full screen background image

மது, புகை காட்சிகளுடன் படம் வெளிவந்தால் போராட்டம்-டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு..!

மது, புகை காட்சிகளுடன் படம் வெளிவந்தால் போராட்டம்-டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு..!

சமீப காலமாக திரைப்படங்களில் மது அருந்துதல் மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவே இருக்கிறது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

Ramadoss

உலகின் தலைசிறந்த அறிவாயுதங்களில் ஊடகமும் ஒன்றாகும். ஊடகக் குடும்பத்தின் வலிமையான உறுப்பினரான திரைப்படங்கள் ஏற்படுத்தும் சமூக சீரழிவுகள் அண்மைக் காலமாக அதிகரித்து விட்டன. இளைஞர்களை தவறான வழிக்கு திருப்புவதில் திரைப்படங்கள்தான் முக்கியப் பங்காங்காற்றுகின்றன.

தமிழ் திரைப்படங்களில் அண்மைக் காலமாக வன்முறைக் காட்சிகளும், புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளும் அதிகரித்துவிட்டன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் அடிக்கடி புகை பிடிப்பது போன்றும், மது அருந்தி விட்டு நடனமாடுவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் பெற்றோராலும், மற்றவர்களாலும் அவமதிக்கப்படும்போது, அதனால் ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்கான ஒரே தீர்வு மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும்தான் என்ற நச்சுக் கருத்து அந்த திரைப்படத்தின் மூலம் மறைமுகமாக பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ ஒரு கோடி இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்த திரைப்படம் காட்டும் வழியை பின்பற்றத் தொடங்கினால் இளையதலைமுறையின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் எழுகிறது. ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படமும் மது மற்றும் புகையை போற்றும் வகையில்தான் உள்ளது.

பொதுவாகவே இப்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் நாயகன், நாயகி இருவரும் இணைந்து மது அருந்துவதைப் போலவும், செயற்கரிய செயல்களை செய்து விட்டால் அதைக் கொண்டாட ஒரே வழி மதுவும், புகையும் பிடித்தபடியே நடனமாடுவதுதான் என்பது போன்றும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. காட்சிக்கு தேவையே இல்லாவிட்டாலும்கூட 90 சதவீதம் திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் இடம் பெறுகின்றன.

மது அருந்தி, புகை பிடிப்பது சாகசம் என்பது போன்ற கலாச்சாரம் திட்டமிட்டு திரைப்படங்களில் திணிக்கப்படுகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ மது, புகை விளம்பரம் செய்ய முடியாத அதன் உற்பத்தியாளர்கள் திரைப்படங்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் தயாரிப்புகளை இளைஞர்களிடம் கொண்டு செல்கின்றனர். அவர்கள் வீசி எறியும் பணத்திற்கு அடிமையாகி திரைத்துறையினரும் இச்சமூக, கலாச்சார சீரழிவுக்கு துணை போகின்றனர்.

பா.ம.க.வைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, திரைப்படங்களில் மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது முயற்சியின் பயனாக திரைப்படங்களில் புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இடம்பெறும்போது அதன் தீமையை விளக்கும் எச்சரிக்கை வாசகம் காட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

மருத்துவர் அன்புமணி ராமதாசுவின் அறிவுரையை ஏற்று ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இளைஞர்களை சீரழிக்கும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்னும் சில நடிகர்கள் இத்தகைய காட்சிகளில் நடிப்பதும், எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தகைய காட்சிகளை காட்டலாம் என சமூக பொறுப்பின்றி செயல்படுவதும் தொடர்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகை பிடிப்பதால் 10 லட்சம் பேரும், மது அருந்துவதால் 18 லட்சம் பேரும் உயிரிழக்கிறார்கள். புகைப்பிடிக்கும் இளைஞர்களில் 52.2 சதவீதம் பேர் திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் புகைக்கும் காட்சிகளைப் பார்த்துதான் புகைப்பழக்கத்திற்கு ஆளானதாக ‘லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உணராமல் தங்களின் வருமானத்திற்காக மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்து இளைஞர் சமுதாயத்தை, திரைத்துறையினர் தொடர்ந்து சீரழித்து வருவதை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது.

சில தரப்பினரால் சித்தரிக்கப்படுவதைப் போன்று நான் திரைப்படங்களுக்கு எதிரானவன் கிடையாது. நல்ல திரைப்படங்களை ரசிப்பேன்; பாராட்டுவேன். ஏற்கனவே நான் கூறியதைப் போன்ற வலிமையான அறிவாயுதமான திரைப்படங்கள் சமுதாய நலனுக்காக பாடுபட வேண்டும். கப்பலோட்டியத் தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள்தான் தமிழர்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வையும், வீரத்தையும் விதைத்தன. இத்தகைய சக்தி மிகுந்த திரைப்படம் என்ற ஆயுதத்தை சமுதாய சீரழிவுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

எனவே, இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மது அருந்தும் காட்சிகள் மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளுடன் படம் எடுப்பதை திரைத்துறையினர் தவிர்க்க வேண்டும். அதை மீறி புகைக்கும் மற்றும் மது குடிக்கும் காட்சிகளுடன் திரைப்படங்கள் வெளியானால் அவற்றை எதிர்த்து பா.ம.க. மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Our Score