full screen background image

ராமம் ராகவம் – சினிமா விமர்சனம்

ராமம் ராகவம் – சினிமா விமர்சனம்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை சொல்வதற்காக வந்திருக்கும் படம் இது. தமிழ் சினிமாவில் தந்தை மகன் பாசத்தை கொட்டுகின்ற படங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் ‘தவமாய் தவமிருந்து’ படத்திற்கு பிறகு நம் மனதை தொடுவதைப் போல வந்திருக்கும் படம் இந்த ‘ராமம் ராகவம்’.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து படத்தை எழுதி இயக்கியிருக்கும் தன்ராஜ் கொரோனேனி தெலுங்கு சினிமாவில் நம்முடைய சூரியைப் போன்ற ஒரு அந்தஸ்துள்ள நடிகர். அனைத்து பெரிய மாஸ் நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஆனாலும் அவ்வப்பொழுது தன்னை முன்னிலைப்படுத்திய படங்களிலும் நடிப்பார். அதுபோன்று இவருடைய நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம்தான் இந்த ராமம் ராகம்.

கடலூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக இருக்கும் சமுத்திரக்கனியின் ஒரே மகன் தன்ராஜ். ஒரே மகன் என்பதால் மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தாலும் கண்டிப்புடன்தான் வளர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் விதி விளையாடிவிட்டது. தன்ராஜ் இப்போது எந்த வேலைக்கு போகாமல் குடிப்பது, ஊர் சுற்றுவது என்று அப்பாவுக்கு பிடிக்காத பல விஷயங்களையும் செய்து கொண்டு கிட்டதட்ட வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக திரிகிறார்.

இவரை திருத்துவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்த சமுத்திரக்கனி, அது முடியாமல் போக எக்கேடுகெட்டு போகட்டும் என்று சொல்லி தன்ராஜூக்கு தண்ணி தெளித்துவிட்டார்.

இந்த நேரத்தில் தன்ராஜின் நெருங்கிய நண்பன் ஒரு உணவகம் வைக்கலாம் என்று நினைத்து தன்னுடைய அப்பாவிடம் பத்து லட்சம் ரூபாயை வாங்கி ஆரம்பிக்க போவதாக சொல்கிறார் அதே பிசினஸில் இன்னொரு பத்து லட்ச ரூபாயை தன்னுடைய அப்பாவிடம் இருந்து வாங்கி நண்பனிடம் கொடுத்து அதே பிசினஸில் ஜாயிண்ட் புரமோட்டராக சேர்வதற்கு தன்ராஜூம் பிளான் செய்கிறார்.

சமுத்திரக்கனியும் தன்னுடைய மகன் நல்லா இருக்கட்டும் என்பதற்காக பத்து லட்ச ரூபாயை கொடுத்து அனுப்புகிறார். ஆனால் கிரிக்கெட் புக்கிங்கில் அந்தப் பணத்தை போட்டு ஒரு நிமிடத்தில் மொத்த பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார் தன்ராஜ்.

இதனால் ஆவேசமாகும் சமுத்திரகனி மகனை வெறுத்து ஒதுக்குகிறார். விட்ட பணத்தை எடுப்பதற்காக அப்பாவின் கையெழுத்தை போர்ஜரி செய்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒரு பார்ட்டிக்கு உதவி செய்ய 10 லட்ச ரூபாயை வாங்குகிறார் தன்ராஜ்.

இந்த விஷயம் தெரிந்து சமுத்திரக்கனி தன் மகனை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். இந்தக் கோபத்தில் தன்ராஜ் தன்னுடைய தந்தையை கொலை செய்ய பிளான் செய்கிறார். தந்தையோ தன் மகன் எப்படியாவது என்னிடம் திருந்தி வருவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்த இருவரில் யார் நினைத்தது நடந்தது என்பதுதான் இந்த படத்தின் சுவையான திரைக்கதை.

அப்பா நன்றாக நடித்து இருக்கிறாரா… மகன் நன்றாக நடித்து இருக்கிறாரா என்று நிச்சயமாக ஒரு பட்டிமன்றமே நடத்த வேண்டும். அந்த அளவுக்கு அப்பா சமுத்திரக்கனியும், மகன் தன்ராஜும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

நேர்மையின் மறு உருவமாக இருக்கும் சமுத்திரகனியின் அந்த அலுவலகம் தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் ஒரு பக்கா ஜென்டில்மேன் ஆஃபீசர் எப்படி நடந்து கொள்வாரோ அதுபோலவே நடந்து நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மகனுக்கு புத்தி சொல்லியும், மனைவியை சமாதானம் செய்தும் குடும்பத்தை நடத்துவதற்கு இவ்வளவு கஷ்டப்படும் குழப்பத்தை… ஒரு குடும்பத் தலைவனின் மன வலியையும் ஒரு அப்பாவின் இயலாமையையும் தன் நடிப்பினால் கச்சிதமாக காட்டி இருக்கிறார் சமுத்திரக்கனி.

