத, கணித மேதை ராமனுஜன், கும்பகோணத்திலிருந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தையும், இந்திய நாட்டின் கல்வியாளர்கள் எவ்வாறு அவரை அலட்சியப்படுத்தினார்கள் என்பதையும், அந்த வேதனைகளை தாங்கிக்கொண்டு அவர் தமது தன்னம்பிக்கையை இழக்காமல், பேராசிரியர் ஹார்டியின் உதவியுடன் எவ்வாறு இங்கிலாந்தின் மிக உயரிய ‘Fellow of the Royal Society’ என்ற விருதினை பெற்றதையும், – இந்த ஆங்கிலப் படம் அவரது நினைவைப் போற்றும்விதமாக, உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் நான்காம் நாள் முதல் பதினான்காம் நாள் வரை நடைபெற உள்ள ‘டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா’வில் இப்படம் முதன் முறையாக திரையிடப்பட இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து, ‘வான் ரையான்ஸ் என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ராமானுஜன்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை சர்வ தேச அளவில் வெளியிடும் பொறுப்பை ஏற்று கொண்டது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.. இந்தியாவின் மாபெரும் கணிதமேதை ஒருவரின் வரலாற்றை கூறுவது என்பதால் இப்படம் எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. அதனால் இப்படத்தை மேல் நாடுகளுக்கு எடுத்து செல்வதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். பல்வேறு சர்வ தேசப்பட விழாக்களிலும் இப்படத்தை திரையிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்…” என்று குறிப்பிட்டுள்ளது.
கேம்பர் சினிமா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “ராமானுஜன்’ தமிழ்ப் படம் அண்மையில் வெளியாகி, விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டதால், எங்கள் ‘கேம்பர் சினிமா’ நிறுவனம், ‘வான் ரையான்ஸ் என்டர்டைன்மென்ட்’ நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்த ஆங்கிலப் படத்தை சர்வதேச அளவில் வெளியிட முன்வந்திருக்கிறோம். இந்திய வம்சாவளியினர் மட்டுமல்லாது, மேல்நாட்டினரும் இந்தியப் படங்கள் மீது கொண்டுள்ள ஈடுபாடு அதிகமாகிக் கொண்டேயிருப்பதால், இந்த ஆங்கிலப் படத்தை சர்வதேச அளவிலும், அதே வேளையில் இந்தியா முழுவதும் வெளியிடவே இந்த நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம்.
எங்களது இப்படம், ஓர் இந்திய கண்ணோட்டத்துடனேயே ‘ராமானுஜனின்’ வரலாற்றை விவரிக்கிறது. இந்தியாவில் அங்கீகாரம் பெற முடியாமல் அந்தக் கணித மேதை அடைந்த வேதனையையும், தனது தலைவிதியைத் தேடி அவர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணத்தையும் இப்படம் விவரிக்கிறது. பல்வேறு விருதுகள் பெற்ற தொழில்-நுட்பாளர்களையும், நட்சத்திரங்களையும் கொண்டு, கூடியவரை ‘அதிகாரபூர்வமாக’ இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.
‘வான் ரையான்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஒப்பந்தம் காரணமாக, ‘ராமானுஜனின்’ வரலாற்றை உலக முழுவதும் எடுத்து செல்வதுடன், இப்படம் மிகப் பெரும் வெற்றி அடையும் என்றும் நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்…” என்று தெரிவித்துள்ளது.