full screen background image

“பட வியாபாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்…” – விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..!

“பட வியாபாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்…” – விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..!

சிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி ஜோடியாக நடிக்கும் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை தி.நகரில் இருக்கும் சிவாஜியின் வீடான ‘அன்னை இல்ல’த்தில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

neruppuda-audio-stills-26

அவர் பேசும்போது, “நடிகர் திலகம் சிவாஜியை நான் முதன்முதல்லா 1978-ல் ‘நான் வாழ வைப்பேன்’ படத்தின்போதுதான் சந்தித்தேன். அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் அவர் எனக்கு போன் செஞ்சார். ‘இன்னிக்கு உனக்கு ஷூட்டிங் இருக்கா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்றேன். ‘அப்ப சரி.. என் வீட்டுக்கு வா.. இன்னிக்கு நம்ம வீட்ல பிரியாணி விருந்து இருக்கு..’ என்றார்.

அப்போதுதான் முதல்முறையா இந்த வீட்டுக்கு நான் வந்தேன். அப்போது இந்த வீட்டில் இருநூறு பேருக்கும் மேல் இருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் இப்படி குடும்பத்துடன் சாப்பிடும் பழக்கம் இந்தக் குடும்பத்தில் இருந்தது.

நான் சிவாஜியின் தீவிர ரசிகன். ‘அண்ணாமலை’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, அந்த படத்தின் இரண்டாவது பகுதியில் சிவாஜி கணேசனை மனதில் வைத்து அவரைப்போல் நடிக்கும்படி என்னிடம் கூறினார். நானும் சிவாஜி இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்தே நடித்தேன். ‘அண்ணாமலை’ வெளியானதும், அந்த படத்தை பார்த்து விட்டு சிவாஜி கணேசன் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். ‘படையப்பா’ படத்திலும் அவருடன் நடித்து இருக்கிறேன்.

சிவாஜியின் பெயரை காப்பாற்றும் பெரிய பொறுப்பு விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது. ‘கும்கி’ படத்தில் பெரிய நடிகரின் பேரன் என்று இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு நடித்து இருந்ததன் மூலம் தாத்தா பெயரை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நடிகர் பிரபுவும் அற்புதமான மனிதர்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் இங்கு பேசும்போது புதிய படங்கள் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் மூன்று நாட்கள் கழித்து வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். அதை நானும் ஆமோதிக்கிறேன்.

நாங்கள் படம் எடுக்கிறோம். அதை விமர்சிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. விமர்சனங்களில் வார்த்தைகள் முக்கியம். ஒருவரை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டுவிட்டு ‘நல்லா சாப்பிடு’ என்று அன்பாகவும் சொல்லலாம். எரிச்சலோடும் சொல்லலாம்.  

குழந்தை இல்லாத ஒரு ராஜா கோவில் குளமெல்லாம் சுற்றினான். நீண்ட காலத்துக்கு பிறகு அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜோதிடர்களை அழைத்து ஜாதகம் பார்த்தான். எல்லா ஜோதிடர்களும் ‘இந்த குழந்தையால்தான் உனக்கு மரணம்’ என்றார்கள். அவர்களை ஜெயிலில் அடைத்தான்.

கடைசியாக ஒரு ஜோதிடர் வந்து ‘இந்த குழந்தை உன்னைவிட பெரிய ராஜாவாக வருவான். பல மடங்கு பெயரும் புகழும் சம்பாதிப்பான்’ என்றான். மன்னன் சந்தோ‌ஷப்பட்டான். யாரையும் காயப்படுத்தாமல் விமர்சனம் செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

சினிமா துறையில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எல்லோரும் அந்தப் படம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நினைக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வியாபாரம் செய்ய விதவிதமான விளம்பரங்களை செய்வார்கள். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த விளம்பரங்களை நம்பி தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் ஏமாந்து அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டமடைந்து பணம் போய் விட்டதே என்று வருத்தப்படும் நிலைமைகள் இருக்கிறது.

தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் படங்களை வாங்குவதற்கு முன்பு அனுபவம் உள்ளவர்களிடம் இந்த படம் நன்றாக ஓடுமா..? வாங்கலாமா..? என்றெல்லாம் ஆலோசனைகள் பெற்று அவர்களின் அறிவுரைப்படி அவற்றை வாங்க வேண்டும்…” என்றார் ரஜினிகாந்த்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர்கள் சிவகுமார், பிரபு, கார்த்தி, சத்யராஜ், தனுஷ், விவேக், சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், சின்னி ஜெயந்த், ஐசரி கணேஷ், டைரக்டர்கள் பி.வாசு, விக்ரமன், சுந்தர்.சி, சேரன், விஜய், பிரபு சாலமன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ஈ.ஞானவேல்ராஜா, கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு, ஏ.எல்.அழகப்பன், ராம்குமார், டி.சிவா, ஆர்.பி.சவுத்ரி, எடிட்டர் மோகன், இசையமைப்பாளர் சீன் ரோல்டன், எம்.பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், அருள்பதி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Our Score