full screen background image

“சோனாக்சிகூட டூயட் பாடினதுதான் கஷ்டமா இருந்துச்சு..” – சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஸ்வீட் பேச்சு..!

“சோனாக்சிகூட டூயட் பாடினதுதான் கஷ்டமா இருந்துச்சு..” – சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஸ்வீட் பேச்சு..!

‘லிங்கா’ படத்தின் தெலுங்குப் பதிப்பின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கு படவுலகின் முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ‘லிங்கா’ படத்தின் கலைஞர்களான ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ், முனிரத்னா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன்.குமரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Lingaa Movie Audio Success Meet_25

‘லிங்கா’ விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேச்சு :

“புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாட்களுக்கு முன்பு இங்கே நடந்த நிவாரண நிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னால வர முடியலை. அப்போது எங்களது குடும்பத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியால வர முடியாமல் போய்விட்டது. அதற்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும். சென்னைக்குப் போன பிறகு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னோட நிதியுதவியை வழங்க இருக்கிறேன்.

சுமார் நான்கு வருடங்கள் கழித்து நான் நடித்திருக்கும் ‘லிங்கா’ படம் வெளி வரப் போகிறது. நடுவில் வந்த ‘கோச்சடையான்’ அனிமேஷன் படம், அதனால், நான் நேரடியாக நடித்து வெளியாகவிருக்கும் அடுத்தப் படம் ‘லிங்கா’தான்.

ஆறு மாதத்திற்குள் இந்த மாதிரியான ஒரு மிகப் பெரிய படத்தைக் கொடுக்கிறது நடக்க முடியாத ஒரு விஷயம். பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய டெக்னீஷயன்கள் பங்கு பெற்றிருக்கிற படம்ன்ற அர்த்தத்துல சொல்லலை. இந்தப் படத்தோட கதை பெரியது.. இந்தப் படத்தோட பின்னணியும் பெரியது. சுதந்திரத்துக்கு முன்னாடி 40-கள்ல நடக்கிற கதை. கூடவே இப்போதைய காலக்கட்டத்துல நடக்கிற கதையும் உண்டு.

ஒரு மிகப் பெரிய அணை கட்டுவதை பற்றிய கதை.. டிரெயின் சண்டை காட்சிகள், யானைகள், குதிரைகள்.. 60, 70 காட்சிகள் படத்தில் இருந்தால், அதில் 40 காட்சிகள்ல 1000 பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட  காலத்துக்குள்ள இந்தப் படத்தை முடிச்சிருக்கோம்னா, அதுக்கு இயக்குநர் ரவிக்குமார், அவரோட யூனிட் மற்றும் தயரிப்பாளர் ஆகியோர்தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை. ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம். ஆனால், டெக்னீஷியன்ஸ்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டாங்க.

Lingaa Movie Audio Success Meet_26

இந்தப் படத்துல மூணு ஆச்சரியங்கள் இருக்கு. முதல் ஆச்சரியம் டெக்னீஷியன்கள். ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபு சிரில், அனுஷ்கா, சோனாக்ஷி.. அவ்வளவு பேருமே ரொம்ப பிசியானவங்க.

இரண்டாவது ஆச்சரியம். இந்தப் படத்தோட கதை தன்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணு படிச்சேன். ‘ரஜினி படத்துல கதை இருக்கா..? அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் ,அதை நாலு பேரு அவங்க கதைன்னு சொன்னாங்கன்னா.. நான் போய் அந்தப் படத்தை முதல்ல பார்க்கிறேன்’னு ஒருத்தர் எழுதியிருந்தாரு.

உண்மையிலேயே இந்தப் படத்துல மிகச் சிறப்பான கதை இருக்கு. அந்த நாலு பேரோட கதை இல்லை இது.. இந்தப் படத்தோட கதை பொன்.குமரனுடையது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை. இது மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக் கிடைச்ச பாக்கியம்.

மூணாவது ஆச்சரியம் என்னன்னா… நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். சண்டைக் காட்சிகள்ல நடிச்சதை சொல்ல்லை.. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி அதெல்லாம்கூட இல்லை. இங்க இருக்கிற அனுஷ்கா, சோனாக்சியோட டூயட் பாடினதுதான் அந்தக் கஷ்டம்.

சத்தியமா சொல்றேன், சோனாக்சிகூட டூயட் பாடினதெல்லாம் ரொம்ப ரொம்பக் கஷ்டம். சின்னக் குழந்தையா இருக்கும்போது சோனாக்சியப் பார்த்தது. என் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாகூட வளர்ந்தவங்க. அவங்ககூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வேர்த்துக் கொட்டிடுச்சி. என் முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல நடித்தபோதுகூட இந்த அளவுக்கு டென்ஷன் இருந்ததில்லை. கடவுள் நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம்.

கேமராமேன் ரத்தினவேலுகூட ‘நான் ரஜினிகாந்தை ரொம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்’னு சென்னையில நடந்த இசை விழால வெளிப்படையா சொன்னாரு. நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. ‘ஒரு சீனியர் நடிகரா சினிமாவுக்கு நீங்க என்ன தர்றீங்க?’ன்னு கேட்டால், ‘குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரித்து கொடுத்திருக்கேன்’னு சொல்வேன்.

ஹாலிவுட்லகூட பெரிய, பெரிய படங்கள் வருது. அங்கெல்லாம் ஒரு படம்  ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் டிரெயினிங் எடுத்துக்குவாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நான்கைந்து மாதங்களில் படத்தையே முடிச்சிருவாங்க. அதை இங்கேயும் செய்யலாம்.

ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான படம். அது இரண்டு பாகமா எடுக்கப்படும் படம், அதை நான் பார்த்திருக்கேன், இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனரா வருவாரு. தெலுங்கு  மக்கள் எல்லாருக்கும் அந்தப் படம் மிகப் பெரிய கௌரவம். நான் வெளிப்படையா சொல்றேன்.. ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பா நடிப்பேன்.

இயக்குநர் ரவிகுமார் இந்தப் படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு. கேமிராமேன் ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப் படத்தை எடுக்கக் காரணமா இருந்தாரு. அனுஷ்கா, சோனாக்ஷி,  அப்புறம் ஜெகபதிபாபு. திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன். அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன்.

இந்தப் படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும். தமிழ் மக்கள் என் படத்தைப் பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதே மாதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப் படத்துக்கும் அதே மாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன்.

தயாரிப்பளார் அல்லு அரவிந்த், ‘அடுத்த படம் எப்ப?’ன்னு கேட்டாரு, ‘கதை இன்னும் ரெடியாகலை’ன்னு சொன்னேன். முதல்ல சிரஞ்சீக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்ப நாளா அவர் காத்திட்டிருக்காரு. இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெறும்னு நம்பறேன்.

நன்றி.

Our Score