full screen background image

கமல்ஹாசனுக்குக் கிடைக்காதது எனக்குக் கிடைச்சிருக்கு – ரஜினி பேச்சு..!

கமல்ஹாசனுக்குக் கிடைக்காதது எனக்குக் கிடைச்சிருக்கு – ரஜினி பேச்சு..!

நேற்று சனிக்கிழமை, ஹைதராபாத்தில் ‘கோச்சடையான்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘விக்ரமசிம்ஹா’வின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் இயக்குநர்கள் தாசரி நாராயணராவ், ராஜமெளலி, நடிகர் மோகன்பாபு, நடிகை லட்சுமி மஞ்சு, திரைப்படத் தயாரிப்பாளர் டி.இராமாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதில் இருந்து சில பகுதிகள் இங்கே : 

“என்னுடைய உடல்நிலை சீரான பின்பு ராஜமெளலியின் ‘பாகுபாலி’ மாதிரி எடுக்கணும்னு நினைச்சு ’ராணா’வை ஆரம்பிச்சோம். ஆனா தொடர முடியலை. முன்னாடி ‘ரோபோ’ செஞ்சோம். அது சயின்ஸ் பிக்சன்.. அதுக்கும் முன்னாடி ‘சிவாஜி’.. அதுவொரு அரசியல் படம். ‘சந்திரமுகி’ பேய்ப் படம்.. ‘பாபா’ கடவுள் படம். கடவுள் படம் ஓடலை. ஆனா பேய்ப் படம் ஓடுச்சு.. ஸோ.. நான் ஒரு நடிகன் அவ்வளவுதான்.. ஆனால் நல்ல கதாசிரியர் இல்லை.

உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச ரகசியம் கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். ஆனால் நானோ தொழில் நுட்பமான பெயர்களை வைச்சு அந்தப் படங்கள்ல நடிச்சிட்டிருருக்கேன்.. ‘ரோபோ’, ‘விக்ரமசிம்ஹா’ மாதிரி.. இதெல்லாம் கடவுளோட விளையாட்டு. கமல்ஹாசன் டெக்னிக்கல்ல ரொம்ப ஆர்வமானவர். அவர் சினிமாவுக்குள்ள வந்ததே டைரக்டராகணும்னுதான்.. ஆனால் அவர் மாதிரி டெக்னாலஜி தெரிஞ்சவர்.. அதுல ஆர்வமுள்ளவங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்காமல் எனக்குக் கிடைச்சிருக்கு.. அதுனால மனுஷன் ஒண்ணு நினைக்கலாம். இது மாதிரி செய்யலாம்னு. ஆனா ஆண்டவன் வேறொரு திட்டம் போடுவான்..

ரெண்டு வருஷமா எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காங்க இந்த ‘கோச்சடையான்’ படம் பத்தி இது ‘ராணா’ படம்தான்னு.. முரளி சொன்னார்.. ‘டாக்டர்ஸ் ரெண்டு வருஷத்துக்கு நீங்க படங்கள்ல நடிக்க்க் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் எப்படி நீங்க நடிக்க முடியும்’ன்னு..? ‘ராணா’வை விட்டப்புறம் என்ன செய்யப் போறேன்னு தெரியாம.. எனக்கும் ரொம்ப ஆச்சரியமாத்தான் இருந்தது.

‘சுல்தான் தி வாரியர்’ படம் செய்யும்போது இந்த மோஷன் கேப்ஷன் டெக்னாலஜி அதுல இல்லை. இப்போ இப்படியொரு டெக்னாலஜில செளந்தர்யா டைரக்டர் பண்ணாங்கன்னா அதுக்கு நான் ஒத்துக்குவேன்னு தயாரிப்பாளர்ல இருந்து எல்லாருமே நம்புனாங்க. ஆனா எனக்கோ, செளந்தர்யா இதை எப்படி செஞ்சு முடிப்பாங்கன்னுதான் ரொம்ப திகைப்பா இருந்துச்சு.. ஏன்னா இது ரொம்ப வருஷம் இழுக்கும். நிறைய பணம் செலவாகுமேன்னு முதல்ல சந்தேகப்பட்டேன்.

