‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்படங்களை இயக்கிய ஞானராஜசேகரனின் அடுத்த படம்தான் இந்த ‘ராமானுஜன்’.
ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வென்ற ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தற்போது கடைசி கட்டப் பணிகளில் உள்ளது.
ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அதிசயமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜெ.ஹெச்.ஹார்டி என்கிற ஆங்கிலேயே கணிதப் பேராசிரியரால் உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டவர் ராமானுஜன்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் கணித மேதையை அவரது வாழ்க்கையை பெரும்பாலான தமிழர்கள் அறியவில்லை என்பதே வருத்தமான செய்தி. இதனால்தான் ராமானுஜனை நம் நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல விரும்பி இத்திரைப்படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன்.
“ராமானுஜனின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தது. தனது கணித ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ, வழியின்றி அவர் அனுபவித்த இன்னல்கள்.. ஒரு ஜீனியஸை ஜீனியஸாக வாழ விடாமல் அவருக்குக் கஷ்டங்கள் கொடுத்து தங்களைப் போன்ற சாதாரண மனிதனாகவே வைத்துக் கொள்ள துடித்த அவரது உறவுகள்.. இந்த சமூகம்… இதையெல்லாம் எதிர்கொண்டு எப்படி உலகம் புகழும் கணித வல்லுநராக அவரால் பிரகாசிக்க முடிந்த்து என்பதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்..” என்கிறார் ஞானராஜசேகரன்.
உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகிற இந்த ராமானுஜன் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் படம் பிடிக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்திய நடிகர்களுக்கு இணையாக ஆங்கில நடிகர்களும் தமிழிப் பேசி நடித்திருக்கின்றனர்.
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுதான் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த ராமானுஜன் திரைப்படம். ஜெமினிகணேசன்-சாவித்திரி தம்பதியரின் பேரன் அபினய்தான் ராமானாஜுராக இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பவர்.
அவரது தாயாராக சுஹாசினி மணிரத்னம் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு கேரியரில் மேலும் ஒரு முக்கியப் படமாக இது இருக்கும். மலையாள, கன்னட படங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் பாமா, இதில் ராமானுஜனின் மனைவியாக நடித்திருக்கிறார்.
மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ராதாரவி, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரத்பாபு, அப்பாஸ், டெல்லி கணேஷ், மனோபாலா, கிட்டி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பிரபல தமிழ் நடிகர்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
வி.ஹெச்.ஹார்டியாக பிரபல ஆங்கில நாடகம் மற்றும் சினிமா நடிகர் கெவின் மெக்கோவன் நடிக்கிறார். லிட்டில் வுட் என்கிற மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மைக்கேல் லீபர் என்பவரும், மதராஸ் போர்ட் டிரஸ்ட் சேர்மனாக ரிச்சர்டு வால்ஷ் என்பவரும், மற்ற முக்கிய கேரக்டர்களில் லிசி பார்ன், லிடியா ஸ்வான், மைக் பாரிஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் இந்தியாவையும், இங்கிலாந்தையும் கண் முன்னே கொண்டு வரும் ஆடைவடிவமைப்பை சகுந்தலா ஞானராஜசேகரனும், கலை இயக்கத்தை கிருஷ்ணமூர்த்தியும் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநியாகம் ராமானுஜனின் காலத்தில் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை மட்டுமே உபயோகித்து பியூஷன் முறையில் வித்தியாசமான இசையை வழங்கியுள்ளார். உன்னி ஜோஸப்பின் கேமிரா பிரமிக்கவைக்கும் வகையில் அந்தக் கால உலகத்தை பதிவு செய்திருக்கிறது.
கேம்பர் சினிமா நிறுவனத்தின் மூலம் நான்கு இளைஞர்களாகிய ஸ்ரீவத்சன் நடத்தூர், சரண்யன் நடத்தூர், சுஷாந்த் தேசாய், சிந்து ராஜசேகரன் ஆகிய நால்வர் இப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர்.
தமிழில் வழக்கமான பொழுதுபோக்கு சினிமாக்களுக்கு மத்தியில் வரலாற்று ஆவணங்களை படமாக காட்சியளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஞானராஜசேகரன் போன்ற இயக்குநர்களை பாராட்டத்தான் வேண்டும்..! அவருடைய இந்தப் படமும் உலக அளவில் பேசப்படும் படமாக வரும் என்பதில் சந்தேகமில்லை..!