இவரைப் போலவே மகனாக நடித்த தன்ராஜூம் தன்னுடைய நடிப்பில் ஒரு சதவீதம்கூட குறை வைக்காமல் நடித்திருக்கிறார். தான் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவர் புரிந்து கொள்ளாமல், தன் அப்பா தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்றும் தான் கஷ்டப்படாமல் ஜாலியாக இருப்பதற்கு அப்பா எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் இன்னொரு டைப்பாக யோசித்து அப்பாவுக்கு கெடுதல் மேல் கெடுதல் செய்து கொண்டே இருப்பது… ஒரு கெட்ட பையன் எப்படி இருப்பான் என்பதற்கு மிகப் பெரிய உதாரணத்தை இந்த படத்தில் தன்னுடைய நடிப்பால் கட்டியிருக்கிறார் தன்ராஜ்.

தன்ராஜின் வெட்டி ஆபீஸர் நிலைமையிலும் அவருக்குள் காதல் உணர்வை உண்டாக்கும் அளவுக்கு எதிர்வீட்டுக்குக் குடி வரும் மோக்சாவின் அழகு இருக்கிறது. மென்மையாக, மிக அழகாக தனது மறுப்பைத் தெரிவித்தாலும், அந்தக் குடும்பத்தின் மீது அக்கறையும், பாசத்தையும் காட்டும் மோக்சாவின் நடிப்பும் ஓகே ரகம்தான்.

அம்மாவாக நடித்த பிரமோதினி, அப்பா மகன் இருவருக்கிடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி குடும்ப தலைவியாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சமுத்திரக்கனியையும் மிஞ்சியவராக தன்னுடைய மகனை கேள்வி இன்னொரு கேள்வி கேட்டு அடித்துவிட்டு அழுகின்ற காட்சியிலும், மகன் காணாமல் போய்விட்டதாக நினைத்து இரவு முழுவதும் தவியாய் தவிக்கின்ற போதும் இந்தப் பெண்களுக்கு குடும்பச் சிறையில் இருந்து எப்போதுதான் விடுதலை கிடைக்கும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வதுபோல அவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது.

மற்றும் இந்த படத்தில் நடித்திருக்கும் தன்ராஜ் நண்பனாக நடித்தவர் சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். லாரி டிரைவராக நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமனின் வில்லத்தனமான நடிப்பு சூப்பர்ப். முதலில் தயங்கிவிட்டு பின்பு தனது லாரி ஓனர் என்ற லட்சியத்தை அடைவதற்காக கொலை செய்யத் தயாராகியிருக்கும்  நிலையில் இவரது நடிப்பு நம்மையும் பதட்டமடைய வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சுனில் ஒரு கொடூரமான வில்லன் என்பதை சில காட்சிகளை காட்டினாலும் இறுதியாக பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என்று நேரில் வந்து சொல்லும் தன்ராஜை புரிந்து கொண்ட மனிதராக அன்பாக பேசும்போது நமக்கே அவரைப் பிடித்துப் போகிறது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் துர்கா கொல்லி பிரசாத் மிக அழகான ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். மிடில் கிளாஸ் படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவு என்றாலும் தரம் சிறிதும் குறையவில்லை என்று சொல்லலாம். இசையமைப்பாளர் அருண் பாடல்களைவிடவும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். சோகமான காட்சிகளில் சோகத்தை மட்டுமே நம் மனதில்  நிலைக்க வைத்திருக்கிறது அவரது பின்னணி இசை.

எல்லா மகன்களையும் போலவே தன் மகனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு பக்கம். அவர் நினைப்புக்கு மாறாக வாழ்க்கை அமைந்துவிட்டால் அந்த மகன்கள் எந்த அளவுக்குக் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் அந்த மகன்கள் அப்பாவின் பாசத்தை தெரிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் சித்தன் போக்கு சிவன் போக்காகப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்தப் படத்தின் திரைக்கதையில் தன்ராஜ் மூலமாக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தை குடும்பத்தோடு சேர்ந்து பார்த்தால்தான் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அப்பா எதற்கு? அம்மா எதற்கு? பிள்ளைகள் எதற்கு? என்கின்ற அந்தக் குடும்ப கட்டமைப்பு புரியும். அதனால் இந்தப் படத்தை அனைவரும் கண்டிப்பாக குடும்பத்தோடு தியேட்டரில் சென்று பார்த்து ரசித்து வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையின் அருமையையும் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 4 / 5

Our Score