ஆனா அவங்களோ ‘பக்காவா பிளான் பண்ணியிருக்கோம் ஸார்.. கண்டிப்பா நல்லபடியா முடிக்கலாம்’னு சொன்னாங்க. ஸோ.. ‘இது கடவுளோட வாக்கு’ன்னு நினைச்சு நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன். இந்தப் படம் ரிலீஸான பின்னாடிதான் உங்களுக்கே தெரியும்.. இந்தப் படத்துனால செளந்தர்யா எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்காங்கன்னு.. என் வொய்ப் லதா இந்தப் படத்துக்காக என்னையும், செளந்தர்யாவையும் ரொம்பவே ஊக்கப்படுத்தியிருக்காங்க. இந்தப் படம் ஜெயிச்சவுடனே என் மனைவி லதாவை கெளரவப்படுத்தணும்னு நான் நினைச்சிருந்தேன். பட்.. மோகன்பாபு.. என் நண்பன். என் சகோதரன் மாதிரி.. இங்கே அந்த வேலையே அவனே செஞ்சுட்டான்.. அவனுக்கு எனது நன்றி..

இந்தப் படம் சென்சார் முடிஞ்சிருச்சு. படத்தை நானும் பார்த்திட்டேன். 3-டி வெர்ஷனை நான் இன்னமும் பார்க்கலை. 2-டி வெர்ஷனை மட்டும்தான் பார்த்தேன்.  நான் நடிச்ச படமா நினைச்சு இதைப் பார்க்கலை. ஒரு சினிமா ரசிகனாத்தான் பார்த்தேன். முதல் பத்து நிமிஷத்துல எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்தது.. அடுத்த 15 நிமிஷத்துல.. கதைக்குள்ள நாம போனதுக்கப்புறம் நீங்க இந்தப் படத்தை ஒரு அனிமேஷன் படம்ன்றதையே மறந்திருவீங்க.. ஏன் நான் இதைச் சொல்றேன்னா.. முதல் 10 நிமிஷம் எனக்கு வந்த உணர்வுதான் உங்களுக்கும் நிச்சயம் வரும்..

ஏ.ஆர்.ரஹ்மான் இதே மாதிரியான ஒரு அனிமிஷேன் படத்தை வால்ட் டிஸ்னிக்காக பண்ணிக்கிட்டிருக்கார். அது முடியறதுக்கே ஆறு, ஏழு வருஷமாயிரும்னு சொன்னாரு. அதுனால ‘இந்த மாதிரி படத்துல பாடல் காட்சிகளை வைத்து மியூஸிக், டான்ஸுன்னு கோச்சடையான் என்ற வீரனை மாத்திக் காட்டினா நல்லாயிருக்கும்’ன்னாரு. இந்தப் படத்துல என் மனைவி லதா ஒரு பாடலை ரொம்ப நாள் கழிச்சு பாடியிருக்காங்க. நானும் ஒரு பாடலை பாடியிருக்கேன். ஸோ.. இதுவொரு நல்ல இசையுடன் சிறந்த கதையுடன் கூடிய சினிமா. கடவுளின் கிருபையாலும் உங்களுடைய நல்ல எண்ணத்தினாலும், உற்சாகத்தினாலும் இந்தப் படம் நிச்சயமா பெரிய அளவுக்கு ஹிட்டாகும்னு எனக்கு நம்பிக்கையிருக்கு.

டாக்டர் முரளி ஸாருக்கு எனது சல்யூட்.. அவர் சினிமா துறைல நிறைய அனுபவமிக்கவர். ரொம்ப ஈஸியா பல கோடிகளைச் சம்பாதித்தாலும் இந்தத் துறைல முன்னணில நிக்குறவர். ஹாலிவுட் வட்டாரத்தில் பல நண்பர்கள் அவருக்கு இருக்காங்க. ‘பிளட் ஸ்டோன்’ என்ற இங்கிலீஷ் படத்துல நான் இவரோட வொர்க் பண்ணியிருக்கேன். ராஜமெளலி பேசும்போது இது மாதிரியான படங்களை செய்வது எத்தனை கஷ்டம்ன்னு சொன்னாரு. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்பு மிகப் பெரிய சக்ஸ்ஸ் பங்ஷனை நடத்தப் போறோம்..

ஒவ்வொரு தடவையும் தெலுங்கு ரசிகர்களுக்கு எனது நடிப்போ, அல்லது எனது ஸ்டைலோ எது பிடித்தாலும் அதை ஊக்குவிச்சு பாராட்டியிருக்காங்க. இந்தப் படமும் அதே மாதிரியான ஒரு வித்தியாசமான படம். இதுக்கும் அவர்கள் பெரிய அளவுக்கு ஆதரவு கொடுப்பாங்கன்னு நிச்சயமா நம்புறேன். அதுக்கேத்த படமாவும் இது இருக்கும்..! அனைவருக்கும் நன்றி..!”

Our Score