full screen background image

25 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வரப் போகும் ரஜினியின் திரைப்படம்..!

25 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வரப் போகும் ரஜினியின் திரைப்படம்..!

இந்தாண்டு 2021 தீபாவளி தினம் யாருக்கு முக்கியமோ இல்லையோ.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிக முக்கியமான நாளாகும்.

1995-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்றுதான் கவிதாலயா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முத்து’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

அதற்குப் பிறகு கடந்த 24 ஆண்டுகளாக ரஜினியின் எந்தப் படமும் தீபாவளியன்று திரைக்கு வரவேயில்லை.

இப்போதுதான் 25 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக மீண்டும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறார் ரஜினி.

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம்தான் இந்தப் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.

‘முத்து’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மீனா, இப்போது இந்த அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதுதான் இரண்டு படங்களுக்கும் உள்ள ஒரு சின்ன பொருத்தம்.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்களாம்.

ஒருவேளை இதுவும் முடியவில்லையென்றால் மொத்தமாக ரஜினியை வைத்து எடுக்க வேண்டுமென்றால் கொரோனா முழுமையாக வீழ்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது சன் பிக்சர்ஸின் எண்ணமாக இருக்கிறது.

இப்போதே தினமும் கொரோனா பலி 2-க்கு வந்துவிட்டது. பலியே இல்லாத நாட்கள் உருவானால்தான் நம்பிக்கை வைத்து ரஜினி வெளியில் வருவார் என்கிறார்கள்.

இதற்கிடையில் மே மாத தேர்தலின்போது வாக்களித்துவிட்டு அப்படியே அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை பெறவும் ரஜினி தயார் நிலையில் இருக்கிறார். அதற்கு முன்பாகவே அவர் அமெரிக்கா சென்றாலும்கூட தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக தமிழகம் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்பு சாவகாசமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து மிக மெதுவாக வேலைகள் செய்தால்கூட அக்டோபர் மாதம் படத்தின் முதல் காப்பியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அண்ணாத்த’ டீம் தற்போது மிகுந்த ரிலாக்ஸ்டாக இருக்கிறது..!

Our Score